Saturday 27 August 2022

அனைத்து சாதி அர்ச்சகர்களா பிராமணர்கள்? பிராமணர்கள் யார்? பாகம்-2

கடந்த பதிவில் ஐயர் ஐயங்கார் என்ற ஜாதியினர் பழந்தமிழ் நூல்கள் கூறும் பார்ப்பனர்கள், அந்தணர்கள் இல்லை என்று பார்த்தோம். இப்போது பிரம்மம் என்றால் என்ன? அந்த வார்த்தைக்கான பொருள் என்ன என்று பார்ப்போம்.

பிரம்மம் என்பது ப்ரஹ்மம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் உருப்பெயர்ப்பு ஆகும். ப்ருஹ் என்றால் வளர் என்ற வினைச்சொல்லின் வேர்ச்சொல் ஆகும். ப்ரஹ்மம் என்றால் வளர்வது என்று பொருள்படும். 

அதாவது பிரம்மம் என்றால் வளர்ந்துவரும் ஒன்றைக் குறிப்பதற்கான வார்த்தை. இந்து தத்துவங்கள் அனைத்தும் இறைவனை நிலையான இருப்பாகவும், உண்மைபப் பொருளாகவும், 'சித்' என்ற மெய்யறிவாகவுமே குறிப்பிடுகின்றன. இறைவன் என்பவர் மாறுதலுக்குட்பட்ட வளர்ந்து தேயும் இயல்புள்ள சடப்பொருள் அல்ல. ஆனால் பிரம்மம் என்பது சடப்பொருளாக சுட்டப்படும் ஒரு வார்த்தை. ப்ருஹ் என்றால் இயற்கை என்றும் வடமொழியில் பொருள்படுவதுண்டு. அவ்வாறு பார்த்தாலும் இயற்கையோடு இருப்பவர்கள் என்னும் பொருளில் நாத்திக உலகாயதர்களாகவே அடையாளப் படுத்த வேண்டும்.

நாம் வாழும் இந்த பூமி இந்த பேரண்டத்தை சார்ந்தே உள்ளது. இந்தப் பேரண்டத்தில் இருந்தே இந்த பூமியும் இந்த பூமியில் உள்ள உயிர்களும் எல்லாவற்றையும் பெறுகின்றன. இந்தப் பேரண்டமே வளர்ந்து வருகிறது. இந்த பிரம்மம் என்ற வார்த்தை இந்த பேரண்டத்தையே குறிக்கின்றது. இந்த பிரம்மம் என்ற பேரண்டமே கடவுள் என்பது ஒரு சடவாத தரிசனமாகும். உலகாயதம் பௌத்தம் போன்ற சமண மதங்களின் அடிப்படையே இந்த பிரம்மம் என்ற பேரண்டமே உண்மை என்பதும் இந்த அண்டத்தில் உள்ளவற்றைபற்றி அறிவதே அறிவு என்பதுமாகும். பிராமணர்கள் என்றால் பிரம்மத்துடன் அல்லது இந்த பிரம்மமே உண்மை என்ற கோட்பாட்டுடன் இணங்கி நிற்பவர்கள் என்றே பொருள்படும். பிரம்மம் என்பது வளர்வது என்று பொருள்படுவதால் அதை கடவுள் என்று கருதமுடியாது. 

வளர்ந்து வரும் இந்த அண்ட்தோடு இணங்கி நிற்பவர்கள், பிரம்மம் என்பதை ஒரு பொருளாக கருதுபவர்கள் எப்படி இந்துக்களாகவோ, இறைநம்பிக்கை உள்ளவர்களாகவோ இருக்கமுடியும்? இந்த பிரம்ம வாதத்தை பின்பற்றும் பிராமணர்கள் இந்து வேடம் தரித்த சமணர்கள்.

அப்படியானால் இந்துக்களின் கடவுள் தத்துவம் என்ன சொல்கிறது?

இந்துக்கள் கூறும் கடவுள் நபராகவோ பொருளாகவோ இருப்பதில்லை. இந்த அண்ட பேரண்டங்கள் தோன்றுவதற்கான மூலப்பொருள் கடவுளில்லை. இந்த அண்டப் பேரண்டங்களை படைத்த படைப்பாளன் கடவுளில்லை. கடவுள் என்பது எல்லாவற்றையும் கடந்து பேரமைதியும் பேரானந்தமும் கொண்ட முழுமையான அருளுடை அறிவையும் ஆற்றலையும் கொண்ட நிலையான இருப்பு நிலையாகும். படைப்பிற்கு முதற்காரணம் மாயை என்பதும், கடவுள் நிமித்த காரணனாக இருப்பதாகவும் கூறுவதே இந்துக்களின் நம்பிக்கை.

ஐயர் ஐயங்கார் ஜாதியினர் பார்ப்பனர்கள் அந்தணர்கள் இல்லை என்றால் பழந்தமிழ் நூல்கள் கூறும் பார்ப்பனர்கள் அந்தணர்கள் யார்?

பழந்தமிழ் நூல்கள் கூறும் காலத்தில் பார்ப்பனர்கள், அந்தணர்கள் என்பவர்கள் ஒரு சமூகமாக ஜாதியாக இருக்கவில்லை, அவ்வாறு குறிக்கப்படவுமில்லை.

