Thursday 28 July 2022

மனிதர்கள் எல்லாம் மனிதரல்ல.. ஆறு வகையான மனிதர்கள்

உயிர்களில் உயர்வு தாழ்வு

ஆதியில் உயிர்கள் அனைத்தும் ஒரே பிரம்மத்தில் இருந்து தோன்றிய போதும் அவை பிறவிகள் தோறும் செய்த வினைகளின் பயனால் உயர்வு தாழ்வினைப் பெறுகின்றன.

உயிர்கள் தாம் செய்யும் நற்செயல்களால் மறுபிறவியில் மகிழ்வான உயிராகவும், உயிர்கள் செய்யும் தீய செயல்களால் மறுபிறவியில் துன்பத்தில் உழலும் உயிராகவும் பிறக்கின்றன.

சாதிகள்

சமூகத்தில் தொழில் முறையில் ஏற்படும் பகுப்பே சாதிகளாகின்றது. சாதிகளுக்கும் உயிர்களின் உயர்வு தாழ்விற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாத போதும், உயிர்கள் தம் அறியாமையாலும் முற்பிறவிகளின் பலன்களாலும் உயர்வு என்றும், தாழ்வு என்றும் மனப்பான்மை சார்ந்த நோய்களால் பீடிக்கப்படுகின்றன.

அனைத்துச் சாதிகளிலும் உடல் மனக் குறைபாடுகளுடனும், மகிழ்வின்றியும் உயிர்கள் பிறக்கின்றன. முற்பிறவியில் செய்த தீயவினைகளின் பயன்களால் இப்பிறவியை கடக்க முடியாத உயிர்கள் தம்மை உயர்வென்றும், தாழ்வென்றும் கருதி அறியாமையில் வாழ்கின்றன.

உயிர்களின் தன்மைகள்

உயிர்கள் தாம் கொண்ட இயல்பான உந்துதலின் அடிப்படையில் ஆறு வகையினராவர்.

பிறக்கும் போது அனைத்து உயிர்களும் ஒரே உந்துதலுடன் இருந்தாலும் அவை வளர்ந்து வருகையில் அவ்வுயிரின் இயல்பான உந்துதல் வெளிப்படுகின்றது. இவ் வகை உந்துதல்கள் உடலில் உள்ள சக்கரங்களின் தூண்டுதல்களைப் பொறுத்து மாறுபடுகின்றது.

முதல் வகையினர்/விலங்குகள்/மாக்கள்

உண்பதும், உறங்குவதும், உடல்சார்ந்த இச்சைகளை தீர்ப்பதுமே வாழ்க்கையின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்களுக்கு உண்பது உறங்குவது இச்சைகளை தீர்ப்பது என்பதைக் கடந்து ஏதொன்றும் இவ்வுலகில் தோன்றாது.

இரண்டாம் வகையினர்/வஞ்சகர்/பிறழ்மனர்

உண்பது உறங்குவது உடல் இச்சைகளை தீர்ப்பது என்பதைக் கடந்து உலகியல் பொருட்களை சேர்ப்பதும், உடமைகொள்வதுமே வாழ்வின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் உடலுழைப்பினால் பொருட்களை சேர்ப்பதில் ஈடுபாடு காட்டமாட்டார்கள். ஏனையவர்களை ஏமாற்றியும், தந்திரங்கள் செய்தும் சுகபோக வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.

மக்களை ஏமாற்ற உயிரற்ற பொருட்கள் முதல் கடவுள் வரை இவர்கள் பயன்படுத்துவார்கள். மக்களின் இயலாமை, அறியாமை, நம்பிக்கை என்பன இவர்களது மூலதனமாகும்.

மூன்றாவது வகையினர்/அசுரர்

கடின உழைப்பு, உடலுறுதி, நலத்துடனான வாழ்வு இவையே வாழ்வின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் வீரர்களாகவும் காணப்படுவார்கள்.

நான்காவது வகையினர்/ மனிதர்

அன்புடனும் அறிவுடனும் நேர்மையாக உழைத்து வாழ்வதே வாழ்வின் இலக்கெனக் கொண்ட உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் கடின உழைப்பை விட அறிவுபூர்வமாக சிந்தித்து இலகுவாக ஒரு செயலைச் செய்யும் ஆற்றல் மிக்கவர்கள்.

நுட்பமான அறிவு, தீரம் என்பன மிக்கவர்களாகவும் இறையாற்றலை உலக வாழ்விற்கு பயன்படுத்தும் வல்லமை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் தாம் அறிந்த வித்தைகளை, தமக்ககுக் கிட்டிய அறிவை ஏனையவர்களுக்கு போதிக்கும் மனப்பான்மை உடையவர்கள்.

