Sunday 26 June 2022

அண்ணன் அருந்திய ஃபாதரின் தமிழ் தேசியம்

 சனிக்கிழமை இரவு குடித்த உற்சாக பானத்தின் மயக்கம் முழுதாக மறையவில்லை. காலையில் எழுந்ததும் தலை விண் விண் என்று வலித்தது. இரண்டு தலைவலி மாத்திரைகளை எடுத்து விழுங்கிவிட்டு வேகவேகமாக புறப்பட்டார் அண்ணன். என்னதான் போதை தெளியாவிட்டாலும் ஞாயிற்றுக்கிழமையில் வீட்டில் இருப்பது அண்ணனுக்கு ஆகாது.

அண்ணன் புறப்படும் முன்பே தம்பிகளும் தயாராக இருந்தார்கள். என்னதான் வேக வேகமாக புறப்பட்டாலும் அண்ணனும் தம்பிகளும் போவதற்கு முன்னரே ஃபாதர் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை ஆரம்பித்து விட்டார். அண்ணனும் தம்பிகளும் உள்ளே நுழையவும் ஃபாதர் ஒவ்வொருவரது வாய்க்குள்ளும் வைத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. ஃபாதர் வாய்க்குள் வைக்க வைக்க எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு உமிந்தார்கள். அண்ணனும் தம்பிகளும் போனவேகத்தில் முட்டிபோட்டுக்கொண்டு கண்களை மூடியவாறு வாயை ஆவென்று திறந்தார்கள். 

அனைவருக்கும் அப்பத்துண்டுகளை வாய்க்குள் வைத்த ஃபாதர் கிண்ணத்தில் ஊற்றிய வைனை ஒவ்வொருவராக கொடுத்தார். அண்ணனின் முறை வந்தது. ஃபாதர் கொடுத்த வைனை ஒரே மடக்கில் குடித்துவிட்டு "பத்தல ஃபாதர் இன்னும் கொடுங்க" என்றார். 

"இவனோட ஒரே அக்கப்போரா போச்சு" என்று மனதுக்குள் சொல்லிவாறு பின்னால் சென்ற ஃபாதர் பாத்ரூமுக்குள் சென்று கிண்ணம் நிறைய பெய்து எடுத்து வந்தார். 

அண்ணன் முன் கொண்டு வந்து ஃபாதர் நீட்டியதும் வாங்கி மடக்கு மடக்கென்று குடித்துவிட்டு "பத்தல ஃபாதர் இன்னும் கொடுங்க" என்றார். இன்னும் வேணும் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. சில மணிநேரம் கழித்துத்தான் இனி வரும். சிறிது நேரம் கழித்து வா.. என்று சொல்லி விட்டு மற்றவர்களுக்கு வைனை கொடுக்க ஆரம்பித்தார் ஃபாதர்.

ஃபாதர் கொடுத்ததை கிண்ணம் நிறைய குடித்ததால் தமிழ்த்தேசிய உணர்வு பொங்கியவாறு அண்ணன் வெளியே வந்தார். அண்ணன் வெளியே வரவும் சிவப்பு விளக்கு ஊடகங்கள் குச்சியை நீட்டவும் சரியாக இருந்தது. அக்னிபாத் , அதிமுக தலைமை என்று அண்ணன் அதகளம் பண்ண ஆரம்பித்தார். அண்ணனையும், அண்ணன் அருந்திய ஃபாதரின் தமிழ் தேசியத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்த தம்பிகள் ஆரவாரித்தனர்.



Friday 24 June 2022

குஷ் இராச்சியத்தின் காவலி கண்டகை அமானிரெனஸ்

குஷ் இராச்சியத்தின் கண்டகை அமானிரெனஸ். பொ.மு 40 முதல் பொ.மு 10 வரை கண்டகையாக இருந்து குஷ் இராச்சியத்தை காத்து வந்தார்.

இன்றைய எகிப்து மற்றும் சூடான் நாடுகளில் தொலைந்து போயுள்ள குஷ் இராச்சியம் அன்றைய எகிப்திய இராச்சியத்தின் தெற்கு  எல்லையில் இருந்து நீண்டு அமைந்திருந்தது. அன்றைய நாளில் எகிப்து நாட்டை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ரோமானியர் குஷ் இராச்சியத்தையும் கைப்பற்ற முயற்சித்தனர்.

கண்டகை அமானிரெனஸின் ராணுவத் தலைமை, யுத்த வியூகம் என்பவை ரோமானியர்களின் முயற்சிகள் வெற்றிபெற முடியாமல் தடுத்து குஷ் இராச்சியத்தை பாதுகாத்து நின்றது. போரிலே அமானிரெனஸின் ஒரு கண் வெட்டுண்டு பார்வையை இழந்தபோதும் அவள் போர்குணமும் திறனும் குறையவேயில்லை. படைகளுடன் இணைந்து அவளும் போர்களில் கலந்துகொண்டாள்.

