Thursday, 1 December 2022

கவுணவத்தை நரசிம்ம வைரவர்- வேள்வி தொடங்கிய வரலாறு

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கருகம்பனை என்னும் கிராமம்.

இலங்கையில் வேள்வி நடக்கும் கோயில்களில் பிரசித்தம் பெற்ற நரசிம்ம வைரவர் கோயில் இந்த கருகம்பனை கிராமத்தின் கவுணவத்தை பகுதியில்தான் உள்ளது. 

இலங்கையில் கரையோரப் பகுதிகளில் போர்த்துக்கேய கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு நிகழ்ந்த காலத்தில் யாழ்ப்பாண இராச்சியமும் கிறிஸ்தவர்கள் வசம் சென்றிருந்தது. முதலில் யாழ்ப்பாண இராச்சியத்தினை கைப்பற்றி அடிமைப்படுத்திய போர்த்துக்கேய கத்தோலிக்கர்கள், அந்த இராச்சியத்தில் உள்ள தமிழர்களின் ஆலயங்கள் அனைத்தையும் இடித்து தரைமட்டம் ஆக்கியிருந்தனர். தமிழர்களின் வழிபாட்டு உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டிருந்தது. ஆலயங்கள் இருந்த இடங்களுக்கு செல்வதோ வீடுகளில் தமிழர்கள் மத வழிபாடுகளில் ஈடுடுவதோ தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. அவ்வாறு வழிபடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மிகக் கொடூரமாக கிறிஸ்தவர்களால் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அதனால் பல ஆயிரம் தமிழர்கள் இறந்தும் போனார்கள். இந்த அவலம் நூறு ஆண்டுகள் வரையில் தொடர்ந்தது.

பின் போர்த்துக்கேயரிடம் இருந்த இடங்களை ஒல்லாந்தர்கள் கைப்பற்றினார்கள். ஒல்லாந்தர்கள் கத்தோலிக்க கிறித்தவ சபையை அடியோடு வெறுக்கும் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ சபையினைப் சேர்ந்தவர்கள். அதனால் ஒல்லாந்தர் கைப்பற்றிய பின்னர் கத்தோலிக்க சபைகளைச் சேர்ந்தவர்களைத் தேடித் தேடி கொன்றொழித்தார்கள். அவ்வாறு கிறிஸ்தவ சபைகள் இரண்டும் தங்களுக்குள் மோதுண்ட காலத்தில், தமிழர்களின் வழிபாட்டு உரிமையை நசுக்கும் செயல்பாடுகள் குறைந்திருந்தது. அதனால் தமிழர்கள் மீண்டும் தங்களின் வழிபாடுகளை மேற்கொள்வது சாத்தியமானது. ஆனால் ஆலயங்களை அமைப்பதற்கு ஒல்லாந்து கிறிஸ்தவர்களும் அனுமதிக்கவில்லை.

தமிழ் மக்கள் தமது வழிபாட்டை மீட்க ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் நூறு ஆண்டுகளும், மூன்று நான்கு தலைமுறைகளும் கடந்துவிட்டதால், தமிழர்களின் பல ஆலயங்கள் இருந்த இடங்கள் அடையாளம் காணமுடியாமல் போனது. தமிழர்களின் ஆலயங்கள் இருந்த இடங்கள் பல கிறிஸ்தவ சர்ச்சுகளாக மாற்றப்பட்டிருந்தது. அவ்வாறு கிறிஸ்தவ சர்ச்சாக மாற்றப்படாத இடங்களில் உயிரை பணயம் வைத்து தமிழர்கள் வழிபாடு செய்து வந்தனர். அப்படி திருட்டுத்தனமாக வழிபாடு செய்யப்பட்ட இடங்கள் மட்டுமே அடையாளம் காணக்கூடியதாகவும் இருந்தது. கிறிஸ்தவர்கள் கண்களில் படாமல் உயிரைப் பணயம் வைத்து பற்றைக் காடு ஒன்றினுள் வழிபாடு செய்யப்பட்டு வந்த ஒரு ஆலயமே இந்த கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம். 

