Thursday, 24 November 2022

உயிர்த்தெழுந்த மன்மதன்-காமன் பண்டிகை வரலாறு

இதுவரையில் ஈரேழு உலகத்திலும் இப்படி ஒரு பெண் பிள்ளை பிறந்ததில்லை, அவ்வளவு அழகு. கோடி சூரியன்களின் பிரகாசமும், கோடி சந்திரன்களின் அமைதியும் அவள் முகத்தில் குடிகொண்டிருந்தது. அறிவு, அழகு என்று அனைத்திலும் அவளுக்கு நிகர் அவள் மட்டுமே. எந்த ஒன்றிலும் ஒப்பிட முடியாத தனித்தன்மையுடன் இருந்தாள் ரதி. ஈஸ்வரனுக்கும், பார்வதிக்கும் பிறந்த குழந்தையல்லவா அவள். அவளுக்கு ஏது குறைவிருக்கும்.

ரதி பருவ வயதை அடைந்து விட்டாலும் அவளை பெற்ற ஈஸ்வரனுக்கும், பார்வதிக்கும் அது தோன்றவே இல்லை. பரமாளும் கடவுள் என்றாலும் பெற்றவர்களுக்கு பிள்ளைகள் எப்போதும்  குழந்தைகள தானே. ஆனால் நாரதர் கண்களுக்கு அது உறுத்திக் கொண்டு இருந்தது. கைலாயத்தில் இருக்கும் பேரழகின் செய்தியைக் காவிக்கொண்டு ஆரோக்கியபுரத்திற்கு சென்றார்.

ஆரோக்கியபுரத்தின் அரசன் மன்மதன். மாயவனுக்கும் மகாலட்சுமிக்கும் மகனாக வைகுண்டத்தில் பிறந்தவன். ரதிக்காகவே பிறந்தவன் போல் அப்படி ஒரு ஆணழகன். இந்த ஈரேழு உலகத்தில் இவனால் சஞ்சலப்படாதவர் ஒருவர் கூட இல்லை. அப்படியான மன்மதன் தனக்கான நாடாக ஆரோக்கியபுரத்தை உருவாக்கி அதனை ஆட்சிசெய்து வருகிறான். 

மன்மதனிடம் வந்த நாரதர் ரதி தேவியின் பேரழகைப்பற்றிக் கூறி உனக்கு ஏற்றவள் அவள்தான், ஏன் உனக்கானவள் அவள்தான் என்றே வைத்துக் கொள் என்று கூறி ஆசையை தூண்டினார். எல்லோரையும் சஞ்சலப்பட வைக்கும் மன்மதனே இப்போது சஞ்சலம் அடைந்து நின்றான். ஒருபோதும் ரதியை காணாதவன் அவள் அழகை கற்பனையில் உருச்செய்து உருகிநின்றான். நாரதர் ஆரோக்கியபுரம் வந்த வேலை  முடிந்தது. அடுத்து வைகுண்டம் நோக்கி புறப்பட்டார்.

வைகுண்டம் வந்த நாரதர் தன் வேலையை அங்கேயும் ஆரம்பித்தார். "அங்கே மன்மதன் மனவேதனையில் இருக்கிறான், நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறீர்கள்" என்று பொடிவைத்துப் பேச்சை ஆரம்பித்தார். 

"சுற்றி வளைக்காமல் விசயத்திற்கு வாரும் நாரதரே.. என்ன கலகம் உண்டாக்க வந்தீர், மன்மதனுக்கு அப்படி என்ன மனவேதனை" என்று சிரித்துக் கொண்டே கேட்டார் மாயவன்.

"கலகம் ஒன்றும் இல்லை பிரபு, வரும் வழியில் ஆரோக்கியபுரத்திற்கு சென்றேன். மன்மதன் மணவயதை அடைந்தும் தனியாக இருக்கிறான். அவனுக்கு ஏற்ற ஒரே பெண் கைலாயத்தில் இருக்கும் எம்பெருமான் ஈஸ்வரனின் மகள் ரதி ஒருத்திதான். மன்மதனும் அவளை நினைத்தே மனம் உருகிக் கொண்டிருக்கிறான்" என்று வந்த விடயத்தை ஒரே மூச்சில் சுருக்கமாக சொல்லி முடித்தார்.

மன்மதன் மணவயதை அடைந்துவிட்டான் என்பது மாயவனுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. "நாரதரே.. நீர் சொல்வதும் சரிதான்.  ஈஸ்வரரிடம் சென்று பெண்கேட்டு வருவோம், இப்போதே புறப்படுவோம்" என்று சொல்லி நாரதரையும் அழைத்துக் கொண்டு மகாலட்சுமியுடன் புறப்பட்டார்.

கைலாயம் சென்றவர்கள் ரதியின் பேரழகைக்கண்டு சொக்கி நின்றார்கள். தங்கள் மகன் மன்மதனுக்கு ரதியை மணமுடித்து வைக்கவேண்டும் என்று ஈஸ்வரரிடம் வேண்டினார்கள். அதற்கு ஈஸ்வரரோ எனக்கு எந்த விருப்பு வெறுப்பும் கிடையாது. அது ரதியின் விருப்பம். அவள் சம்மதித்தால் திருமணம் நடக்கும் என்றார்.

