தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய புரியாத புதிராகவே இந்த கேள்வி உருவாக்கப்பட்டுள்ளது.
பூனூல் போட்டு கோயிலில் பூசை செய்பவர்கள் எல்லோரும் பிராமணர்கள் என்று நம்பும் அல்லது நம்பவைக்கப்பட்ட ஒரு பெரும் சமூகம் இங்கு இருந்தாலும், தாங்கள் மட்டுமே உண்மையான பிராமணர்கள் என்று கூறுகின்றனர் தமிழகத்தில் உள்ள ஐயர், ஐயங்கார் ஜாதியினர்.
தமிழ் நாட்டில் உள்ள ஐயர், ஐயங்கார் என அழைக்கப்படும் ஜாதிகள் தங்களை பிராமணர்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். உண்மையில் அவர்கள் பிராமணர்கள் கிடையாது.
பண்டைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்பவர்களைப்பற்றி பேசுகின்றது. பலரும் பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்பவர்களே பிராமணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள். தங்களை பிராமணர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் ஐயர், ஐயங்கார் ஜாதிகளும் அவ்வாறே சித்தரிக்க முனைகின்றார்கள்.
இன்று பிராமணர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜாதிகள் தாங்கள் வேதகாலத்தில் இருந்து வரும் தொன்மையான மரபை பின்பற்றுபவர்கள் என்றும் பல்லாயிரம் வருட பழமையான பாரம்பரியததிற்கு சொந்தக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அவை எதுவும் உண்மை கிடையாது.
யார் இந்த ஐயர் ஐயங்கார் என அழைக்கப்படும் ஜாதிகள்?
ஐயர் ஜாதி என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜாதிகள் சங்கர மடத்தைப் பின்பற்றும், கடவுள் மறுப்பு அல்லது ஏகான்ம வாதம் எனப்படும் கோட்பாட்டைப் பின்பற்றும் ஒரு குழுவினராவார்கள். இவர்கள் கடவுள் என்று ஒன்று இருப்பதை மறுக்கும் குழுவினராவார்கள். அவர்கள் ஆன்மா பரமான்மா இரண்டும் ஒன்றே என்றும் தமது ஆன்மாவே பரான்மாவாகவும் உள்ளது என்றும் தம் ஆன்மாவை தவிர வேறு கடவுள் இல்லை என்றும் நம்பும் ஏகான்மவாதிகளாவார்கள்.
இந்த ஏகான்மவாதம் என்பது இந்தியாவில் இருந்து தோற்று அழிந்துபோன சமண மத வாதங்களின் எச்சங்கள் ஆகும். தோற்றுப் போன சமண மதங்களை சேர்ந்தவர்கள் தங்களை சிவபக்தர்களாக வேடந்தரித்துக்கொண்டு, தங்களது நாத்திக கோட்பாடுகளை பின்பற்றும், பரப்பும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டனர். அவர்களே தங்களைப் பிராமணர்கள் என்றும் ஐயர்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கின்ற ஜாதியினர் ஆவார்கள். இவர்களின் ஆரம்பம் சமண மதங்கள் தோற்கடிக்கப்பட்ட எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து ஆரம்பமாகிறது.
சங்கர மடத்தைப் பின்பற்றும், சங்கரர் உருவாக்கிய கோட்பாடுகளை மரபுகளை பின்பற்றுபவர்கள் தங்களை வேதகால பண்பாட்டின் தொடர்ச்சியாக, வேதகால முனிவர்களின் வம்சங்கள் என்றோ கோததிரங்கள் என்றோ சொல்லிக் கொள்வது மிகவும் மோசடியான செயலாகும். எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான ஒரு மரபை பின்பற்றுபவர்கள் எப்படி வேதகால பண்பாட்டின் தொடர்ச்சியாக இருக்க முடியும்? சங்கர மடத்தைப் பின்பற்றும், ஆன்மா பரமான்மா இரண்டும் ஒன்றே என்று கூறும் கடவுள் மறுப்பு வாதத்தை பின்பற்றும் ஐயர் ஜாதி என்று கூறிக்கொள்ளும் குழுவினர் உண்மையான பிராமணர்கள் கிடையாது. அவர்கள் தமிழின் பண்டைய இலக்கண இலக்கிய நூல்கள் கூறும் பார்ப்பனர்கள் அந்தணர்கள் கிடையாது.