அன்றைய நாளில் வழிபாடு என்பது வெறும் விளக்கேற்றுவது, பூக்கள் வைப்பது என்ற அளவிலேயே இருந்தது. கோயில் விழாக்கள் பாரம்பரிய பூசைகள் என்று எல்லாம் கைவிடப்பட்டு மறந்துபோய் இருந்தது. மக்கள் பலர் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த, கிறிஸ்தவர்களால் விரட்டப்பட்ட இடங்களில் மீண்டும் குடியேறினார்கள். காடுகளாக மாறிப்போன தமது நிலங்களை துப்பரவு செய்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். கருகம்பனை கிராமத்திலும் அவ்வாறே மக்கள் பலர் மீண்டும் குடியேறினார்கள். தங்கள் முன்னோர்கள் வழிபட்ட, ஆலயம் இருந்த இடத்தினையும் துப்பரவு  செய்து வழிபடக்கூடிய இடமாக மாற்றினாரகள்.

அந்த கிராமத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் பொதுவாக, வற்றாத நீருற்றுக் கிணறு ஒன்று இருந்தது. பொதுவாக உள்ள அந்த வற்றாத கிணறும் அதன் மூலம் செய்யப்படும் தோட்டமுமே அந்த கிராமத்திற்கு அடையாளமாகிப் போனது. கவுணவத்தை என்று அந்த பகுதிக்கு பெயர் வர அதுவே காரணமாக இருந்தது.(கவுணவத்தை என்றால் நீரூற்று தோட்டம்[பொதுவான] என்று பொருள்)

மக்கள் பலர் கருகம்பனை கிராமத்தில் குடியேறி விட்டார்கள், விவாசாயம் கால்நடை வளர்ப்பு என்று தமது பொருளாதாரத்தையும் மீண்டும் உருவாக்கிக் கொண்டார்கள். பழைய ஆலயம் இருந்த இடத்தினை துப்பரவு செய்து, பெரிய ஆலமரத்தின் கீழ் சூலம் வைத்து வழிபாடும் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகளும், வேண்டாத சாவுகளும் வரிசையாக வந்துகொண்டே இருந்தது. சாவு என்றால் வயதானவர்கள் சாவது கிடையாது. இது இளமையில் சாவது. பெற்றவர்கள் இருக்க பிள்ளைகள் சாவது மிகக் கொடுமையானது. அங்கே நடந்தது அதுதான். பலர் அந்த வற்றாத கிணற்றாலும், சிலர் என்ன நடந்தது என்றே தெரியாமலும் திடீர் திடீரென்று ரத்தம் சிந்தி இறந்தார்கள். 

கிராமத்தில் யார் வீட்டிலும் மகிழ்ச்சி இல்லை. இத்தனை காலமும் கிறிஸ்தவர்கள் கொன்றார்கள். இப்போது ஏனென்றே தெரியாமல் சாகிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் வருத்தத்தில் ஆழ்ந்தார்கள்.

அவ்வாறு இருந்தபோது ஒருநாள் இந்தியாவில் இருந்து வந்த சித்தர் ஒருவர் எல்லோருடைய பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்வதாகவும், அவரிடம் சென்று பிரச்சினைகளை கூறினால் இதற்கு தீர்வு கிடைக்கலாம் என்றும் என்றும் ஊரவர்கள் கூடிக்கதைத்தார்கள்.

அவர்கள் அவ்வாறு கூடிக்கதைத்த மறுநாளே கருகம்பனை கிராமத்திற்கு  அந்த சித்தர் வந்தார். தாம் தேடிச் செல்ல நினைத்த போது சித்தரே தம்மை தேடிவந்தது இறைவன் செயல் என்று உணர்ந்தார்கள். ஊரவர்கள் ஒன்றுகூடி சித்தரிடம் சென்று கண்ணீர் சொட்டச்சொட்ட தமது மனக்கவலைகளை கொட்டினார்கள். சித்தர் எல்லோரும் சொல்வதைக் கேட்டுவிட்டு எதுவுமே பேசாமல் எழுந்து ஆலமரத்தடியில் இருக்கும் வைரவர் கோயிலை நோக்கி நடந்தார். ஊர் மக்களும் அவரைப் பின்தொடர்ந்து நடந்தார்கள். 