ரதியை மன்மதனுக்கு மணமுடித்து வைப்பதில் பார்வதிக்கும் விருப்பம். அண்ணன் மகன் மன்மதனையே மணமுடிக்க வேண்டும் என்று ரதியிடம் கூறினார். அவள் தாய் சொல்லை மீறவில்லை. மன்மதனை திருமணம் செய்ய சம்மதித்தாள்.

மாசித் திங்கள் பதினெட்டாம் நாளில் திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகள் எல்லாம் கோலாகலமாக நடந்தது. கைலாயம், வைகுண்டம் மட்டுமல்லாமல் ஈரேழு உலகங்களும் விழாக்கோலம் பூண்டது. இதுவரையில் இப்படி ஓர் திருமணம் நடந்ததில்லை என்று சொல்லும் வகையில் ரதி மன்மதன் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த பின்னர் மன்மதன் ரதியுடன் ஆரோக்கியபுரத்திற்கு சென்றுவிட்டான். ஈஸ்வரரும் ஆழ்ந்த தியானத்தில்  மூழ்கிவிட்டார். உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் உலகியல் இன்பங்களில் மூழ்கிவிட்டார்கள்.

ஈஸ்வரரின் இந்த ஆழ்ந்த தியானத்தால் அனைத்து உலகங்களும் நிலைகுலைந்து போனது. சக்தியால் எந்த ஒரு செயலையும் ஒழுங்கு செய்ய முடியவில்லை. நாற்பத்தெட்டாயிரம் பிரம்மாக்களும் நாற்பத்தெட்டாயிரம் விஷ்ணுக்களும் செய்வதறியாது தவித்தனர்.

தேவர்கள் எல்லோரும் சென்று தேவேந்திரனிடம் முறையிட்டார்கள். உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கி சீரழிந்து நிற்கிறது. அவை அனைத்தும் சீராக இயங்க எப்படியாவது ஈஸ்வரரின் தியானத்தை கலைக்க வேண்டும் என்று வேண்டினார்கள். 

ஈஸ்வரரின் பார்வை பட்டால் மாத்திரமே இந்த உலகங்கள் அனைத்தும் சீர்பெறும், ஆனால் ஈஸ்வரரின் தியானத்தை யாரால் கலைக்க முடியும்.  அவ்வாறு சிந்தித்து கொண்டிருந்த இந்திரன் முன்பு நாரதர் வந்தார். மன்மதன் ஒருவனால் மாத்திரமே அது முடியும். மன்மதனை அழைத்து ஈஸ்வரரின் தியானத்தை கலைக்க வேண்டும் என்று சொல் என்றார்.

இந்திர சபைக்கு மன்மதனை அழைத்த இந்திரன், ஈஸ்வரரின் தியானத்தை கலைக்க வேண்டும் என்று வேண்டினார். ஸ்தம்பித்து நிற்கும் பிரபஞ்சங்கள் அனைத்தும் ஒழுங்காக இயங்க ஈஸ்வரரின் தியானத்தை கலைத்தே ஆகவேண்டும் அது உன்னால் மட்டுமே முடியும் என்றார். மன்மதனால் மறுக்க முடியவில்லை, சம்மதித்துப் புறப்பட்டான். விடயம் அறிந்த ரதி தேவி பதறிப்போய் மன்மதனைத் தடுத்தாள். ஈஸ்வரரின் தியானத்தை கலைத்தால் அவரின் சினத்தால் நீங்கள் அழிந்து போவீர்கள். தயவுசெய்து அந்த முயற்சியை கைவிட்டு விடுங்கள் என்றாள்.

மன்மதன் பிடிவாதமாக இருந்தான். நான் இந்திரருக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். கொடுத்த வாக்கை என்னால் மீற முடியாது. அதுதவிர ஈரேழு உலகங்களும் நன்மை அடையும் என்றால் என்னை இழக்கவும் தயாராக உள்ளேன் என்றான். ரதி எவ்வளவோ கெஞ்சியும், தடுத்தும் ஒன்றும் முடியவில்லை. 

மன்மதன் தன்னுடைய கிளிவாகனத்தில் ஏறி தென்றல் தேரில் புறப்பட்டான். மீன்கொடி பட்டொளி வீசிப் பறந்தது. கையில் கரும்பு வில், நாணாக தேன் வண்டுகள், ஐமலர் அம்புகள் என்று அவனொரு விசித்திரமான போர்வீரனாக காட்சி அளித்தான். படைகளும் ஆயுதங்களும் இல்லாத ஆரோக்கியபுரத்தில் இருந்து பேரெழில் மின்னும் ஒரு வித்தியாசமான தாக்குதலாளன். 

