Wednesday, 8 June 2022

ஐசிஷ்- எகிப்திய மக்களின் மனங்கவர்ந்த தெய்வம்

 ஐசிஷ், இது எகிப்திய மக்களின் மந்திரச் சொல். நோய்களில் இருந்து மக்களை காத்தவள் அவள். அந்த மக்களுக்கு அறிவை கொடுத்து, தொழில் வளத்தை பெருக்கி வாழ்வை வசந்தமாக்கியவள் அவள். அழகிற்கு இலக்கணமாக, அன்பிற்கு ஆதாரமாக திகழ்ந்தவள் அவள்.

அன்பாலும் அறிவாலும் அனைவரையும் அடிமைப்படுத்திய பேரழகி ஐசிஷ். தலையில் சூடிய சூரிய வட்டு, அதைத் தாங்கிக் கொள்வதுபோன்ற சந்திரக் கொம்புகள், உடலைத் தழுவிய அழகிய ஆடைகள் என்று அவள் தேவதையாக காட்சி அளித்தாள். மக்கள் மனங்களை மட்டுமல்லாமல் மன்னர் குடும்பத்தின் மனத்திலும் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தாள். எகிப்திய பெண்களுக்கு நெசவு செய்வது, செம்மண் கற்களை சூளையில் இட்டு சுடுவது, பழங்கள் தானியங்களில் இருந்து பானங்களைக் காச்சுவது என்று அனைத்தையும் கற்றுக்கொடுத்தவள் ஐசிஷ்தான். மக்களின் நோய்களைத் தீர்த்து வைப்பதில் அவள் கைதேர்ந்தவள். அவளுக்கு அன்றைய காலத்தின் அத்தனை கலைகளும் அத்துப்படி. அதனால்தான் மக்கள் அவளை இறைவனிடம் பயின்று வந்தவள், இறைவனின் குழந்தை என்ற பொருளில் ஐசிஷ் என்று சொல்லி அழைத்தனர். அவள் மாயாஜால வித்தைகள் தெரிந்தவள், அமானுஷ்ய சக்திகள் நிறைந்தவள் என்று மக்கள் கருதினார்கள்.

அவள் அன்பை அவள் அழகை அவள் அறிவை என்று புகழ்நத மக்கள் அவளை பூலோக நாதனின் புதல்வி என்றும், வானவன் மாதேவியின் புதல்வி என்றும் புகழ்ந்து கொண்டாடினார்கள். மன்னர் குடும்பத்தினரும் அவளைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். தங்கள் நாட்டின் பெருமையே இவள்தான் என்று மெச்சினார்கள். மன்னரும் அரசியும் அவளை மகளான கருதி நடத்தினார்கள், அரசரின் வாரிசுகள் ஓசிரிஷ், சேத் மற்றும் நெப்திஸ் மூவரும் அவளுடன் அன்யோன்யம் ஆகிவிட்டார்கள், அவள் அன்பும் அரவணைப்பும் அவர்களை தோழியாய் சகோதரியாய் என்று எல்லாமாக உணரச்செய்தது. பொதுவாக ஆட்சியாளர்களை, ஆண்டவர்களைத்தான் மக்கள் இறைவனின் புதல்வர்கள் என்று புகழ்ந்து போற்றுவது வழக்கம். ஆனால் ஐசிஷ் விஷயத்தில் அது விதிவிலக்காக இருந்தது. அவள் பேருக்கும் புகழுக்கும் ஏற்றாற்போல் பட்டத்து இளவரசன் ஓசிரிஷ் வாழ்க்கை துணையாக வந்தான். ஐசிஷை மணந்த சிறிது நாட்களிலேயே ஓசிரிஷ் வசமானது அரியணை. மக்கள் மனங்களை வென்ற ஐசிஷ் பட்டத்து ராணியாக இருந்து அரசனை வழிநடத்திச் சென்றாள். அவர்கள் இருவரதும் ஆட்சியில் நாடு நகர் என்று அனைத்தும் செழித்தது, தொழில் வளம் பெருகியது. மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்றும் வாழ்ந்தார்கள். 

எல்லாம் நன்றாக இருந்தாலும் எதிர்ப்பதற்கும் யாராவது ஓரிருவர் இருக்கத்தானே செய்வார்கள். அங்கேயும் ஒருவன் இருந்தான், அவன் வேறு யாருமல்ல ஓசிரிஷின் உடன்பிறப்புதான். ஐசிஷ் மீதும் அரியணை மீதும் சேத்தின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஓசிரிஷ் மீது பொறாமை கொண்டான். வஞ்சனையை மனதினில் வளர்த்தான். தனக்குக் கிடைக்காதது எல்லாம் அரியணையில் அமர்ந்தால் கிடைத்துவிடும் என்று கற்பனை செய்தான். 

ஒருவனுக்கு ஆசை அளவுகடந்துவிட்டால் அறிவை இழந்துவிடுவான். சேத் அவ்வாறே அறிவிழந்தான். அரியணையை அடைவதற்கு முதலில் அண்ணனை அப்புறப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தான். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெட்டகம் ஒன்றைச் செய்வித்தான். ஓசிரிசை நயவஞ்சகமாக அழைத்து உயிருடன் பெட்டகத்தில் அடைத்துப் பூட்டி காற்றுப் புகாதவாறு ஈயத்தால் பூசி நைல் நதியில் தூக்கி வீசினான். அந்த அலங்காரப் பெட்டகம் ஓசிரிசின் சவப்பெட்டியாக ஆனது. ஓசிரிஷ் மூச்சு விட முடியாமல் இறந்துவிட்டான்.

