Saturday, 18 December 2021

பாபர் பிறந்த கதை-வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா

ஒருநாள் மங்கோலிய நாட்டின் மத்திய பகுதியில் உள்ள அடர்ந்த வனத்தின் மேலாக போகரும் அவரது சீடரான புலிப்பாணியும் காயகல்ப்ப மூலிகைகளைத்தேடி குரும்பாசி மலைநோக்கி ஆகாயமார்க்கமாகச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அக்காட்டில் எங்கோ இருந்து பெண்ணொருத்தியின் அவலமான கதறல் ஓசை அவர்களுக்குக்கேட்டது. ஆனால் அதனைக் கண்டுகொள்ளாமல் போகர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

இதனைக் கண்ட புலிப்பாணி "குருவே இந்த வனத்தில் எங்கோ இருந்து ஒரு பெண்ணின் அவலக்குரல் கேட்கிறது, நிச்சயமாக அது உங்களுக்கும்  கேட்கும், ஆனால் அதுபற்றி கவனிக்காததுபோல் செல்கிறீர்களே ஏன்?" என்று கேட்டார். அதற்கு போகர், "நாம் செல்வது உலகமக்களை உய்விக்கும் காயகல்ப்ப மூலிகைகளைத்தேடி, இடையில் மனத்தைக் குழப்பும் எந்த செயலையும் நோக்காதே வா" என்று சொல்லிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால் அந்த அவலக்குரல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. அதனால் போகரை இடைமறித்த புலிப்பாணி "குருவே இந்த அடர்ந்த காட்டில் எமக்குக் கேட்கும் குரல் ஆபத்தில் உதவிவேண்டிய யாரோ ஒருபெண்ணின் குரலே, நாம் அதனைக்கேட்டும் கண்டுகொள்ளாமல் செல்வது சரியல்ல என்னவென்று பார்ப்போம் வாருங்கள்" என்று வலிந்து அழைத்தார். போகரோ பலமுறை வேண்டாம் என்று மறுத்தும் வலுக்கட்டாயமாக அந்த அவலக்குரல் வந்த இடத்தைநோக்கி புலிப்பாணி அழைத்துச் சென்றார்.

அவலக்குரல் வந்த திசையில் வந்தவர்கள் வனத்தின் எல்லையை அடைந்தார்கள், அவர்கள் சென்றபோது அங்கே ஒரு பெண்ணைக் காடையர்கள் சிலர் வன்புணர்வு செய்துகொண்டிருந்தார்கள். காடையர்களால் வன்புணர்வு செய்யப்படும் பெண்ணே உதவி வேண்டி அவலக்குரலை எழுப்பிக்கொண்டிருந்தாள். இதனைக் கண்ட புலிப்பாணி போகரைநோக்கி "குருவே காடையர்களிடமிருந்து அந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றுவோம்" என்றார். அதற்குப் போகரோ "எல்லாம் விதிப்படியே நடக்கிறது. நீ எதையும் மாற்ற முயற்சிக்காதே" என்றார். குருவின் இந்த வார்த்தைகளைக்கேட்ட புலிப்பாணிக்கு கடுமையான சினம் வந்தது. என்ன இது கருணையில்லாத வார்த்தை என்று மனதுக்குள் கடிந்து கொண்டார். 

அந்த நேரத்தில் பெண்ணை வன்புணர்வு செய்த காடையர்கள் அவளைக் கொலைசெய்ய எத்தணித்தார்கள். அப்போது புலிப்பாணி மீண்டும் போகரிடம், "குருவே இப்போதாவது வாருங்கள், அவர்கள் அந்தப் பெண்ணைக் கொல்வதற்கு முயற்சிக்கிறார்கள், அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவோம்" என்றார். அப்போதும் போகர் "சிஷ்யா எல்லாம் விதிப்படியே நடக்கிறது. நீ எதையும் மாற்ற முயற்சிக்காதே" என்றார். 

குருவின் வார்த்தைகள் புலிப்பாணிக்கு சினத்தை மேலும் அதிகரித்தது. குருவின் வார்த்தைகள் கருணையற்ற ஒரு கல்நெஞ்சக்காரனின் வார்த்தையாக தோன்றியது. குருவின் வார்த்தைகளை மீறி அந்தப் பெண்ணைக் காப்பதற்காக புலிப்பாணி கீழிறங்கி வெளிப்பட்டுச்சென்றார். அப்போதும் போகர் "சிஷ்யா நீ வரலாற்றை மாற்றுகிறாய்!" என்று எச்சரித்தார். ஆனால் குருவின் வார்த்தைகள் புலிப்பாணிக்கு சினத்தைத்தர அவற்றைப் புறந்தள்ளிவிட்டு அந்தப் பெண்ணைக் காடையர்களிடமிருந்து காப்பாற்றினார். பின் அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக அவளது கிராமத்திற்குள் கொண்டுசென்று சேர்த்துவிட்டுப் பின் குருவுடன் பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது குரு புலிப்பாணியை நோக்கி "வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா" என்றார். குருவின் வார்த்தைகளை அவர் காதுகளில் விழுந்தும் உட்செல்லவில்லை.