ஐயங்கார் ஜாதி என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் வைணவ சமயவாதிகள் கடவுளை மறுத்து மாயையை கடவுள் என்று நம்பும் நம்பிக்கையாளர்கள். இந்துக்களின் சித்தாந்த தத்துவங்கள் கடவுள் உயிர்கள் மலங்கள் மூன்றும் நிலையானவை என்றும் அவை யாராலும் படைக்கப்படுவதில்லை என்றும் கூறுகின்றன. உயிர்களிடமிருந்து கடவுளை மறைத்து நிற்பவை மலங்கள் என்றும் கூறுகின்றன. இந்த அண்டம் முதலான அனைத்தும் மலங்களில் நின்று தோன்றுகின்றன என்றும், மாயை என்னும் பொருள் மூலமே அண்டத்தின் தோற்றத்திற்கு மூலகாரணம் என்றும், கடவுள் அண்டம் தோன்றுவதற்கான நிமித்த காரணமாகவும் கடவுளின் ஆற்றல் துணைக்காரணமாகவும் உள்ளது என்றும் கூறும்.
ஒரு சிற்பியால் செய்யப்படும் சிலையில் கல் என்பது மூலப்பொருளுளாகவும் முதற் காரணமாகவும் உள்ளது, சிற்பியின் சிலையைச் செய்யும் அறிவை நிமித்த காரணமாகவும், சிலையைச் செய்வதற்கான சிற்பியின் ஆற்றலை சிற்பியின் துணைக் காரணம் என்றும் கொள்ளலாம். சிற்பியின் சிலைசெய்யும் அறிவும், ஆற்றலும் இல்லாமல் ஒரு சிலையினைச் செய்ய முடியாது. அந்த சிற்பியானவன் வேறு நபர்களுக்கு தன் சிற்பம் செய்யும் அறிவைப் புகட்டியும், அவர்களுக்கு ஆகாரங்களை அளித்து அவர்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கியும் வேண்டுமானால் சிலைகளைக் செய்யலாம்.
கடவுளின் பேரறிவில் இருந்து அறிவையும், பேராற்றலில் இருந்து ஆற்றலையும் பெறும் உயிர்கள் மாயையுடன் சேர்ந்து செயல்களை செய்கின்றன. செயல்கள் அனைத்திற்கும் மாயை முதற்காரணமாகவும், அறிவும் ஆற்றலும் நிமித்த காரணமாகவும் துணைக் காரணமாகவும் உள்ளன. செய்பவையாக உயிர்கள் உள்ளன.
அறிவோ, ஆற்றலோ இல்லாமல் வெறும் மாயையால் எதையுமே செய்ய முடியாது. மாயை என்பது வெறும் பொருள் சார்ந்தது. அறிவும் ஆற்றலும் இல்லாமல் மூலப்பொருளால் எதையுமே செய்ய முடியாது. ஒரு சிற்பம் உருவாக சிற்பியின் அறிவும் ஆற்றலும் எப்படி அவசியமோ அதுபோல இந்த அண்டத்தில் உள்ள அனைத்தினதும் இயக்கத்திற்கு கடவுளின் பேரறிவும் பேராற்றலும் அவசியம். வெறும் கல்லால் எப்படி சிலையாக முடியாதோ அவ்வாறே மாயையால் எதையுமே செய்ய முடியாது.