மகாராணியும் மக்களும் மகிழ்ச்சியைத் தொலைத்து துக்கத்தில் மூழ்கினார்கள். அந்த சந்தர்ப்பத்தில் சேத் அரியணையில் ஏறினான். அரியணையில் ஏறியதும் தன் அண்ணன் மனைவி என்றும் பாராமல் ஐசிஷை அடையத் துடித்தான் அந்த கேடுகெட்ட உடன்பிறப்பு. அவள் நெருப்பு, அவனால் நெருங்கக்கூட முடியவில்லை. 

ஐசிஷால் ஓசிரிசை மறக்க முடியவில்லை. அவனுக்கு என்ன நடந்தது அவன் எங்கே இருக்கிறான் என்று அவள் மனம் தவித்தது. இந்த நயவஞ்சக சேத்தான் ஏதோ செய்திருக்க வேண்டும் என்று அவள் உள்மனது சொன்னது. ஓசிரிசுக்கு என்னவானது என்பதை அறிய தன் உதவியாளர்களுடன் ஊர் ஊராகச் சென்றாள். அன்றை எகிப்தின் நைல் நதிக்கரையில் அமைந்துள்ள அனைத்து ஊர்களிலும் தேடிவிட்டாள், ஓசிரிசை எங்கேயும் காணவில்லை. நைல் நதியில் பெட்டகம் ஒன்று மிதந்து சென்றதைப் பார்த்ததாக மக்களில் சிலர் சொன்னார்கள். நைல் நதியின் கரையோரம் வந்து கழிமுகத்தை அடைந்தவள், காற்றின் திசை பார்த்து கடற்கரையோரம் பயணித்தாள். அவள் முயற்சி வீண்போகவில்லை. லெபனானின் பைபிலோஸ் கடற்கரையில் அந்த அலங்காரப் பெட்டகத்தை கண்டுபிடித்தாள். ஓசிரிஷ் பெட்டகத்திற்குள்தான் இருந்தான், ஆனால் உயிர் மட்டும் அவனிடமில்லை. ஓசிரிசின் உடலை மீண்டும் பெட்டகத்தில் வைத்து அதை எடுத்துக் கொண்டு எகிப்திற்குத் திரும்பினான். 

பெட்டகத்தை கண்டதும் சேத் சினங்கொண்டான். ஓசிரிசின் உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசும்படி பணித்தான். ஓசிரிசின் உடல் துண்டங்களாக வெட்டப்பட்டு வேறு வேறு இடங்களில் வீசப்பட்டது. மக்கள் வருந்தினார்கள், மன்னனை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. ஐசிஷ் ஓசிரிசின் உடல் துண்டங்களை தேடிச் சேர்க்க புறப்பட்டாள். ஓசிரிசின் சகோதரி நெப்திஸும் ஐசிஷிற்கு உதவினாள். பறந்து திரிந்து ஓசிரிசின் உடல் பாகங்களை கண்டுபிடிக்க உதவினாள். உடலின் எல்லா பாகங்களையும் கண்டு பிடித்தவர்களால் அவனது ஆண்குறியை மாத்திரம் கண்டுபிடிக்க முடியவில்லை. 

கிடைத்த உடற்பாகங்களை ஒன்றாக்கி ஒசிரிசின் உடலை முழுமையாக்கினாள் ஐசிஷ். அவளை நேசித்த மக்களின் துணையுடன் ஓசிரிசை மம்மியாக்கி பிரமிட்டு ஒன்றை அமைத்தாள். இவ்வாறு பிரமிட்டு அமைக்கும் பணி நடக்கும் காலத்தில், ஓசிரிஷ் இறந்து ஒன்பதாவது மாதத்தில் ஐசிஷின் வயிற்றில் இருந்து வந்துதித்தான் ஓரஸ். ஓசிரிஷிற்கு பிரமிட்டை அமைத்து அவன் உடலை மம்மியாக பாதுகாத்தவள், தன் மகன் ஓரஸை பாதுகாப்பாக வளர்ப்பதற்காக நைல் நதியின் சதுப்பு நிலத்தை தேர்வு செய்தாள். பாம்பு பூச்சி தீண்டாமல் ஈயெறும்பு அண்டாமல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து அவனை முழு மனிதனாக வளர்த்தெடுத்தாள்.

ஐசிஷின் பாதுகாப்பில் அவள் அறிந்த அனைத்து கலைகளையும் கற்று முழுமையான மனிதனாக மாறினான், தன் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக, எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றி மக்களை மீட்பதற்கான சேத் மீது போர்தொடுத்தான். ஓரஸ் எகிப்தின் அரியணையைக் கைப்பற்றினான். எது எப்படி இருந்தாலும் சேத்தை கொல்லாமல் மன்னித்து விட ஐசிஷின் மனம் விரும்பியது. ஆனால் ஓரஸ் அவனை மன்னிக்கத் தயாராக இல்லை. தன் உறைவாளை எடுத்து அவன் தலையை வெட்டி வீசினான். 

ராஜ மாதாவாக இருந்து அரசாட்சியை வழிநடத்தினாள் ஐசிஷ். ஓசிரிஷால் தொடர்ந்து வழங்க முடியாத நல்லாட்சியை தன் மகன் ஓரஸ் மூலம் வழங்கினாள். எகிப்திய மக்களின் மனங்களில் நீங்காமல் சிம்மாசனம் இட்டமர்ந்தாள் ஐசிஷ். அவள் பின்னால் ஆட்சியில் அமர்ந்தவர்களும் அவள் பேரைச் சொல்லியே ஆண்டார்கள். அன்னிய தேசத்து காட்டுமிராண்டிகள் அந்த தேசத்தின் மாண்பை அழிக்கும் வரையில் அதுவே மரபாக இருந்தது.




















No comments:

Post a Comment