Thursday 26 May 2022

புலிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்- பகுதி 2 (வரலாற்றுக் கதை)

ரஞ்சனி வந்து சென்றதுமுதல் லட்சுமியின் நச்சரிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. நமசிவாயத்திற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏதோ வைராக்கியத்தில் தீபா செத்தால் கூட பரவாயில்ல என்று சொல்லிவிட்டார். ஆனால் அவளில்லாத வாழ்வை அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என்ன இருந்தாலும் சர்ச்சுக்கு அனுப்புவதிலோ, ஃபாதருடன் தன் மகளைவிடுவதிலோ சிறிது கூட சம்மதமில்லை அவருக்கு. 

பகுதி 1 ஐ படிக்க...

"ஏங்க.. ரஞ்சனிதான் சொல்றால்ல, அங்க ஏற்கனவே நிறைய பிள்ளைங்க இருக்கிறாங்களாம், அதைவிட இப்ப இருக்குற பிரச்சினைக்குள்ள ஃபாதர்மார் பிள்ளைங்க கூட பிரச்சினை பண்ணமாட்டாங்கங்க, இங்க இருந்து பிடிபட்டு சாகிறதைவிட கொஞ்சநாளைக்கு அங்கயே விட்டுடுவங்க" என்று விடாமல் நச்சரித்துக் கொண்டே இருந்தாள். நமசிவாயம் எதுவும் பேசவில்லை. தீபாவும் படுத்திருந்தவாறே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தாள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை.

நமசிவாயம் மனதை கசக்கிக் பிழிந்து எப்படியெல்லாமோ சிந்தித்துப் பார்த்துவிட்டார், மகளைக் காப்பாற்ற வேறு வழியேதும் தோன்றவில்லை. ஏதோ அதிர்ஷ்டவசமாக அண்டாவை அவர்கள் திறந்து பார்க்காததால் நேற்று தப்பித்து விட்டாள். எல்லா நேரமும் அந்த அதிர்ஷ்டம் கைகொடுக்க போவதில்லை. அவர் மனம் அங்கலாய்த்துக்கொண்டே இருந்தது. குழம்பிய அவர் சிந்தனையை லட்சுமியின் நச்சரிப்பு வென்றது. "என்ன நடந்தாலும் அம்மாளாச்சி பிள்ளைய பாத்துகப்பாள்" என்று அம்மாளாச்சி மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தீபாவை அனுப்ப சம்மதித்தார். சம்மதித்தது தான் தாமதம் லட்சுமி முதல் வேலையாக ஓடோடிச் சென்று ரஞ்சினியைப் பார்த்து சம்மதத்தை சொன்னாள். 

ரஞ்சனிதான் அழைத்துச் சென்று விட்டுவிட்டு வருவது என்று முடிவானது. பொழுது சாயும் போது பிரதான வீதியால் செல்லாமல், குடிசைகளுக்கு இடையால் சென்றால் பிள்ளைபிடிகாரரிடம் மாட்டாமல் செல்லலாம் என்றாள் ரஞ்சனி. விருப்பமே இல்லாமல் புறப்படத் தயாரானாள் தீபா. நமசிவாயத்திற்கு மட்டுமல்ல தீபாவிற்கும் செல்வதற்கு விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழியில்லை, புறப்பட்டாள். 

பொழுது சாயும் நேரம் தீபாவையும், தர்சினியையும் அழைத்துக் கொண்டு ரஞ்சனி புறப்பட்டாள். வீதியால் செல்லாமல் குடிசைகள் அமைத்து புதிதாக உருவான உட்பாதைகள் வழியாக சென்றார்கள். நமசிவாயமும் மனம் கேட்காமல் சிறிது இடைவெளி விட்டு அவர்கள் பின்னாலேயே சென்றார். அவர்கள் பதுங்கு குழி இருந்த இடத்தில் இருந்து பதினைந்து நிமிட நடை தூரத்தில்தான் அந்த சர்ச். ஒருவாறு பிள்ளை பிடிகாரர் கண்களில் மாட்டாமல் வந்துசேர்ந்துவிட்டார்கள். அந்த சர்ச் வலைஞர்மடம் கடற்கரையை அண்மித்தே இருந்தது. பிரதான வாயிலால் உள்ளே செல்லாமல் பின்வாசல் வழியாக அழைத்துச் சென்றாள் ரஞ்சனி. நமசிவாயம் உள்ளே செல்லாமல் வாயிலுடனேயே நின்று விட்டார். மங்கிய வெளிச்சத்தில் திரும்பிப் பார்த்து கண்களாலேயே விடைபெற்றுச் சென்றாள் தீபா.