ஆனால் இந்த வைணவ கோட்பாட்டாளர்களோ மாயையே மூலமாகவும், முதற்காரணமாகவும் இருப்பதால் அதுவே கடவுள் என்று நம்புகிறார்கள். அவர்களில் சிலர் அறிவுடன் கூடிய மாயையே கடவுள் என்று கற்பிதம் செய்கிறார்கள். இங்கு இந்துக்களாகிய நாம் மாயையை மாயவன் என்றும் அதுவே உயிர்களது அறிவை மயக்கி அறிவிற்கு இருளை தருவதால் மால் (கிருஷ்ணன்/கறுப்பன்) என்றும் குறிக்கின்றோம்.
நாம் மாயையை வெறுப்பதில்லை, இந்த மாயை சார்ந்த அதாவது பொருள் சார்ந்த வாழ்வில் மாயையே முதற் காரணமாகவும், மூல காரணமாகவும் இருப்பதால் அதனைப் போற்றிப் புகழ்ந்து நன்றி செலுத்தியே வந்துள்ளோம். ஆனால் பொருள் மீதான மயக்கத்தில் கடவுளை மறுத்து மாயையே போதும் என்றோ மாயையே கடவுள் என்றோ ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இந்த வைணவ கோட்பாட்டாளர்கள் மாயையோ, சேர்மாயையோ கடவுள் என்று வாதம் செய்து இறைமறுப்பு செய்கின்றனர்.
பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், பதின் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மத்வர் போன்றோர் உருவாக்கி வளர்த்த மாயாவாத கோட்பாட்டைப் பின்பற்றும் வைணவ ஐயங்கார்கள் ஒருபோதும் வேத பாரம்பரிய பிராமணர்களாக இருக்க முடியாது. வேத நூல்கள் தேவதை என்று சொல்லி பலநூறு பாடல்களில் வரையறுத்த விஷ்ணு போன்ற தேவதைகளை, கடவுள் என்று கூறி வேத மறுப்பை செய்யும் வைணவ ஐயங்கார்கள் வேதபாரம்பரிய பார்ப்பனர்களாகவோ, அந்தணர்களாகவோ இருக்க முடியாது.
எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சங்கர மடத்தின் அத்வைத கோட்பாட்டாளர்களில் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளார்கள், சேர்ந்துள்ளார்கள். சங்கரரின் ஞானகுருவாக இருந்தவரே ஒரு சணடாளர் என்று சங்கர விஜயம் கூறுகிறது. அதுபோலவே ராமானுஜரும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களையும் தனது சீடர்களாக்கினார், மடங்களுக்கு அதிபதியாக நியமித்தார் என்று வைணவ நூலாசிரியர்களே குறிப்பிடுகின்றனர்.
இவை அனைத்தையும் ஒருசேர தொகுத்துப் பார்த்தால் பண்டைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் குறிப்பிடும் பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்பவர்கள், எட்டாம் நூற்றாண்டிலும் பதினோராம் நூற்றாண்டிலும் உருவான ஐயர், ஐயங்கார் ஜாதிகளாக இருக்க முடியாது. பண்டைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் பொது நூற்றாண்டின் முன் தோன்றியவை. அவ்வாறு பழைமையான நூல்கள் பொது நூற்றாண்டின் ஆயிரம் ஆண்டுகள் பிந்தி உண்டான ஜாதிகளைப்பற்றி குறிப்பிட்டிருக்க முடியாது.
இங்கே ஐயர் ஐயங்கார் என கூறும் ஜாதிகள் பின்பற்றும் தத்துவங்கள் சரியா தவறா என்பது கூட முதன்மையான வாதமாக இருக்க முடியாது. வாதம் எதுவென்றால் எட்டாம், பதினோராம் நூற்றாண்டுகளில் உண்டான ஒரு குழுவினர் வேதகாலத்தில் இருந்து தொடரும் முனிவர்களின் வம்சங்களோ கோத்திரங்களோ அல்லர் என்பதும், தமிழின் பண்டைய நூல்கள் கூறும் அந்தணர்கள் பார்ப்பனர்கள் இவர்களில்லை என்பதுமேயாம்.
