Tuesday 30 August 2022

விநாயகர் பிறந்தநாள் இதுதானா?

இன்று ஆவணி மாத சதுர்த்தி திதி. கணநாதன் பிறந்த நன்நாள் என்பது இந்துக்கள் நம்பிக்கை. 

கடவுள் பிறப்பு இறப்பு இல்லாதவர் என்று சொல்லும் இந்துக்கள் எதற்காக தாம் வழிபடும் விநாயக கடவுளுக்கு பிறந்ததாக கூறி எதற்காக விழா எடுக்கின்றனர்? விநாயகர் பிறந்தநாள் இதுதானா?

முதலில் இந்துக்கள் கூறும் விநாயகர் அல்லது கணநாதன் என்பவர் யாரென்று பார்ப்போம். இந்த அண்டப்பிரம்மாண்டம் தோன்றுவதற்கு முன்பு சிவம் என்ற கடவுளின் முழுமையான இருப்பும், உயிர்களும், மாயமூலங்களும் மட்டுமே இருந்ததாக சித்தாந்தம் விளக்கும். இவ்வாறு முதலில் இருந்த முழுமையான இருப்பில் உண்டான தற்தூண்டலால் சிவசக்தி வெளிப்பட்டது என்பது இந்துக்களின் நம்பிக்கை. 

இங்கு சிவம் என்பது முதன்மையானது, சிவசக்தி வெளிப்பட காரணமான தற்தூண்டல்(சிவநாதம்) என்பது இரண்டாவதாக நிற்கிறது. இந்த தற்தூண்டலால் வெளிப்பட்ட சக்தியின் வெளிப்பாட்டால் இந்த அண்டங்கள் தோன்றுவதற்கு தேவையான பஞ்சபூத மூலங்கள் தோன்றியது. அதனால் சக்தி என்பது மூன்றாவதாக நிற்கிறது. இந்த அண்டங்கள் அனைத்தும் பூத மூலங்களாய் (பஞ்ச பூத மூலங்கள்) தோன்றி நின்றபோது அவை செயற்படுவதற்கும், அவை உருவாக தோன்றிநிற்பதற்கும் காரணமாக தோன்றியதே இந்த நாத தூண்டல். இந்த நாதமே பஞ்சபூத கணங்களால் ஆன அனைத்தினது இயக்கத்திற்கும் காரணமாக இருக்கிறது. இப்படி கணங்களில் தூண்டலாக இருக்கும் நாதமானது நான்காவதாக நிற்கிறது.

கடவுளின் நிலையில் நான்காவது வெளிப்பாடு என்பதை குறிப்பதாகவே ஒவ்வொரு மாதமும் நான்காவது நாள் கணநாதனுக்கு உரியதாக சிறப்பிக்கப்படுகிறது. 

இந்த அண்டம் முழுவதும் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் இந்த நாதமே காரணமானது. பொருள் இருந்தும், ஆற்றல் இருந்தும் தூண்டல் என்ற ஒன்று இல்லை என்றால் எந்தச் செயலுமே நடக்காது. அதனால்தான் இந்த நாத தூண்டலை செயல்களின் தலைவன் என்று சொல்லி; விநாயகன் என்று போற்றுகின்றனர் எம் இந்துக்கள்.

எந்தவொரு செயலும் சிறப்பாகவும் சரியாகவும் நடைபெற்று முடிய செயற்தூண்டல் சரியானதாக இருக்க வேண்டும். அதனால்தான் செயல்கள் அனைத்தும் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்படுகிறது.

வினாயகரை வழிபட்டு, நற்தூண்டல் பெற்று, நற்செயல்கள் பலபுரிந்து இந்த உலகத்தினதும், அவரவர் ஆன்மாவினதும் நன்மைக்காக பாடுபட அனைவருக்கும் எம் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்



No comments:

Post a Comment