மாசி மாத முழுமதி நாளில் ஈஸ்வரரின் இருப்பிடத்தை அடைந்தான். அவரின் தியானத்தை கலைக்க ஏதேதோ செய்து பார்த்தான். ஆத்திரமூட்டும் வகையில் ஏகடியம் எல்லாம் பேசினான். ஆனால் எதற்கும் எந்த சலனமும் இல்லை. கடைசியில் தன் கரும்பு லில்லை எடுத்து மலர்க்கணைகளை நாணேற்றி அவர்மீது எய்தான். ஈஸ்வரரின் தியானம் கலைந்தது. அவர் நெற்றிக் கண்ணைத் திறந்தார்.  மன்மதன் அந்த அனலில் கருகி சாம்பலாகிப் போனான்.

தகவல் அறிந்து ரதியும், வானவர்களும், ஈரேழு உலகங்களில் உள்ளவர்களும் வருந்தினார்கள். மாயவன் இந்திரன் முதலான வானவர்களும் ரதியும் ஈஸ்வரரிடம் சென்றார்கள். மன்மதனை உயிர்ப்பித்து அருள வேண்டும் என்று வேண்டினார்கள். 

மன்மதன் இறந்த மூன்றாம் நாள், மாசித்திங்கள் முழுநிலவை அடுத்த மூன்றாம் நாள், ரதியின் கண்களுக்கு மட்டுமே மன்மதன் தெரிவான், வேறு எவர் கண்களுக்கும் அவன் தோன்றமாட்டான் என்று கூறி ரதியை வாழ்த்தி மன்மதனை உயிர்ப்பித்தார் ஈஸ்வரர். 

இறந்த மூன்றாம் நாளில் உயிர்பெற்று எழுந்தான் மன்மதன். அதுதான் அவர்களின் மணநாளும் கூட. மன்மதன் ரதியை அழைத்துக் கொண்டு மீண்டும் ஆரோக்கியபுரத்திற்கு சென்றான். மன்மதன் மீண்டும் உயிர்பெற்று எழுந்த செய்தியை அறிந்து ஈரேழு உலகங்களில் வசிப்பவர்களும் மகிழ்ந்தார்கள்.

இந்த நாளே மன்மதன் உயிர்த்தெழுந்த நாள் என்றும், ரதி-மன்மதன் திருமண நாள் என்றும் கொண்டாடப்படுகிறது. காமன் பண்டிகையின் கடைசி நாள் மன்மதன் உயிர்த்தெழுந்து ரதியுடன் மீண்டும் சேர்தல் என்பதுடன் முடிவடைகிறது.

வரலாற்று குறிப்புகள்:

*காமன்விழா மாசிமாத அமாவாசை தினத்தில் ஆரம்பித்து பௌர்ணமி முடிந்து மூன்று நாட்கள் வரையில் கொண்டாடப்படுகிறது.

*ஈஸ்வரரின் தியானத்தை கலைத்து அவரின் நெற்றிக் கண் அனலில் மன்மதன் சாம்பலான நாள் மாசிமாத பௌர்ணமி நாளாகும்.

*மாசிமாத பௌர்ணமியை அடுத்த மூன்றாம் நாள் ரதி-மன்மதன் திருமண நாள். அன்றுதான் மன்மதன் மீண்டும் உயிர்த்தெழுந்து ரதியினை அடைந்த நாள்.

*கிரேக்க, ரோமானிய நாகரிகத்தில் ஹெய்ரோஸ்/ஈரோஸ்/குபிட் என்று மன்மதனும் ,அப்ரோடைட், சைக் என்று ரதியும் குறிப்பிடப்படுகிறது.


தத்துவார்த்த குறிப்புகள்:

*ஈஸ்வரர் என்பது அறிவின் குறியீடு. அறிவு கண்களை மூடும் போது உலக ஒழுங்கு சீர்கெட்டு விடுகிறது.

*மன்மதன் என்பது காமத்தின் குறியீடு. காமம் தவறானது இல்லை என்றபோதும் அது வெளிப்படையாக மாறும் போது உலக ஒழுங்கு சீர் கெட்டுவிடும். 

*காமத்தை தவிர்த்து விட்டு அறிவை மட்டும் கொண்டு உலகம் இயங்க முடியாது. ஆனால் காமம் எல்லோருக்கும் தெரியாமல் உரியவர்க்கு மட்டுமே தெரிய வேண்டும்.

*உண்மையான அறிவு காமத்தை அழித்துவிடும்.

*ரதி என்றால் எல்லோராலும் விரும்பப்படுவது என்று பொருள். அறிவும் ஆற்றலும் எல்லோராலும் விரும்பப்படுவது. சிவன் சக்தி என்பது அறிவு ஆற்றல் என்பவற்றை குறிக்கும்.

*காமம் என்பது மாயையில் இருந்து தோன்றுவது. மாயவனின் மைந்தன் மன்மதன் என்பது காமம் மாயையில் இருந்து பிறப்பது என்பதாகும்.

*ஆரோககியபுரத்தின் அரசன் மன்மதன். ஆரோக்கியம் இல்லை என்றால் அங்கு காமம் தோன்றாது. ஆரோக்கியமாக இருக்கும் வரையிலேயே காமம் இருக்கும்.















No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...