உள்ளே சென்ற ரஞ்சனி தீபாவையும் தர்சினியையும் ஃபாதரிடம் ஒப்படைத்துவிட்டு சிறிது நேரத்தில் திரும்பிவிட்டாள். ரஞ்சனி நடக்க நமசிவாயமும் பின்னாலேயே நடந்தார். நமசிவாயம் மனதில் கனத்த பாரம். அவர் நடையில் எப்போதும் இல்லாத தளர்வு. ரஞ்சனிக்கும் அவருக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே வந்தது. குடிசைக்கு வந்தவர் நின்மதி இல்லாமல் தவித்தார். உணவு உண்ணக்கூட மனமில்லாமல் அப்படியே படுத்து விட்டார். ஆனால் தூக்கம்தான் வந்தபாடில்லை.

தீபாவிற்கும் தூக்கம் வரவில்லை. ஆனால் தர்சினி எந்த கவலையும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தாள். புதிதாக வந்தவர்களிடம் சுற்றி இருந்து கேள்வி கேட்டவர்களும் தூங்கி விட்டார்கள். ஆனால், தீபா மட்டும் தூங்காமல் விழித்திருந்தாள். அந்த கட்டிடத்திற்குள் இருந்த மங்கலான வெளிச்சத்தில் சிலர் வெளியே எழுந்து செல்வதும் பின் சிறிது நேரம் கழித்து வந்து படுப்பதுமாக இருந்தது அவளுக்கு தெரிந்தது. கட்டிடத்தைச் சுற்றி இரவு முழுவதும் மாறி மாறி ஆள் நடமாட்டம் இருந்துகொண்டே இருந்தது. அவள் தூங்காமலேயே விழித்திருந்தாள். அதற்குள் பொழுதும் விடிந்துவிட்டது.

அந்த சர்ச் வளாகத்திற்குள் ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐநூறு அறுநூறு பேர் இருப்பார்கள். தீபா இருந்த கட்டிடத்திற்குள் மாத்திரம் நூறு பேருக்கு மேல் இருந்தார்கள். பல்வேறு இடங்களில் இருந்து வந்த சர்ச் ஃபாதர்கள், கன்னியாஸ்திரிகள், ஃபாதராக பயிற்சி பெறும் பிரதர்கள், பயிற்சி கன்னியாஸ்திரிகள் என்று பலவிதமானவர்களுடன், தீபா தர்சினி போன்ற பிள்ளை பிடிக்கு பயந்து ஒழித்து வந்தவர்களும் இருந்தார்கள். தீபா எல்லோர் முகத்தையும் உற்றுப் பார்க்கிறாள். யார் முகத்திலும் விடிவில்லை; விரகமும், விகாரமுமாக இருந்த அவர்கள் முகங்களை பார்க்கும் போதே அவளுக்கு அச்சமாக இருந்தது. 

தீபாவிற்கு அந்த இடம் ஒட்டவே இல்லை. சாப்பாடும் அவளுக்கு உகந்ததாக இல்லை. சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவளுக்கு அன்னியமாகவே தெரிந்தார்கள். அவர்கள் செயல்கள் எல்லாம் அச்சம் தருவதாகவே அவளுக்கு தோன்றியது.