இவர்கள் சிவனை வணங்குகின்றனர், பெருமாளை வணங்குகின்றனர் அதனால் இவர்களும் இந்துக்கள்தான் என்பதும் ஏற்புடைய வாதமாக இருக்க முடியாது. அப்படி அவர்களை இந்துக்களாக ஏற்றால் பிதா சுதன் பரிசுத்த ஆவி என்று கூறிக்கொண்டு, சிவனை முதற் சித்தர் என்று சித்தரித்து வேறோர் நபரை கடவுள் என்று சித்தரிக்க முனையும் கூட்டத்தையும் இந்துக்களாக ஏற்கும் துர்ப்பாக்கிய நிலை நாளை ஏற்படும்.
மரபு என்பது எம் முன்னோர்கள் எமக்குத் தந்ததை அதன் அடிப்படை மாறாமல் பின்பற்றுவதாகும். வேத நூல்கள் தேவதை என்று விஷ்ணுவை குறிப்பிடுகிறது, சங்க இலக்கியங்கள் திணை நிலைத்து தெய்வங்களில் ஒன்று என்று திருமாலை குறிக்கிறது. மரபு என்பது யாதெனில் எம் வேதநூல்களும் சங்க இலக்கியங்களும் குறிப்பிட்ட வாறே தேவதையாக, திணைத்தெய்வமாக போற்றி வழிபடுபவர்களே உண்மையில் பண்டைய மரபைச் சேர்ந்தவர்கள். அவ்வாறில்லாமல் தேவதையை திணைத்தெய்வத்தை கடவுள் என்று கூறுபவர்கள் மரபில் இருந்து நழுவிய கூட்டத்தினராவர். இவ்வாறு மரபில் இருந்து நீங்கிய குழுவினர் வேதகால முனிவர்களின் வழித்தோன்றலாகவோ கோத்திரங்களாகவோ இருக்க முடியாது. எனவே இன்றைய ஐயர் ஐயங்கார் ஜாதியினர் வேதகாலத்தில் இருந்து தொடரும் பார்ப்பனர்கள் கிடையாது.
அப்படியானால் தமிழ் இலக்கண இலக்கியங்கள் குறிப்பிடும் பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் ஜாதிய குழுமங்களா? அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களின் இன்றைய நிலை என்ன? அவர்கள் இப்போதும் வாழ்கிறார்களா?
பிராமணர்கள், அந்தணர்கள், பார்ப்பனர்கள் மூன்று பெயர்களுக்கும் ஒரே அர்த்தமா?
சங்கரரின் கோட்பாட்டை மாயாவாதம் என்றும், பிரசன்ன பௌத்தம் என்றும் வைணவ கோட்பாட்டாளர்களான ராமானுஜர் மத்வர் போன்றோர் கூறுகின்றனர். அனால் சங்கரர் மாயையை துணையாக கொண்டு ஏகான்மவாதத்தை நிலைநாட்ட முயன்றார்.
வைணவ கோட்பாட்டாளர்களான ராமானுஜர் மத்வர் போன்றோர் ஆன்மாக்கள் பல கோடி உண்டென்றும் அதில் விஷேசமான ஆன்மா அல்லது ஆன்மாவை விட ஆற்றலில் கூடிய ஆன்மாவை பரமான்மா என்றும் நிறுவ முயன்றனர். இவர்களும் கடவுள் என்பது ஆன்மாவில் இருந்தோ மாயையில் இருந்தோ தனியானதில்லை என்றே நிறுவ முயன்றனர். அதிலும் இவர்கள் பரமாத்மாவாக மாயையையே முன்னிறுத்தினர். ஆக இவர்களையும் மாயையில் பரமாத்மாவை தேடிய மாயாவாதிகளாகவே கருதவேண்டும்.
வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்...