அவள் ரோமானியர்களுடனான பல போர்களில் வெற்றி பெற்றாள். பின் ரோமானியர்களுடனான ஒரு போரில் ரோமானிய மன்னன் அகஸ்டஸ் சீசரின் வெண்கலச் சிலையை கைப்பற்றி பின் சீசரின் வெண்கலச் சிலையின் தலையை உடைத்து குஷ் இராச்சியத்தின் பெரிய கோவிலான நாகாவின் வாசலில் வைத்தாள். ரோமானியர்களை வெறுத்த குஷ் மக்கள் கோயிலுக்கு வரும் போதும் போகும் போதும் அந்த சிலையை மிதித்துக் கொண்டு சென்றார்கள். இது ரோமானியர்களுக்கு தீராத அவமானத்தை உண்டுபண்ணியது. 

குஷ் இராச்சியத்தின் மீதான ரோமானியர்களின் போர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. ஆனால் அமானிரெனஸை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. குஷ் இராச்சியத்தை கைப்பற்ற முடியாததாலும் ரோமானிய படைகள் எதிர்நோக்கிய இழப்புகள் காரணமாகவும் அகஸ்டஸ் சீசரே சமாதான பேச்சுவார்த்தை நடத்த இறங்கிவந்தான். பேச்சுவார்த்தை முடிவில் குஷ் இராச்சியத்தின் பகுதிகளில் இருந்து ரோமானிய படைகள் வெளியேறும் நிலை ஏற்பட்டது. குஷ் இராச்சியத்தின் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டது. 

கண்டகை அமானிரெனஸின் வீரமும் வியூகமும் பின்னர் பேச்சுவார்த்தையை பயன்படுத்தி செய்துகொண்ட ஒப்பந்தமும் குஷ் இராச்சியத்தின் பாதுகாப்பை உறுதி செய்தது. குஷ் இராச்சியத்தினதும் அதன் மக்களதும் வாழ்வை அந்த ஒப்பந்தம் 400 ஆண்டுகள் வரையில் பாதுகாத்தது. நானூறு ஆண்டுகள் நிலைத்திருந்த அந்த குஷ் இராச்சியம் கண்டகை அமானிரெனஸின் விவேகத்தால் உண்டானது.

(பி.கு: கண்டகை என்றால் சூடானிய பழைய மொழியில் ராணி என்று பொருள்)












Wednesday 8 June 2022

ஐசிஷ்- எகிப்திய மக்களின் மனங்கவர்ந்த தெய்வம்

 ஐசிஷ், இது எகிப்திய மக்களின் மந்திரச் சொல். நோய்களில் இருந்து மக்களை காத்தவள் அவள். அந்த மக்களுக்கு அறிவை கொடுத்து, தொழில் வளத்தை பெருக்கி வாழ்வை வசந்தமாக்கியவள் அவள். அழகிற்கு இலக்கணமாக, அன்பிற்கு ஆதாரமாக திகழ்ந்தவள் அவள்.

அன்பாலும் அறிவாலும் அனைவரையும் அடிமைப்படுத்திய பேரழகி ஐசிஷ். தலையில் சூடிய சூரிய வட்டு, அதைத் தாங்கிக் கொள்வதுபோன்ற சந்திரக் கொம்புகள், உடலைத் தழுவிய அழகிய ஆடைகள் என்று அவள் தேவதையாக காட்சி அளித்தாள். மக்கள் மனங்களை மட்டுமல்லாமல் மன்னர் குடும்பத்தின் மனத்திலும் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தாள். எகிப்திய பெண்களுக்கு நெசவு செய்வது, செம்மண் கற்களை சூளையில் இட்டு சுடுவது, பழங்கள் தானியங்களில் இருந்து பானங்களைக் காச்சுவது என்று அனைத்தையும் கற்றுக்கொடுத்தவள் ஐசிஷ்தான். மக்களின் நோய்களைத் தீர்த்து வைப்பதில் அவள் கைதேர்ந்தவள். அவளுக்கு அன்றைய காலத்தின் அத்தனை கலைகளும் அத்துப்படி. அதனால்தான் மக்கள் அவளை இறைவனிடம் பயின்று வந்தவள், இறைவனின் குழந்தை என்ற பொருளில் ஐசிஷ் என்று சொல்லி அழைத்தனர். அவள் மாயாஜால வித்தைகள் தெரிந்தவள், அமானுஷ்ய சக்திகள் நிறைந்தவள் என்று மக்கள் கருதினார்கள்.