காலைச் சாப்பாடு சாப்பிட்டு முடித்துவிட்டு இருந்தபோது ஒரு சிஸ்டர் வந்து "ஜேம்ஸ் ஃபாதர் தர்சினியை வரட்டுமாம்" என்று சொல்லி தர்சினியை அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து சாக்லேட், பிஸ்கட், டவல், பெட்சீட், சோப் என்று ஒரு பொதியோடு வந்தாள் தர்சினி. தீபாவிற்கும் சாக்லேட் கொடுத்தாள். தீபா சாக்லேட்டை வாங்கி சாப்பிட்டாலும் தனக்கும் பொதி கிடைக்கவில்லை என்பது வருத்தமாகவே இருந்தது. "எங்கிட்டத்தான் நல்ல பெட்சீட், டவல் எல்லாம் இருக்குதே தர்சினிக்குத்தான் கஷ்டமாச்சே" அதான் கூப்பிட்டு கொடுத்திருப்பாங்க என்று நினைத்தாள். "இல்லை இல்லை அவள் தான் கிறிஸ்டியன் ஆச்சே, நான்தான் இந்து ஆச்சே எனக்கெப்படி கொடுப்பாங்க.." தனக்கு கிடைக்காததற்கு அவள் மனம் ஏதேதோ காரணங்களைத் தேடியது. பின் வேறு பராக்கில் அதனை எல்லாம் மறந்துவிட்டாள். 

மதியம் சாப்பிட்டு விட்டு இருந்த தீபா அயர்ந்து தூங்கி விட்டாள். இரவு முழுவதும் தூங்காமல் சொட்ட சொட்ட விழித்திருந்ததால் அவளுக்கு இப்போது தூக்கம் கண்மண் தெரியாமல் வந்தது. சிறிது நேரந்தான், ஆனால் நல்ல தூக்கம். தூங்கி எழுந்திருந்தவளை "ஜேம்ஸ் ஃபாதர் தீபாவை வரட்டுமாம்" என்ற குரல் திரும்பிப் பார்க்க வைத்தது. காலையில் தனக்கு பொதி கிடைக்கவில்லை என்று கவலைப் பட்டவள் தனக்கு பொதி கிடைக்கப் போகிறது என்று சந்தோசப்பட்டாள். அருகில் இருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். தூங்கி எழுந்து கழுவாத முகம் அவளை அப்படியே கிறிஸ்தவ பெண் போல காட்டியது. இனி யார் முகம் கழுவி வெளிக்கிட்டு போறது என்று நினைத்தவள் அப்படியே போனாள். அழைத்துச் சென்ற சிஷ்டர் ஜேம்ஸ் ஃபாதரின் அறைக்குள் அவளை விட்டு விட்டு வெளியே சென்று விட்டாள். 

அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தாள். சுற்றிலும் விலை உயர்ந்த பொருட்கள். பாலைவனம் போன்ற அந்த இடத்தில் இப்படி ஒரு பகட்டான வாழ்க்கையா என்று நினைத்துக் கொண்டாள். மீசை மழித்த முகத்துடன் வெள்ளை பெட்சீட் விரித்த கட்டிலில் ஃபாதர் ஜேம்ஸ். சொட்டை தலை, விசித்திரமாக வளைந்த கண்கள், ஆளே ஒரு மாதிரியாக இருந்தான். ஆனால் அந்த விசித்திரமான உருவை அவள் கண்டுகொள்ளவே இல்லை. அவள் பார்வை எல்லாம் சுற்றி இருந்த பொருட்கள் மீதுதான். கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த டீப்போவில் ஒரு பொதி. தர்சினி கொண்டு வந்த அதேபொதி. அது தனக்குத்தான் என்று நினைத்துக்கொண்டாள் தீபா. "என்னம்மா இப்படி பார்க்கிறே, உட்காரும்மா" என்று தீபாவை அழைத்து கட்டிலில் அமர்த்தினார் ஃபாதர். அவள் வெள்ளந்தி மனதில் எதுவும் தப்பாக தோன்றவில்லை. சுற்றி இருக்கும் பொருட்களை பார்த்தவள் ஃபாதரின் கோணிப்போன காமக் கண்களை கவனிக்கவில்லை. ஜேம்ஸ் எழுந்து மேசையில் இருந்த பாத்திரத்தில் உள்ள திரவத்தை கிளாஸ் ஒன்றில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தான். இன்னொரு கிளாஸில் ஊற்றி தீபாவிடம் கொடுத்து 'குடிம்மா' என்றான்.

 "என்ன ஃபாதர் இது?" புரியாமல் விழித்தாள். 