சூலத்தின் முன்னர் சம்மணம் போட்டமர்ந்த சித்தர் கண்களை மூடி தியானத்தில் மூழ்கினார். சிறிது நேரத்தின் பின்னர் கண்களைத் திறந்த சித்தர் பெரிய வளவு கனகராசாவை அழைத்து, "சொன்னதை நீயேன் செய்யவில்லை" என்று கேட்டார். கனகராசா புரியாமல் விழிக்க, "வைரவர் கனவில் வந்து சொன்னதை நீயேன் செய்யவில்லை?" என்று மறுபடி கேட்டார். 

ஊரவர்கள் எல்லோர் பார்வையும் கனகராசா மீது திரும்பியது. "வைரவர் என்ன சொன்னார் என்று சொல் கனகு" என்று பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.  "என்ன நடந்தது கனகராசா, வைரவர் கனவில் வந்து என்ன சொன்னார் என்று சொல்" என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கனகராசா கண்ணீர் மல்க "வன்னியில் இருந்து கோழிச்சாவலுடன் வந்து வேள்வி விழா செய்யச் சொன்னார். எனக்கு எப்படி செய்வது, என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் யாரிடமும் சொல்லவில்லை, எதுவும் செய்யவில்லை. இதுதான் காரணம் என்று தெரிந்திருந்தால் என் இரண்டு பிள்ளைகளை பலிகொடுத்திருக்க மாட்டேன்" என்று வைரவர் கனவில் வந்து சொன்னதை சொல்லி கதறி அழுதார்.

வைரவர் இரண்டு முறை கனவில் வந்து சொன்னதும், கனவில் வந்து சொல்லிய சில வாரங்களுக்கு பின்னரே இரண்டு மகன்களும் இரத்தம் சிந்தி இறந்ததும் கனகராசாவின் நினைவுக்கு வந்தது. நாங்கள் இப்போது என்ன செய்வது சுவாமி, நீங்கள் தான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று சித்தரை வணங்கினார். 

ஊர் மக்களுக்கு எதுவுமே புரியவில்லை. "நாங்கள் தினமும் வணங்கும் வைரவர் எதற்காக எங்கள் பிள்ளைகளை பலியெடுக்க வேண்டும். கனகராசாவிற்கு மட்டும் எதற்காக கனவில் வந்து சொல்ல வேண்டும். அவர் செய்யவில்லை என்றால் வேறு யாருக்காவது கனவில் வந்து சொல்லி இருக்கலாம் அல்லவா. அப்படி வைரவர் சொல்லி இருந்தால் நாங்களாவது செய்திருப்போம் அல்லவா?" என்று சித்தரிடம் அங்கலாய்தவாறு கேட்டார்கள்.

சித்தர் அவர்கள் எல்லோரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார். அனைவரும் பேச்சின்றி மௌனமாக நின்றார்கள். "உங்கள் பிள்ளைகளின் உயிர்களை எடுத்தது வைரவர் கிடையாது. அது ஒரு ஏவல் வாலாயம்" என்றார்.

"என்ன சொல்கிறீர்கள் சுவாமி? வாலாயம் உயிரை எடுக்கின்றதா? யார் ஏவினாரகள்? ஏன் ஏவினார்கள்?" என்று கிலேசத்துடன் கேட்டார்கள்.

"உங்களை மதமாற்றம் செய்ய வந்த அன்னிய ஆவி வழிபாட்டினர் மக்களை மாற்றுவதற்காக வாலாயங்களை ஏவினார்கள். இறந்து போன தீய மனிதர்களின் ஆவிகளையே அவர்கள் வாலாயங்களாக பயன்படுத்துகிறார்கள். அவைதான் மக்களை அச்சப்பட வைப்பதற்காகவும், தமது ரத்த வெறியை தீர்ப்பதற்காகவும் ரத்தப் பலியை உண்டுபண்ணுகின்றன"

"இதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் சுவாமி?" என்று மக்கள் ஏக்கத்துடன் கேட்டார்கள்.

