யுகங்கள் தோறும் திருமால் பலலட்சம் கோடி அவதாரங்களை எடுத்துள்ளார். இன்றும் எடுத்துக் கொண்டே இருக்கின்றார். இதில் முக்கியமான ஒரு அவதாரம் நரசிம்ம அவதாரம். மிகவும் உக்கிரமான திருமாலின் இந்த அவதாரமானது இரணியகசிபுவை அழிப்பதற்காக எடுக்கப்பட்டது.
இரணியகசிபுவின் மகன் பிரகலாதன், தன்னை வணங்காமல் திருமாலை வணங்கியதால் கோபமுற்ற இரணியகசிபு பிரகலாதனை கொல்ல முனைந்தான். (உலகத்தில் உருவ வழிப்பாடிற்கு எதிராக பதியப்பட்ட முதலாவது வன்முறை இதுதான். தன்னை வணங்குதல் என்றால் இரணியகசிபுவை வணங்குதல் கிடையாது, நான் யார் என்று உணர்ந்து நானே கடவுள் என்று கருதும் நிலையே தன்னை வணங்குதல், இது ஏகான்மவாதம் எனப்படும். தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அத்வைதமே ஏகான்மவாதமாகும். இவர்கள் உருவங்களாக தோன்றும் மாயைகளை வணங்குபவர்களை மால் வழிபாட்டு மக்கள் என்று குறிப்பிட்டனர். மால் என்றால் மாயை, சிவனை உருச்செய்து வழிபட்டாலும் அது மால் வழிபாடுதான். இவ்வாறு உருவ வழிபாடு செய்த மக்களை ஏகான்மவாதிகள் தவறான வழிபாட்டை பின்பற்றுபவர்கள், மால் வழிபாட்டாளர்கள் என்று சொல்லி கொலை செய்தார்கள்)
சப்தரிஷிகளில் ஒருவரான ரிஷி காசியப்பருக்கு திருமாலின் அருளால் இரணிய கசிபு மற்றும் இரண்யட்சகன் என்னும் இரண்டு மகன்கள் பிறந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் அசுரர்களாக வளர்ந்தனர். அவர்களில் இரண்யட்சகன் பூமா தேவியை கட்டாயப்படுத்தி அசுர உலகத்திற்கு கடத்திச்சென்றான். அந்த தருணத்தில் அனைத்து தேவர்களும் பெருமாளிடம் காப்பாற்றும்படி வேண்டினர். வராக அவதாரமெடுத்த திருமால் தன் கொம்பால் இரண்யட்சகன் மார்பில் குத்தி அவனை வதைத்தார். பூமாதேவியை காப்பாற்றி அசுரர் உலகத்தில் இருந்த அசுரர்கள் அனைவரையும் வதைத்தார். தன் சகோதரனின் இறப்பை கேட்டு நடுங்கிய இரணியகசிபு தன் உயிரை பாதுகாக்க சிவபெருமானை நோக்கி தவம் இருக்க தொடங்கினான்.
இரணியகசிபு தன் தவத்தால் சிவபெருமானிடம் அவன் விரும்பும் வரத்தை பெற்றான். மரணமில்லா வாழ்வு சிவனைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்பதால், தந்திரமாக சிவனையே ஏமாற்றுவதாக எண்ணிய இரணியகசிபு, தன் மரணம் மனிதனோ, மிருகமோ அல்லாத ஒருவனால் எந்தவித ஆயுதமும் இல்லாமல், பகலோ இரவோ இல்லாத நேரத்தில், பூமியிலும், வானத்திலும் இல்லாமல் நிகழவேண்டும் என்று வரம் கேட்டான்.கேட்கும் அடியவர்க்கு கேட்பதை எல்லாம் கொடுக்கும் சிவபெருமான் அவன் கேட்ட வரத்தையும் வழங்கினார்.
தான் கேட்ட வரம் கிடைத்துவிட்ட கர்வத்தால் இரணியகசிபு மூவுலகத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான். தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் துளியும் இரக்கமின்றி கொன்றான். இந்த சூழ்நிலையில்தான் இரணியகசிபுவிற்கு பிரகலாதன் என்னும் மகன் பிறந்தான். அவன் தன் தந்தையை போல அல்லாமல் திருமால் மீது அதிக பக்தி கொண்டவனாக இருந்தான்.