"இது கார்க்கோஷா உடம்புக்கு ரொம்ப நல்லது குடிம்மா" என்றான். 

தீபா எழுந்து பாத்திரத்தை பார்த்தாள். பாத்திரத்திற்குள் ஏதோ வெள்ளையாக அடுக்கடுக்காக கிடந்தது. தீபாவிற்கு அதைப் பார்க்கும் போதே அருவருப்பாக இருந்தது. அதன் மணம் குமட்டிக் கொண்டு வந்தத. அவள் கிளாஸை மேசையில் வைத்துவிட்டு "எனக்கு இது வேணாம் ஃபாதர்" என்றாள்.

சரி பரவால்ல இரும்மா.. என்று சொல்லி விட்டு குடித்து முடித்த கிளாஸை மேசையில் வைத்துவிட்டு அவள் அருகில் வந்து இருந்தான். வந்து இருந்தவன் அவள் தோளில் கை வைத்து அவளை அணைத்தான். அவள் திமிறிக்கொண்டு எழுந்தாள். "என்ன ஃபாதர் பண்றீங்க.. ? எதுக்கு வரச் சொன்னீங்க?" என்று கோபமாக கேட்டாள். அவளுக்கு கோபத்துடன் பதட்டமும் தொற்றிக் கொண்டது. தவறான இடத்தில் வந்து வசமாக மாட்டிவிடடோம் என்று வருத்தப்பட்டாள். கோபப்படாம வாம்மா என்று சொல்லி ஜேம்ஸ் அவளைப் பிடித்து பலாத்காரமாக கட்டிலில் சாய்த்தான். பொதி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு வந்தவளுக்கு ஃபாதர் பாதகங்கள் ஆத்திரமாக இருந்தது. "என்ன ஃபாதர் பண்றீங்க? இதுக்குத்தான் கூப்பிட்டிங்களா?" என்று திமிறினாள். 

"எதுக்கும்மா கோபப்படுறா? உன் பிரென்டுதானே தர்சினி, அவ எப்படி அருமையா நடந்துக்கிட்டா, உன்னை மாதிரி இந்து பொண்ணுங்கதான் சும்மா அடம் பிடிச்சுக்கிட்டு.. உனக்கு பொதி வேணுமா? வேணாமா?" என்றான் ஃபாதர் ஜேம்ஸ். 

தீபாவின் ஆத்திரம் தீயாய் மாறியது. "உன் பொதியும் நீயும்" என்றவள் எகிறித் தள்ளிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்தாள். அவளின் இந்த கோபத்தை ஃபாதர் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்களில் அவன் ஒருபோதும் இப்படி ஆனதில்லை. எத்தனையோ கிறிஸ்தவ பெண்களிடம் அத்துமீறி இருக்கிறான். ஆனால் யாரும் இப்படி எதிர்த்தது இல்லை. தீபா காட்டிய எதிர்வினையால் ஃபாதருக்கு இந்துக்கள் என்றாலே வெறுப்பாக இருந்தது. எல்லோரையும் கிறிஸ்தவர்களாக மதம்மாற்ற வேண்டும் என்று மனதுக்குள் கறுவிக் கொண்டான். தீபா கதவைத் திறந்து கொண்டு அவள் இருந்த கட்டடத்திற்கு வந்தாள். அவள் எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

தீபா வந்ததும் வராததுமாக, "எங்கடி தீபா பொதியைக் காணோம், சாக்லேட் கொண்டு வருவன்னு பார்த்திட்டு இருந்தன்டி" என்றாள் தர்சினி. தர்சினியைப் பார்க்கும் போதே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. "ஃபாதர் கூட படுத்துத்தான் பொதி வாங்கி வந்தியாக்கும், என்னையும் உன்னப்போல படுக்க சொல்றியா" என்று கேட்கவும் தர்சினி அப்படியே மௌனமானாள். பொழுதும் சாய்ந்து விட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. வெளியே எப்படி போவது எங்கே போவது என்று எதுவுமே அவளுக்கு புரியவில்லை. எதற்கும் விடியட்டும் என்று காத்திருந்தாள்.