ஐந்தாவது வகையினர்/ துறவியர்

தீய எண்ணங்கள், தீய உணர்வுகள், தீயசக்திகள், என்பவற்றை நீங்கி நின்று வாழ்வதே வாழ்வின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் தீமைகளில் இருந்து நீங்கும் பொருட்டு தீமை மிகுந்த சமூகத்தில் இருந்து விலகியோ சமூகத்துடன் ஒட்டின்றியோ இருப்பார்கள்.

இவர்கள் உலக வாழ்க்கையை அன்னியமாகக் கருதுவார்கள். அதில் இருந்து அன்னிப்பட்டே வாழ்வார்கள்.

ஆறாவது வகையினர்/ஞானியர்

அறிவு நிலையில் அனைத்தையும் உணர்ந்து வாழ்வதே வாழ்வின் இலக்கெனக் கொண்ட உயிர்கள் இவ்வகையினராவர்.

இவர்கள் நன்மை தீமை என்னும் நிலைகளைக் கடந்து நின்று வாழ்வார்கள். இவர்கள் உலக வாழ்க்கையை அன்னியமாகக் கருதுவதில்லை. உலகத்தில் நடப்பவற்றை அவ்வாறே ஏற்கக்கூடிய உயர்ந்த மனநிலையைப் பெற்றவர்கள்.

ஆனால் உயிர்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சனைகள், துன்பங்கள் என்பவற்றை அறிந்து அவற்றில் இருந்து விடுபடுவதற்கான உபாயங்களையும் வழிகாட்டுதல்களையும் செய்பவர்களாக இருப்பார்கள்.

இவர்களை நாடிச் செல்பவர்களுக்கு உலகியல் துன்பங்களில் இருந்து விடுபடும் அறிவை உணர்த்துவார்கள்.

உயிர்களின் உந்துதல் மாற்றம்

உயிர்கள் தான் கேட்டுக் கற்று அறிந்தவைகளை கிரகித்துத் தெளிவதன் மூலமாகவும், வேறு உயிர்களால் ஏற்படுத்தப்படும் தூண்டல்கள் தொடுகைகள் மூலமாகவும், இறை நம்பிக்கை மூலமாகவும் உந்துதல் மாற்றங்களை எய்துகின்றன.

தன்னில் உந்துதல் மாற்றம் ஏற்பட விரும்பாத உயிர்கள் ஏனைய உயிர்களை தொடாமல், இறைநம்பிக்கை கொள்ளாமல் தனித்தே வாழ்கின்றன.



Wednesday 27 July 2022

குலதெய்வத்தை கைவிட்டால் குலமே நாசமாகப் போய்விடும்

ஒரு மனிதன் தன்வாழ்வில் கைவிடக் கூடாதது அவனது குலதெய்வத்தையாகும். குலதெய்வம் என்பது கடவுள் அல்ல. அது எம் மூதாதையர்களின் ஆன்மாவாகும். 

நாம் கடவுளை வணங்கலாம் வணங்காமல் விடலாம். நாம் கடவுளை வணங்காமல் விட்டாலும் கடவுள் நமக்கு எந்த தீமையையோ துன்பத்தையோ தரப்போவதில்லை. ஆனால் குலதெய்வம் என்பது அவ்வாறானதல்ல, கைவிட்ட சந்ததிகளை அது வாழ விட்டதில்லை.

குலதெய்வத்தை நாம் வணங்காமல் விட்டாலும், குலதெய்வ ஆலயங்களை பராமரிக்காமல் விட்டாலும், குல தெய்வத்தை நிந்தனை செய்து பேசினாலும் அப்படி செய்பவரின் வாழ்வும் அவரது குல சந்ததிகளும் கெட்டழிந்து நாசமாகப் போய்விடும்.

பொதுவாக குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகியவர்களின் மூத்த பிள்ளையும், கடைசிப் பிள்ளையும் மிகவும் துன்பத்தையும், பிரச்சினைகளையும் சந்திக்கும். பொதுவாக எம் சமூக வழக்கத்தில் தந்தைவழி குலதெய்வம் மூத்த ஆண் பிள்ளைக்கும், தாயின்வழி குலதெய்வம் கடைசி ஆண்பிள்ளைக்கும் உரித்தானது. இதனாலேயே குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகிய குடும்பங்களில் மூத்த மற்றும் கடைசிப் பிள்ளைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

யாரெல்லாம் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்கள்? ஏன் கைவிடுகின்றனர்?

குலதெய்வத்தை வழிபடுவது நாகரிகக் குறைவு என்று நம்பவைக்கப்பட்டவர்கள், அன்னிய நாட்டவர்களின் பண்பாட்டு மோகத்தாலும், கலாச்சார சிதைப்பாலும் இந்த மண்ணின் வாழ்வியலில் இருந்து விலகியவர்கள், கடவுளை மட்டும் வணங்கினால் போதும் வேறு ஒன்றையும் வணங்கத் தேவையில்லை என்று தவறான போதனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், வேறு நாடுகளில் பிறந்து இறந்த மனிதர்களை ஆண்டவர் என்றும் அவர் மட்டுமே உண்மையான தேவன் என்றும் மூளைச்சலவை செய்து நம்பவைக்கப்பட்டவர்கள் ஆகியோர் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்கள் ஆவார்கள். தவறான வழிகாட்டல்கள், தவறான போதனைகள், தீய நபர்களின் மூளைச்சலவை என்பவற்றால் மக்கள் குலதெய்வ வழிபாட்டை கைவிடுகின்றார்கள்.

குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்களுக்கு என்ன நடக்கும்?

குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகிய சிறிது காலத்திற்கு சிலருக்கு எதுவும் தோன்றாதிருக்கலாம். வழமையைவிட வசதிவாய்ப்புக்கள் கூட கிடைக்கலாம். குலதெய்வம் என்பது எமது முன்னோர்களின் ஆன்மா என்பதால் தம்மை விட்டு, தம் வழிபாட்டை விட்டு விலகியவர்கள் ஏதோ துன்பத்தால், பிரச்சினையால் தம்மைவிட்டு நீங்கினார்கள் என்று கருதி அந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும், நல்லது நடப்பதற்கும் துணைநிற்கும். தம்மை விட்டு பிரச்சினைகளால் விலகியவர்கள் அந்த பிரச்சினை தீர்ந்தவுடன் தம்மிடம் வந்துவிடுவார்கள் என்று கருதியே அந்த குலதெய்வம் அவ்வாறு செய்யும். ஆனால் சிலர் அந்த குலதெய்வத்தை வழிபடுவதை விட்டு புதிய ஏதோ ஒன்றை நம்பியதால்தான், வழிபட்டதால்தான் தமக்கு நல்லது நடப்பதாக கருதியோ, அல்லது அவ்வாறு வேறுயாரவது ஒருவரால் நம்பவைக்கப்பட்டோ முழுவதுமாக குலதெய்வ வழிபாட்டை கைவிடுகின்றார்கள்.

அதனால் அதுவரை எமது நன்மைக்காக எமது குலங்களின் நன்மைக்காக செயற்பட்ட குலதெய்வங்கள் கோபம்கொள்ள ஆரம்பிக்கின்றன. தன்னை கைவிட்டவர், அவரது சந்ததிகள் என்று தொடர்ந்து பிரச்சினைகளையும் துன்பத்தையும் கொடுக்க ஆரம்பிக்கிறது. தீராத நோய்கள், குடும்பத்தில் பிரச்சினைகள், தவறான நடத்தை உடைய மனைவி பிள்ளைகள், பொருந்தாத திருமண வாழ்வு என்று அவரது சந்ததிகளே கொஞ்சம் கொஞ்சமாக நாசமாகிச் சிதைந்து போகின்றது.

பொதுவாக குலதெய்வ வழிபாட்டை கைவிட்ட சந்ததிகளின் மூத்த பிள்ளையும் கடைசிப் பிள்ளையும் நேரடியாக பிரச்சினைகள் துன்பங்களை அனுபவித்தாலும் இடையில் உள்ள பிள்ளைகள் குறைந்த பிரச்சினைகளையே நேரடியாக சந்திக்கின்றன. ஆனால் அவர்களின் பிள்ளைகளோ தீராத நோய்கள்,குறைபாடுகள், தீய பழக்கங்கள் என்று சீரழிந்து போகின்றன.

மேற்கூறியவற்றை நீங்களே உங்கள் சமூகத்தில், உங்கள் அயலவர்களில் மதமாற்றம், நாகரிகம் என்ற பெயரால் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்களின் குடும்பங்களில் கண்கூடாகக் காணலாம். 

குலதெய்வ வழிபாட்டை என் முன்னோர்கள் கைவிட்டு விட்டார்கள்? நான் என்ன செய்வது?

உங்கள் உறவினர்கள் யாரேனும் இன்னும் குலதெய்வ வழிபாட்டை கைவிடாமல் எங்கோ பின்பற்றுவார்கள். அவர்களிடம் சென்றறிந்து உங்கள் குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்கலாம். 

அவ்வாறு உறவினர்கள் யாரும் தெரிந்தவரை இல்லை, அவ்வாறு யாரும் வழிபடவுமில்லை என்றால், உண்மையில் உங்களுக்கு குலதெய்வத்தை கண்டறியவேண்டும், வழிபட்டு உங்கள் குலசாபத்தை நீக்கவேண்டும் என்று விருப்பிருந்தால் கனவு அல்லது நனவில் தோன்றி அந்த குலதெய்வமே தன்னை அடையாளம் காட்டும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்கி குலசாபத்தை நீக்கலாம்.

அவ்வாறும் கண்டறிய முடியவில்லை என்றால் எம்மையோ அல்லது பொருத்தமான நபர்களையோ தொடர்பு கொண்டு உங்கள் குலதெய்வத்தை கண்டுபிடிப்பதற்கான உதவியினைப் பெறலாம்.

சிவகாலநாதன்
காலங்கிபீடம்