இரணியகசிபு எவ்வளவு சொல்லியும் கேட்காத பிரகலாதன் தொடர்ந்து திருமாலையே வணங்கினான். இதனால் தன் மகன் என்றும் பாராமல் அவனை கொல்ல உத்தரவிட்டான். இரணியகசிபுவின் வீரர்கள் எவ்வளவு முயன்றும் பிரகலாதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் பிரகலாதனை தன் கைகளாலே கொல்வது என்று துணிந்தான் இரணியகசிபு.
பிரகலாதனை வதைக்க இரணியகசிபு முயன்றபோது அங்கு நரசிம்ம அவதாரத்தில் தோன்றிய திருமால் அவனை வதைக்க முயன்றார். இரணியகசிபுவை வீழ்த்திய நரசிம்மர் அவனை தூக்கி தன் மடியில் வைத்து தன் கூறிய நகங்களால் அவன் மார்பை பிளந்து கொன்றார். நரசிம்மர் மனிதரும் அல்ல மிருகமும் அல்ல இரண்டும் கலந்த உருவம், அவர் இரணியகசிபுவை வதைக்க பயன்படுத்தியது எந்த ஆயுதத்தையும் அல்ல தன் நகங்களை, அவர் கொன்ற இடம் வானமும் அல்ல பூமியும் அல்ல அவரின் மடியில், அவர் இரணியகசிபுவை வதைத்த நேரம் பகலும் அல்ல இரவும் அல்ல இரண்டுக்கும் இடைப்பட்ட மாலை நேரம். இதனால்தான் நரசிம்மரால் இரணியகசிபுவை வதைக்க முடிந்தது.
நரசிம்மரின் கோபம் மூவுலகத்தினரையும் அஞ்சி நடுங்கும்படி செய்தது. அவரின் கோபம் அனைவரையும் அழிக்க கூடியதாக இருந்தது. இதனால் உலகத்தை காப்பாற்ற அனைவரும் சிவபெருமானை வேண்டினர். எனவே சிவபெருமான் வீரபத்திரர் மற்றும் பத்ரகாளியை நரசிம்மமரை அமைதிப்படுத்த அனுப்பிவைத்தார்.
வீரபத்திரர் மற்றும் பத்ரகாளி இருவரும் எவ்வளவோ முயற்சித்தும் நரசிம்மரை வீழ்த்தவோ, அமைதிப்படுத்தவோ இயலவில்லை. ஆனால் நரசிம்மர் அவர்களையும் வதைக்க துணிந்தார். எனவே சிவபெருமான் அவர்களை காப்பாற்றி நரசிம்மரை அமைதிப்படுத்த எண்ணினார்.
நரசிம்மரை கட்டுப்படுத்த தூய உருவைவிட்டு பேரழிவு உருவமான சரபா உருவத்தில் தோன்றினார் சிவபெருமான். சரப உருவம் என்பது மிகப்பெரிய தோன்றும் உருவமாகவும், நிறைய அங்கங்களுடனும், பறக்க இறக்கைகளுடனும் இருந்தது. இந்த பயங்கர உருவத்தில் தோன்றிய சிவபெருமான் நரசிம்மரை அந்த இடத்தில் இருந்து தூக்கிக்கொண்டு பறந்து சென்று மயக்கமடைய செய்தார்.
மயக்கம் தெளிந்த நரசிம்மர் தன் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் சரணடைந்தார். திருமாலின் ஒவ்வொரு அவதாரமும் மரணத்தை தழுவ வேண்டியது கட்டாயம். தன் அவதாரத்தின் நோக்கம் முடிந்தது என்று சொல்லிய நரசிம்மர் தம்மை வதம்செய்து அருளும்படி சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமான் நரசிம்மரை வதம் செய்து அவரையும் தன் பதத்தில் இணைத்து அருள்புரிந்தார்.
No comments:
Post a Comment