இன்றைய இரவும் அவளுக்கு தூக்கம் இல்லாமலேயே கடந்தது. நேற்றைய புதிரின் விடையை இன்று அவிழ்க்கத் துணிந்தாள். தூங்குவது போல பாசாங்கு செய்தவள் எழுந்து வெளியே வந்து இருளில் ஒளிந்து கொண்டாள். அவள் ஒளிந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே அவள் கண்ட காட்சிகள் அவளைத் தூக்கி வாரிப் போட்டது. உள்ளே இருந்து எழுந்து வரும் பெண்களும் மற்றைய கட்டடத்தில் இருந்து வரும் ஆண்களும் அங்கங்கே சரசத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். சில ஆண்கள் கட்டடத்தின் உள்ளேயும் பெண்களுடன் உறவில் ஈடுபட்டார்கள். யாரிடமும் எந்த எதிர்ப்பும் இல்லை. கன்னியாஸ்திரிகள், பயிற்சியாளர்கள், தப்பிக்க ஒழிந்து இருப்பவர்கள் என்று அனைவரும் தவறாகவே நடந்துகொண்டாராகள். அந்த இருளிலும் ஃபாதர் ஜேம்ஸ் இருவருடன் வந்தது அவளுக்கு தெரிந்தது. தீபா படுத்திருந்த இடத்தில் வந்து தேடினார்கள். நல்ல வேளையாக அவள் அந்த இடத்தில் இல்லை. அவர்கள் கையில் மாட்டினால் என்னவாகுவேன் என்ற பயம் அவளைப் பற்றிப் பிடித்தது. அவளைக் காப்பாற்ற கூட இங்கு யாரும் இல்லை. எல்லோருக்கும் அது சாதாரண விசயம். ஆனால் தீபா மானம் மரியாதை ஒழுக்கம் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவள், கெட்டுப் போய் வாழ்வதைவிட செத்துப் போகலாம் என்று நினைத்தாள். அந்த கடற்கரை காற்றிலும் அவளுக்கு வேர்த்து ஊற்றியது. இந்த நரகத்தில் இருந்து எப்படி தப்பிக்க போகிறேன் என்று பயந்தாள். அப்போதுதான் அவள் தந்தை பயந்ததன் காரணம் புரிந்தது. 

தீபா இரவு முழுவதும் சிந்திக்கலானாள். அம்மா அப்பாவிடம் சென்று என்னவென்று சொல்வது? இங்கே நடப்பதை எப்படி சொல்வது? அப்பா தனது முடிவில் உறுதியாக இருந்திருக்கலாம் தானே? எதற்காக அம்மாவின் பேச்சிற்கு மாறினார்? தர்சினி இவ்வளவு மோசமானவளா? தர்சினி அம்மா எல்லாம் தெரிந்து தான் எங்களை கொண்டுவந்து விட்டாரா? தர்சினி, அவங்க அம்மா, ஃபாதர், இங்கே உள்ள சிஷ்டர் எல்லோரும் தப்பானவங்களாத்தானே இருக்காங்க, கிறிஸ்டியனா மாறினாலே எல்லோரும் எப்படி தப்பானவங்களா ஆயிடுறாங்க?

இப்படி அசிங்கமான வாழ்க்கை வாழ்வதைவிட போராடி மாண்டால் பெருமைதானே? எதற்காக நாம் ஒழிந்து ஓடவேண்டும்? அவள் மனதில் விடைதெரியாத கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தது.

பொழுது புலர ஆரம்பித்திருந்தது. இரவு முழுவதும் காமக் களியாட்டம் ஆடிய ஃபாதர்கள், கன்னியாஸ்திரிகள் என்று அனைவரும் அவரவர் இடங்களுக்கு சென்றுவிட்டார்கள். இதுதான் தப்பிக்க சரியான நேரம் என்று முடிவு செய்தாள் தீபா. ஒருவாறு வேலியால் புகுந்து சர்ச் வளாகத்திற்கு வெளியே வந்துவிட்டாள். இனி வீட்டிற்கு செல்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள். நன்றாக விடியும் வரை ஒரு இடத்தில் காத்திருந்தாள்.