அறத்தின் வழி நடக்கும், ஏனைய அனைத்து உயிர்களுக்கும் நேர்வழியைக் காட்டும் சரியான பார்வையுடன் ஒரு விடையத்தை அணுகும் நல்லறிவுடைய மாந்தர்களை குறிக்கும் சொல்லாகவே பார்ப்பனர் அந்தணர் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன. பார்ப்பனன் என்றால் சரியான பார்வையை உடையவன் என்று பொருள். ஒரு விடயம் தொடர்பில் சரியான தெளிந்த பார்வையை உடையவனாக பார்ப்பனன் குறிக்கப்பட்டான். அந்தணன் என்றால் முடிவை அறிந்தவன் என்று பொருள்படும். ஒரு விடயத்தின் முடிவை அறிவால் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்துபவன் அந்தணன். ஒன்றின் முடிவை உணர்ந்து கொள்ள சரியான பார்வை அவசியம். அதனால்தான் அந்தணர்கள் பார்ப்பனர்கள் என்ற இரு வார்த்தைகளும் ஒன்றாகவே பயன்படுத்தப்பட்டது. இந்த வகையிலேயே வேதங்களை பற்றிய தெளிந்த பார்வை உடைய வேதியர்கள் வேத பார்ப்பனர்கள் என்றும் குறிக்கப்பட்டனர்.

8ஆம் நூற்றாண்டின் ஐயர் சாதியும் 12 ஆம் நூற்றாண்டில் ஐயங்கார் சாதியும் உருவாக முன்னர் இங்கு கோயில்களில் பூசை வழிபாடுகளைச் செய்தது யார்?

எம் இந்துக்களின் பாரம்பரியம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாரத தேசத்தின் எல்லைகளைக் கடந்தும் பரவியிருந்தது. இந்த பாரம்பரியம் எங்கெல்லாம் பரவியிருந்ததோ அங்கு வாழ்ந்த அந்தந்த சமுதாயங்கள் தமது ஆலயங்களில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார்கள். பொதுவாக எந்த சமுதாயம் ஒரு ஆலயத்தை அமைத்து ஆளுகை செலுத்தியதோ அவர்களே அந்தந்த ஆலயங்களுக்கு பூசைகளை செய்துவந்தனர். பொதுவாக ஒரு சமுதாய கோயிலில் இன்னொரு சமுதாயம் பூசை செய்யும் வழக்கம் இருந்ததே இல்லை.

இன்றுவரை பெரும்பாலான ஆலயங்களில் ஐயர் ஐயங்கார் அல்லாத பூசகர் குடிகளே பூசகர்களாக உள்ளனர்.

அதிலும் குறிப்பாக விஸ்வகர்மா, சைவ வேளாளர் போன்ற சாதிகள் பிராமண பூசாரிகளை தங்களது ஆலயங்களுக்குள் அனுமதிப்பதில்லை என்பதையும், தங்களது இல்ல விழாக்களுக்கு தமது சமூகத்தைச் சேர்ந்த பூசகர்கள், வேதியர்களை அழைத்தே கிரியைகளை செய்ய வேண்டும் என்பதில் சமரசம் செய்ய விரும்புவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சில பத்து வருடங்களுக்கு முன்புவரை பறையர் சமூகம் தமக்காக வேதியர், பூசகர் குடிகளை கொண்டிருந்தது என்பதும் அவ்வாறே பல்வேறு பாரம்பரிய குடிகளும் தமக்காக வேதியர், பூசகர் குடிகளை தம்மகத்தே கொண்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய குடிகளின் வேதியர், பூசகர் குடிகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் இன்று இல்லையா?

ஐரோப்பிய கிறிஸ்தவ ஆட்சியில் இந்த மண்ணின் பாரம்பரிய வாழ்வியலைச் சிதைக்கும் நோக்கில் வேதியர் பூசகர் குடிகளும் தொடர்ச்சியாக தாக்கப்பட்டார்கள். பலர் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டார்கள். அதனால் எதிர்த்து நின்ற போர்க்குணம் கொண்ட குடிகளைச் சேர்ந்த வேதியர், பூசகர் குடிகள் அழிந்து போயினர். ஆனால் தம்மை சூழ்நிலைக்கேற்ப மாற்றியும் சமூத்ததிற்குள் ஒழிந்தும் வாழ்ந்த சொற்பமான குடிகள் மட்டுமே எஞ்சினர்.

இவ்வாறு எஞ்சிய பூசகர் குடிகள் முறையான வேத ஆகம கல்வியோ, பூசகர் பயிற்சியோ இல்லாமல் முறைசாரா கிராமிய பூசாரிகளாக ஆனார்கள். ஆனால் ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நடந்த வேதியர் குடிகள் தமது வேத பாடசாலை மற்றும் பயிற்சிகளை தொடர்ந்தார்கள். 

அழிக்கப்பட்ட வேதியர் குடிகளின் எஞ்சிய சொற்பமான குடிகள் தங்களின் சந்ததிகள் வேதபயிற்சியை பெறுவதற்காக இந்த ஐரோப்பிய ஆதரவு வேதபாடசாலைகளைச் சார்ந்து இயங்கும் நிலை ஏற்பட்டது. அதனால் பல வேதியர் பூசகர் குடிகள் இந்த ஐரோப்பிய ஆதரவு வேதபாடசாலைகளை நடாத்தும் இனக்குழுவிற்குள் கரைந்தும், அவர்களின் கிளைச் சமூகங்கள் போன்றும் பின்னாளில் ஆனார்கள். 

இன்றும் தம்மை பிராமணர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் பல உப சாதிகள், ஏனைய குடிகளின் குலதெய்வங்களை பின்பற்றுவது, அவர்கள் குறித்த சாதிகளைச் சேர்ந்த வேதியர் பூசகர் குடிகள் என்பதை அடையாளம் காட்டி நிற்கின்றது.

தொடரும்...

பிராமணர்கள் யார? பாகம்-1



No comments:

Post a Comment

யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்? மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான த...