அவள் அன்பை அவள் அழகை அவள் அறிவை என்று புகழ்நத மக்கள் அவளை பூலோக நாதனின் புதல்வி என்றும், வானவன் மாதேவியின் புதல்வி என்றும் புகழ்ந்து கொண்டாடினார்கள். மன்னர் குடும்பத்தினரும் அவளைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். தங்கள் நாட்டின் பெருமையே இவள்தான் என்று மெச்சினார்கள். மன்னரும் அரசியும் அவளை மகளான கருதி நடத்தினார்கள், அரசரின் வாரிசுகள் ஓசிரிஷ், சேத் மற்றும் நெப்திஸ் மூவரும் அவளுடன் அன்யோன்யம் ஆகிவிட்டார்கள், அவள் அன்பும் அரவணைப்பும் அவர்களை தோழியாய் சகோதரியாய் என்று எல்லாமாக உணரச்செய்தது. பொதுவாக ஆட்சியாளர்களை, ஆண்டவர்களைத்தான் மக்கள் இறைவனின் புதல்வர்கள் என்று புகழ்ந்து போற்றுவது வழக்கம். ஆனால் ஐசிஷ் விஷயத்தில் அது விதிவிலக்காக இருந்தது. அவள் பேருக்கும் புகழுக்கும் ஏற்றாற்போல் பட்டத்து இளவரசன் ஓசிரிஷ் வாழ்க்கை துணையாக வந்தான். ஐசிஷை மணந்த சிறிது நாட்களிலேயே ஓசிரிஷ் வசமானது அரியணை. மக்கள் மனங்களை வென்ற ஐசிஷ் பட்டத்து ராணியாக இருந்து அரசனை வழிநடத்திச் சென்றாள். அவர்கள் இருவரதும் ஆட்சியில் நாடு நகர் என்று அனைத்தும் செழித்தது, தொழில் வளம் பெருகியது. மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்றும் வாழ்ந்தார்கள். 

எல்லாம் நன்றாக இருந்தாலும் எதிர்ப்பதற்கும் யாராவது ஓரிருவர் இருக்கத்தானே செய்வார்கள். அங்கேயும் ஒருவன் இருந்தான், அவன் வேறு யாருமல்ல ஓசிரிஷின் உடன்பிறப்புதான். ஐசிஷ் மீதும் அரியணை மீதும் சேத்தின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஓசிரிஷ் மீது பொறாமை கொண்டான். வஞ்சனையை மனதினில் வளர்த்தான். தனக்குக் கிடைக்காதது எல்லாம் அரியணையில் அமர்ந்தால் கிடைத்துவிடும் என்று கற்பனை செய்தான். 

ஒருவனுக்கு ஆசை அளவுகடந்துவிட்டால் அறிவை இழந்துவிடுவான். சேத் அவ்வாறே அறிவிழந்தான். அரியணையை அடைவதற்கு முதலில் அண்ணனை அப்புறப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தான். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெட்டகம் ஒன்றைச் செய்வித்தான். ஓசிரிசை நயவஞ்சகமாக அழைத்து உயிருடன் பெட்டகத்தில் அடைத்துப் பூட்டி காற்றுப் புகாதவாறு ஈயத்தால் பூசி நைல் நதியில் தூக்கி வீசினான். அந்த அலங்காரப் பெட்டகம் ஓசிரிசின் சவப்பெட்டியாக ஆனது. ஓசிரிஷ் மூச்சு விட முடியாமல் இறந்துவிட்டான்.

மகாராணியும் மக்களும் மகிழ்ச்சியைத் தொலைத்து துக்கத்தில் மூழ்கினார்கள். அந்த சந்தர்ப்பத்தில் சேத் அரியணையில் ஏறினான். அரியணையில் ஏறியதும் தன் அண்ணன் மனைவி என்றும் பாராமல் ஐசிஷை அடையத் துடித்தான் அந்த கேடுகெட்ட உடன்பிறப்பு. அவள் நெருப்பு, அவனால் நெருங்கக்கூட முடியவில்லை. 