அவள் காத்திருக்கும் இடத்திற்கு அருகில்தான் புதிய போராளிகள் இணைப்பு செயலகம் இருந்தது. இன்பன் தலைமையிலான கணனிப் பிரிவினரின் இணைப்பு செயலகம் அது. இன்பன்தான் பொறுப்பாளர் என்றாலும் கதிர்தான் புதிய போராளிகளை பிடிப்பது, அதற்கான திட்டங்களை இடுவது என்று தீவிரமாக ஈடுபட்டு வந்தான். போராட ஆட்களைப் பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருந்தது. ஆனால் ஆட்களைப் பிடிப்பது ஒன்றுதான் கதிரின் நோக்கம். ஏன் பிடிக்கிறான் எதற்கு பிடிக்கிறான் என்பதற்கெல்லாம் அவனிடம் காரணம் இல்லை. ஆட்களைப் பிடிப்பது அவனுக்கு பிடித்திருந்தது, அதனால் பிடித்தான். தீபா இருந்து தப்பித்து வந்த வலைஞர்மடம் சர்ச்மீதும் கதிருக்கு ஒரு கண் இருந்தது. பலநூறுபேர் உள்ளே ஒழிந்திருப்பது அவனுக்கு தெரியும். அவனுக்கு மட்டுமல்ல இன்பனுக்கும் தெரியும். ஆனால் சர்ச்சுக்குள் சென்று பிடித்தால் பிரச்சினை என்று சொல்லி இன்பன் தடுத்ததால் கதிர் உள்ளே செல்லவில்லை. ஆனால் எப்படியாவது ஒரு சந்தர்ப்பம் வரும், உள்ளே இருப்பவர்களை பிடிக்கவேண்டும் என்பதில் கதிர் உறுதியாகவே இருந்தான். அவனுக்கு சர்ச் பள்ளி என்ற பேதமெல்லாம் கிடையாது, புதிதாக போராளிகளை உருவாக்க வேண்டும். அது ஒன்றுதான் அவன் உறுதியான இலக்கு.

நன்றாக விடிந்துவிட்டது. புதிய போராளிகள் இணைப்பு செயலகத்தின் வாசலில் இன்று எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டே நின்றான் கதிர். வராது வந்த மாமணியாக அவன் முன்னால் வந்து நின்றாள் தீபா. "அண்ணா நான் இயக்கத்தில சேரணும்" என்று அவள் சொன்ன வார்த்தையை கேட்டு உள்ளே இருந்த இன்பனும் வெளியே வந்துவிட்டான். வீடு வீடாகச் சென்று கஷ்டப்பட்டு பிடித்தாலே யாரும் நிற்கமாட்டேன் என்கிறார்கள். இந்த காலத்தில் இப்படி ஒரு பெண் தானாக போராட வருவதை அவர்களால் நம்பவே முடியவில்லை. இது கனவா நிஜமா என்று அவர்களால் நம்பவே முடியவில்லை.

அவளுக்கு ஜஏதோ பிரச்சினை என்று மட்டும் இருவருக்கும் புரிந்தது. "என்ன பிரச்சினை தங்கச்சி? நீங்க எங்க இருந்து வாறிங்க?" என்று கேட்டான் கதிர். பிள்ளை பிடியில் இருந்து காப்பாற்ற ஃபாதர் கூட விட்டது முதல், ஃபாதர்ட்ட இருந்து தப்பித்து புதிய போராளிகள் இணைப்பு செயலகம் வந்தது வரை தீபா ஒன்று விடாமல் முழுவதுமாக சொன்னாள். எந்த ஃபாதர் எந்த சர்ச் என்று எதுவும் தெரியாதது போல திரும்பவும் கேட்டான் கதிர். "ஜேம்ஸ் ஃபாதர், வலைஞர்மடம் சர்ச் அண்ணா" என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாள் தீபா. இன்பனை நோக்கி திரும்பினான் கதிர். இன்பனால் எதுவும் பேச முடியவில்லை. "அண்ண இண்டைக்கு பின்னேரம் வலைஞர்மடம் சர்ச்சுக்க இறங்கிறம், அந்த ஜேம்ஸ்ஸ இழுத்துப் போட்டு அந்த இடத்திலயே சுடுறம், எல்லா பெடியளையும் மதியத்துக்குள்ள இங்க வரச்சொல்லுறன்" என்று கொதித்தான் கதிர். இப்போது பிடிக்க உள்ளே செல்வதை மறுக்க முடியவில்லை இன்பனால். "கதிர்!, ஃபாதர் மேல கை வைச்சு போடாத பிறகு பிரச்சினை வேற மாதிரி ஆயிடும்" என்றான் இன்பன். இன்பன் சொன்ன வார்த்தைகள் மிரட்டலா அக்கறையா என்று கதிருக்கு புரியவில்லை. அவன் வார்த்தைகள் பிடிக்கவில்லை என்றாலும் கதிருக்கு உள்ளே சென்று பிடிக்க அனுமதி கிடைத்ததே போதும் என்றாகி இருந்தது. 