"கனவில் வந்து வைரவர் சொன்னதுபோல வருடம் தவறாமல் ரத்தப்பலி கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் ஏவும் தீய ஆவிகளின் ரத்த வெறி அடங்கும். ஊர் கூடி பலிகொடுத்து வந்தால் தீய ஆவிகள் அச்சப்பட்டு விலகிவிடும். உங்கள் பிள்ளைகளின் உயிர்கள் பலியாகாமல் தப்பிக்கும், அவர்களின் மதமாற்ற முயற்சியும் தடைப்படும்" என்றார் சித்தர்.

"அப்படியானால் இந்த வைரவரை விட அவர்கள் ஏவிய வாலாயங்கள் சக்தி மிக்கவையா சுவாமி. இப்படி செய்யாதுவிட்டால் இந்த வைரவரால் எங்களைக் காப்பாற்ற முடியாதா? நாங்கள் செய்யும் செயல்கள் தான் தீய ஆவிகளை விரட்டுமா?"

"தெய்வங்களால் நேரடியாக வந்து உங்களைக் காப்பாற்ற முடியாது. உங்கள் வாழ்க்கைக்கு நல்வழிகாட்டவும், உயிர்களுக்கு தேவையான ஆற்றல்களை வழங்கவும், அபாயங்களை எதிர்கொள்ளும் அறிவை வழங்கவுமே தெய்வங்களால் முடியும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழவேண்டும். தெய்வத்தின் வழிகாட்டுதலில் வாழ்ந்தால் அபாயங்களை எதிர்கொண்டு வாழ்வை மகிழ்வுடன் வாழலாம்"

"நல்லவர்கள் வாழும் சமூகத்தில் தானே கெட்டவர்களும் வாழுகிறார்கள்? அதுபோல் வழிகாட்டும் தெய்வங்கள் இருக்கும் அதே சூழலில்தான் வழிகெடுக்கும் ஆவிகளும் இருக்கின்றன. எம்மை சுற்றிலும் நாம் வழிபடும் தெய்வங்களும், நம்மை வழிகெடுக்க காத்திருக்கும் ஆவிகளும் உள்ளன."

"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள். எவனொருவன் தெய்வத்தை வழிபட்டு அதைக் கொண்டாடுகிறானோ அவனைச் சுற்றி தெய்வம் காவல் நிற்கிறது. அவ்வாறு தெய்வத்தின் காவலை இழந்தவனை ஆவிகள் பற்றி வழிகெடுக்கின்றது. மக்கள் தெய்வங்களை வழிபட்டு கொண்டாடும் போது ஆவிகள் மக்கள் கூட்டத்தை விட்டு விலகி விடுகிறது."

இங்கு நடந்ததும் அதுதான். தெய்வங்களை வழிபட்டு அதன் காவலைப் பெற்றவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. இளமைத் துடிப்பில் தெய்வத்தை மறந்து இன்பத்தை நாடியவர்கள் ஆவிகளால் வழிகெடுக்கப்பட்டு பலியானார்கள். உங்கள் தெய்வ வழிபாடும் அதனால் உண்டாகும் காவலும் உங்கள் வாழ்வை மட்டுமே காப்பாற்றும். ஆனால் நீங்கள் செய்யும் வேள்விப் பலிபூசை ஆவிகளை விரட்டி ஒட்டுமொத்த மக்களையும் காப்பாற்றும்.

"இப்போது வேள்வி எதற்காக என்று புரிந்தது சுவாமி. இந்த ஆவிகளில் தூய ஆவிகளும் இருக்கும் தானே சுவாமி. அவை எமக்கு நல்லது செய்யாதா?"

"நல்ல விஷம் என்றால் என்ன? உடன் உயிரைப் போக்கக்கூடிய விஷம் தானே நல்ல விஷமாக இருக்க முடியும். அதுபோலத்தான் தூய ஆவி என்பதும். தவறான வாழ்வை வாழ்ந்து, வாழ்வை இடைநடுவில் முறித்து, செத்துப் போன தீய நடத்தையுள்ளவர்களின் உயிர்களே முக்தி அடைய முடியாமல், மறுபிறப்பும் கிட்டாமல் அலைந்து திரிகின்றன. அவையே ஆவிகள் எனப்படுகிறது. இதன்படி பார்த்தால் தூய ஆவி என்பது தீமைகளால் நிறைந்த, அவலச்சாவு அடைந்த தீயவனின் ஆவி என்று தானே அர்த்தம். நல்ல விஷம், தூய ஆவி இரண்டும் அதிகூடிய கெடுதலை தருவதாகக்தானே இருக்க முடியும்?"