(பெயர் தெரியாத "ஆண்டி" ஒருவர் வந்து பெண்ணைக்காத்த ஊர் என்பதால் இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ள அந்த ஊர்  "ஆண்டியன்" என்றே இன்றும் அழைக்கப்படுகிறது)

குரும்பாசி மலைக்குச் சென்று தவம் புரிந்த போகரும், புலிப்பாணியும் காயகல்ப்ப ரகசியங்கள் சிலவற்றையும், மூலிகைகளையும் புதிதாகக் கண்டறிந்தார்கள். சிலவருடங்களின் பின்னர் தாம் கண்டறிந்த மூலிகைகளுடன் சென்றபாதையின் வழியாக திரும்பி வந்தார்கள். அப்போது அந்தப்பெண் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றிருப்பதையும், அவர்கள் நலமுடன் இருப்பதையும் கண்டு புலிப்பாணி மகிழ்ந்தார். ஆனால் போகர் முகத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லை. வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா என்று சொன்னபோது இருந்த அதே உணர்ச்சிதான் அவர் முகத்தில்.

சிலபத்து ஆண்டுகள் கடந்தோடியது. போகர் தனது ஆச்சிரமத்தில் கண்களை மூடித் தியானத்தில் இருந்தார். அப்போது அவசர அவசரமாக புலிப்பாணி அவரது ஆச்சிரமத்திற்குள் புகுந்தார். சிறிது நேரங்கழித்து தியானத்தை முடித்து கண்களைத் திறந்த குரு புலிப்பாணியை நோக்கி என்னவென்று பார்வைகளாலேயே வினாவினார். அதற்குப் புலிப்பாணி, "பாரத தேசத்திற்குள் ஒரு பெருங் காடையர் கூட்டம் படையெடுத்து வந்துள்ளது, இங்குள்ள கோயில்கள், புனிதத் தலங்கள் எல்லாம் அவர்களால் இடிக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன, மக்கள் முதியவர் குழந்தைகள் என்ற பேதமில்லாமல் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள், அவர்கள் கண்களில்படும் பெண்கள் எல்லாம் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள், அடிமைகளாக கொண்டுசெல்லப்படுகிறார்கள்" என்று மூச்சுவிடாமல் கூறிமுடித்தார். 

அப்போது குரு புலிப்பாணியை நோக்கி "பாரதத்தின் இந்த நிலைமைக்கு நீதான் காரணம், வரலாற்றை மாற்றியதே நீதான்" என்றார். அப்போதுதான் புலிப்பாணிக்கு மனக்கண்ணில் அந்தக் காட்சிகள் ஓடியது. அன்று வன்புணர்வு செய்து கொல்லப்படும் நிலையில் இருந்தபோது காப்பாற்றிய பெண்ணின் கருவில் வந்தவனே இன்று படையெடுப்பு செய்த காடையன் என்பதும், அன்று அந்த பெண் கொல்லப்பட்டிருந்தால் இந்த அவலங்களை பாரதம் சந்தித்திருக்காது என்பதும் அப்போதுதான் புரிந்தது. 

குரு சொன்ன "வரலாற்றை மாற்றிவிட்டாய் சிஷ்யா" என்ற வார்த்தை அவர் காதுகளில் இப்போதுதான் உட்சென்றது. அந்த வார்த்தைகள் இப்போது கண்முன் வாழ்க்கையாக நின்றது. புலிப்பாணி உண்மையை உணர்ந்த போது எல்லாம் கைமீறிப் போயிருந்தது. அப்போது புலிப்பாணி போகரை நோக்கி "குருவே, இப்போது நான் என்ன செய்வது? நான் என்ன பிராயச்சித்தம் செய்வேன்?" என்றார்.

குரு எதுவுமே பேசவில்லை. மொனமாகவே இருந்தார். புலிப்பாணிக்கு அந்த மௌனத்தின் பொருள் புரிந்தது. குருவை வணங்கி விடைபெற்றுக்கொண்டு ஆச்சிரமத்தில் இருந்து வெளியே சென்றார். 

போகர் தடுத்தபோதும் குருவின் வார்த்தைகளை மீறி புலிப்பாணியால் காப்பாற்றப்பட்ட, அந்த வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் கருவில் வந்தவன் வேறுயாருமல்ல, அவன்தான் "பாபர்". பாரத தேசத்தின் பாரம்பரியத்தைச் சிதைத்து முகலாயர் ராஜ்ஜியத்தை பாரதத்தில் நிறுவியவன் அவனே.

(முகல் என்றால் பாரசீக மொழியில் மங்கோலியர் என்று பொருள்)



No comments:

Post a Comment