உயிர்களில் உயர்வு தாழ்வு
ஆதியில் உயிர்கள் அனைத்தும் ஒரே பிரம்மத்தில் இருந்து தோன்றிய போதும் அவை பிறவிகள் தோறும் செய்த வினைகளின் பயனால் உயர்வு தாழ்வினைப் பெறுகின்றன.
உயிர்கள் தாம் செய்யும் நற்செயல்களால் மறுபிறவியில் மகிழ்வான உயிராகவும், உயிர்கள் செய்யும் தீய செயல்களால் மறுபிறவியில் துன்பத்தில் உழலும் உயிராகவும் பிறக்கின்றன.
சாதிகள்
சமூகத்தில் தொழில் முறையில் ஏற்படும் பகுப்பே சாதிகளாகின்றது. சாதிகளுக்கும் உயிர்களின் உயர்வு தாழ்விற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாத போதும், உயிர்கள் தம் அறியாமையாலும் முற்பிறவிகளின் பலன்களாலும் உயர்வு என்றும், தாழ்வு என்றும் மனப்பான்மை சார்ந்த நோய்களால் பீடிக்கப்படுகின்றன.
அனைத்துச் சாதிகளிலும் உடல் மனக் குறைபாடுகளுடனும், மகிழ்வின்றியும் உயிர்கள் பிறக்கின்றன. முற்பிறவியில் செய்த தீயவினைகளின் பயன்களால் இப்பிறவியை கடக்க முடியாத உயிர்கள் தம்மை உயர்வென்றும், தாழ்வென்றும் கருதி அறியாமையில் வாழ்கின்றன.
உயிர்களின் தன்மைகள்
உயிர்கள் தாம் கொண்ட இயல்பான உந்துதலின் அடிப்படையில் ஆறு வகையினராவர்.
பிறக்கும் போது அனைத்து உயிர்களும் ஒரே உந்துதலுடன் இருந்தாலும் அவை வளர்ந்து வருகையில் அவ்வுயிரின் இயல்பான உந்துதல் வெளிப்படுகின்றது. இவ் வகை உந்துதல்கள் உடலில் உள்ள சக்கரங்களின் தூண்டுதல்களைப் பொறுத்து மாறுபடுகின்றது.
முதல் வகையினர்/விலங்குகள்/மாக்கள்
உண்பதும், உறங்குவதும், உடல்சார்ந்த இச்சைகளை தீர்ப்பதுமே வாழ்க்கையின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.
இவர்களுக்கு உண்பது உறங்குவது இச்சைகளை தீர்ப்பது என்பதைக் கடந்து ஏதொன்றும் இவ்வுலகில் தோன்றாது.
இரண்டாம் வகையினர்/வஞ்சகர்/பிறழ்மனர்
உண்பது உறங்குவது உடல் இச்சைகளை தீர்ப்பது என்பதைக் கடந்து உலகியல் பொருட்களை சேர்ப்பதும், உடமைகொள்வதுமே வாழ்வின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.
இவர்கள் உடலுழைப்பினால் பொருட்களை சேர்ப்பதில் ஈடுபாடு காட்டமாட்டார்கள். ஏனையவர்களை ஏமாற்றியும், தந்திரங்கள் செய்தும் சுகபோக வாழ்க்கையை வாழ விரும்புவார்கள்.
மக்களை ஏமாற்ற உயிரற்ற பொருட்கள் முதல் கடவுள் வரை இவர்கள் பயன்படுத்துவார்கள். மக்களின் இயலாமை, அறியாமை, நம்பிக்கை என்பன இவர்களது மூலதனமாகும்.
மூன்றாவது வகையினர்/அசுரர்
கடின உழைப்பு, உடலுறுதி, நலத்துடனான வாழ்வு இவையே வாழ்வின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.
இவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் வீரர்களாகவும் காணப்படுவார்கள்.
நான்காவது வகையினர்/ மனிதர்
அன்புடனும் அறிவுடனும் நேர்மையாக உழைத்து வாழ்வதே வாழ்வின் இலக்கெனக் கொண்ட உயிர்கள் இவ்வகையினராவர்.
இவர்கள் கடின உழைப்பை விட அறிவுபூர்வமாக சிந்தித்து இலகுவாக ஒரு செயலைச் செய்யும் ஆற்றல் மிக்கவர்கள்.
நுட்பமான அறிவு, தீரம் என்பன மிக்கவர்களாகவும் இறையாற்றலை உலக வாழ்விற்கு பயன்படுத்தும் வல்லமை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தாம் அறிந்த வித்தைகளை, தமக்ககுக் கிட்டிய அறிவை ஏனையவர்களுக்கு போதிக்கும் மனப்பான்மை உடையவர்கள்.
ஐந்தாவது வகையினர்/ துறவியர்
தீய எண்ணங்கள், தீய உணர்வுகள், தீயசக்திகள், என்பவற்றை நீங்கி நின்று வாழ்வதே வாழ்வின் இலக்கெனக் கொண்டு வாழும் உயிர்கள் இவ்வகையினராவர்.
இவர்கள் தீமைகளில் இருந்து நீங்கும் பொருட்டு தீமை மிகுந்த சமூகத்தில் இருந்து விலகியோ சமூகத்துடன் ஒட்டின்றியோ இருப்பார்கள்.
இவர்கள் உலக வாழ்க்கையை அன்னியமாகக் கருதுவார்கள். அதில் இருந்து அன்னிப்பட்டே வாழ்வார்கள்.
ஆறாவது வகையினர்/ஞானியர்
அறிவு நிலையில் அனைத்தையும் உணர்ந்து வாழ்வதே வாழ்வின் இலக்கெனக் கொண்ட உயிர்கள் இவ்வகையினராவர்.
இவர்கள் நன்மை தீமை என்னும் நிலைகளைக் கடந்து நின்று வாழ்வார்கள். இவர்கள் உலக வாழ்க்கையை அன்னியமாகக் கருதுவதில்லை. உலகத்தில் நடப்பவற்றை அவ்வாறே ஏற்கக்கூடிய உயர்ந்த மனநிலையைப் பெற்றவர்கள்.
ஆனால் உயிர்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சனைகள், துன்பங்கள் என்பவற்றை அறிந்து அவற்றில் இருந்து விடுபடுவதற்கான உபாயங்களையும் வழிகாட்டுதல்களையும் செய்பவர்களாக இருப்பார்கள்.
இவர்களை நாடிச் செல்பவர்களுக்கு உலகியல் துன்பங்களில் இருந்து விடுபடும் அறிவை உணர்த்துவார்கள்.
உயிர்களின் உந்துதல் மாற்றம்
உயிர்கள் தான் கேட்டுக் கற்று அறிந்தவைகளை கிரகித்துத் தெளிவதன் மூலமாகவும், வேறு உயிர்களால் ஏற்படுத்தப்படும் தூண்டல்கள் தொடுகைகள் மூலமாகவும், இறை நம்பிக்கை மூலமாகவும் உந்துதல் மாற்றங்களை எய்துகின்றன.
தன்னில் உந்துதல் மாற்றம் ஏற்பட விரும்பாத உயிர்கள் ஏனைய உயிர்களை தொடாமல், இறைநம்பிக்கை கொள்ளாமல் தனித்தே வாழ்கின்றன.