மாலை வேளையில் கதிரும் அவனது குழுவினரும் சர்ச் வளாகத்திற்குள் சென்றார்கள். கதிர் குழுவுக்குள்ளேயும் ஒரு கறுப்பாடு இருந்தது. அவர்கள் செல்வதற்கு முன்னரே யோரோ தகவல் கொடுத்துவிட்டார்கள். கட்டட கூரை- சீலிங் தகடுகளுக்குள் ஃபாதருக்கு நெருக்கமான பலர் மறைக்கப்பட்டு விட்டார்கள். மறைக்கப்பட்ட இடங்கள் கதிராலோ அவர்கள் குழுவாலோ இனங்காணப்பட முடியவில்லை. இருநூறு முன்னூறு பேர் ஒன்றாக கிடைத்த சந்தோஷத்தில் கலைத்துக் கலைத்துப் பிடித்தார்கள். பலர் அதற்குள்ளும் தப்பித்து ஓடினார்கள். கதிருக்கு ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. இந்த அவதிக்குள்ளும் ஜேம்ஸ் ஃபாதரைப் பிடித்து கன்னம் சிவக்க ஐந்தாறு அறைவிட்டான். உனக்கு சாவு என்னாலதான் என்று எச்சரித்து விட்டு புறப்பட்டான்.

பிடிப்பவர்கள் அனைவரும் வாகனங்களுக்குள் ஏற்றப்பட்டு பயிற்சி முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். எல்லோரையும் பயிற்சி முகாமிற்கு அனுப்பிய கதிர் தீபாவை மட்டும் பயிற்சிக்கு அனுப்பவில்லை. நாலு நாள் சூட்டுப்பயிற்சி கொடுத்துவிட்டு, அஞ்சாவது நாள் ஏதோ ஒரு காவலரணில் விட்டு விடப்போகிறார்கள். இதில எத்தனை உயிரோட திரும்பும் என்றே தெரியாது. உதுகள் உயிரோட இருந்துதான் யாருக்கு என்ன லாபம்? செத்துத் தொலையட்டும் என்று நினைத்தவன், தீபா மட்டும் சாகக் கூடாது என்று நினைத்தான்.

காவலரண்களில் கூட கலவிகொண்ட எத்தனையே கழுசறைகளைக் கண்டவன் கதிர். ஒழுக்கமே இல்லாதவர்கள் சாகலாம், ஆனால் ஒழுக்கமான ஒருசிலராவது வாழவேண்டும் என்று நினைத்தான். தீபாவை பயிற்சி முகாமிற்கு அனுப்பாமல் வீட்டிற்கு அனுப்புவது என்று முடிவு செய்தான். இன்பன் தனக்கு வேண்டியவர்கள், உறவினர்கள் என்று எத்தனையோ பேரை திருப்பி அனுப்பியிருக்கிறான்.பிடிக்காமல் விடச் சொல்லி இருக்கிறான். ஆனால் கதிர் அப்படி ஒருபோதும் செய்ததில்லை. இப்போது முதல்முறையாக தானாக சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டிற்கு அனுப்ப முடிவெடுத்தான். கதிரின் இந்த முடிவை இன்பனால் கூட மீறமுடியாது.

தீபா என்னவானாள்?

தொடரும்...



No comments:

Post a Comment