ஐசிஷால் ஓசிரிசை மறக்க முடியவில்லை. அவனுக்கு என்ன நடந்தது அவன் எங்கே இருக்கிறான் என்று அவள் மனம் தவித்தது. இந்த நயவஞ்சக சேத்தான் ஏதோ செய்திருக்க வேண்டும் என்று அவள் உள்மனது சொன்னது. ஓசிரிசுக்கு என்னவானது என்பதை அறிய தன் உதவியாளர்களுடன் ஊர் ஊராகச் சென்றாள். அன்றை எகிப்தின் நைல் நதிக்கரையில் அமைந்துள்ள அனைத்து ஊர்களிலும் தேடிவிட்டாள், ஓசிரிசை எங்கேயும் காணவில்லை. நைல் நதியில் பெட்டகம் ஒன்று மிதந்து சென்றதைப் பார்த்ததாக மக்களில் சிலர் சொன்னார்கள். நைல் நதியின் கரையோரம் வந்து கழிமுகத்தை அடைந்தவள், காற்றின் திசை பார்த்து கடற்கரையோரம் பயணித்தாள். அவள் முயற்சி வீண்போகவில்லை. லெபனானின் பைபிலோஸ் கடற்கரையில் அந்த அலங்காரப் பெட்டகத்தை கண்டுபிடித்தாள். ஓசிரிஷ் பெட்டகத்திற்குள்தான் இருந்தான், ஆனால் உயிர் மட்டும் அவனிடமில்லை. ஓசிரிசின் உடலை மீண்டும் பெட்டகத்தில் வைத்து அதை எடுத்துக் கொண்டு எகிப்திற்குத் திரும்பினான். 

பெட்டகத்தை கண்டதும் சேத் சினங்கொண்டான். ஓசிரிசின் உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசும்படி பணித்தான். ஓசிரிசின் உடல் துண்டங்களாக வெட்டப்பட்டு வேறு வேறு இடங்களில் வீசப்பட்டது. மக்கள் வருந்தினார்கள், மன்னனை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. ஐசிஷ் ஓசிரிசின் உடல் துண்டங்களை தேடிச் சேர்க்க புறப்பட்டாள். ஓசிரிசின் சகோதரி நெப்திஸும் ஐசிஷிற்கு உதவினாள். பறந்து திரிந்து ஓசிரிசின் உடல் பாகங்களை கண்டுபிடிக்க உதவினாள். உடலின் எல்லா பாகங்களையும் கண்டு பிடித்தவர்களால் அவனது ஆண்குறியை மாத்திரம் கண்டுபிடிக்க முடியவில்லை. 

கிடைத்த உடற்பாகங்களை ஒன்றாக்கி ஒசிரிசின் உடலை முழுமையாக்கினாள் ஐசிஷ். அவளை நேசித்த மக்களின் துணையுடன் ஓசிரிசை மம்மியாக்கி பிரமிட்டு ஒன்றை அமைத்தாள். இவ்வாறு பிரமிட்டு அமைக்கும் பணி நடக்கும் காலத்தில், ஓசிரிஷ் இறந்து ஒன்பதாவது மாதத்தில் ஐசிஷின் வயிற்றில் இருந்து வந்துதித்தான் ஓரஸ். ஓசிரிஷிற்கு பிரமிட்டை அமைத்து அவன் உடலை மம்மியாக பாதுகாத்தவள், தன் மகன் ஓரஸை பாதுகாப்பாக வளர்ப்பதற்காக நைல் நதியின் சதுப்பு நிலத்தை தேர்வு செய்தாள். பாம்பு பூச்சி தீண்டாமல் ஈயெறும்பு அண்டாமல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து அவனை முழு மனிதனாக வளர்த்தெடுத்தாள்.

ஐசிஷின் பாதுகாப்பில் அவள் அறிந்த அனைத்து கலைகளையும் கற்று முழுமையான மனிதனாக மாறினான், தன் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக, எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றி மக்களை மீட்பதற்கான சேத் மீது போர்தொடுத்தான். ஓரஸ் எகிப்தின் அரியணையைக் கைப்பற்றினான். எது எப்படி இருந்தாலும் சேத்தை கொல்லாமல் மன்னித்து விட ஐசிஷின் மனம் விரும்பியது. ஆனால் ஓரஸ் அவனை மன்னிக்கத் தயாராக இல்லை. தன் உறைவாளை எடுத்து அவன் தலையை வெட்டி வீசினான். 

ராஜ மாதாவாக இருந்து அரசாட்சியை வழிநடத்தினாள் ஐசிஷ். ஓசிரிஷால் தொடர்ந்து வழங்க முடியாத நல்லாட்சியை தன் மகன் ஓரஸ் மூலம் வழங்கினாள். எகிப்திய மக்களின் மனங்களில் நீங்காமல் சிம்மாசனம் இட்டமர்ந்தாள் ஐசிஷ். அவள் பின்னால் ஆட்சியில் அமர்ந்தவர்களும் அவள் பேரைச் சொல்லியே ஆண்டார்கள். அன்னிய தேசத்து காட்டுமிராண்டிகள் அந்த தேசத்தின் மாண்பை அழிக்கும் வரையில் அதுவே மரபாக இருந்தது.