"நல்வாழ்வை வாழ்ந்து, வாழ்வின் முழுமையை அனுபவித்து இறந்தவர்களின் உயிர்கள் முக்தி நிலையை அடைகின்றன. அவ்வாறு முக்தி நிலையை அடைந்த பின்னரும் தம் குலங்களின் நன்மைக்காக முக்தி நிலையை தள்ளிவைத்து தம் குலத்தை காத்து நிற்கின்றனர். அவர்களையே குலதெய்வம் என்று சொல்கின்றோம்"

"இங்கே குடிகொண்டு இருப்பவர் சாதாரண தெய்வம் கிடையாது. மாயவனின் நரசிம்ம அவதாரத்தையே அழித்து அவருக்கும் மோட்சம் அளித்த நரசிம்ம வைரவர். ஆனால் தெய்வங்கள் உணர்த்துவதை நேரடியாக உணரவும், அவை வழிகாட்டுவதை அறியவும் பலரால் முடிவதில்லை. எம் முன்னோர்களின் ஆன்மாக்கள் குலதெய்வங்களாக நின்று, தெய்வங்களுக்கும் எமக்கும் பாலமாக இருந்து தெய்வங்கள் உணர்த்துவதை உணரச் செய்கின்றனர்"

"இங்கே கனகராசாவிற்கு வழிகாட்டி நின்றதும், அவ்வாறான ஒரு குலதெய்வம் தான். அவருக்கு மட்டும் வைரவர் கனவில் வந்ததற்கும் அவரது குலதெய்வ அனுக்கிரகம்தான் காரணம்"

"அப்படியானால் எங்கள் முன்னோர்கள் யாரும் எமக்கு வழிகாட்டும் நிலையில் இல்லையா சுவாமி?"

"உங்கள் முன்னோர்களில் யாரும் நல்லவர்கள் இல்லை என்றோ, மோட்சத்தை அடைய தகுதியானவர்கள் இல்லை என்றோ சொல்ல முடியாது. இறந்த உங்கள் முன்னோர்களை நீங்கள் மறந்ததால் அவர்களின் ஆன்மாக்கள் தம் மோட்ச நிலையை நோக்கி சென்றிருக்கலாம். அன்னிய ஆட்சியாளர்களின் அராஜகத்தால் அவர்கள் உடலை எரிக்காமல், மண்ணில் புதைத்ததால் அவர்கள் மோட்சத்தை அடையாமல் நீண்ட காலமாக ஆவிகளாக அலையலாம். உங்களுக்கு வைரவர் தோன்றாமல் இருக்க இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கலாம்"

"நாங்கள் இப்போது என்ன செய்வது சுவாமி"

"நீங்கள் கனவில் வந்து வைரவர் சொன்னது போல வேள்வித் திருவிழாவை ஊர்கூடி செய்யுங்கள். உங்கள் துன்பம் அனைத்தும் நீங்கி இன்பம் விளங்கும். நீங்கள் விரும்பும் நற்காரியங்கள் அனைத்தும் கைகூடும்"

"வன்னியில் இருந்து கோழிச்சாவலுடன் வந்து தொடங்கவேண்டும் என்பது.." என்று ஊர்மக்கள் இழுத்தார்கள்

"கனகராசாவின் சொத்துக்கு பங்காளர் ஒருவர் வன்னியில் உள்ளார். அன்னியர் அராஜகத்தில் ஊரைவிட்டு ஓடியபோது வன்னிக்கு சென்று குடியேறி விட்டார். இந்த கோயில் உரிமையிலும் அவருக்கு பங்குண்டு. வன்னியில் இருந்து கோழிச்சாவல் கொண்டுவருவது என்பது அவரது சம்மதத்துடன், அவரது முதற்பங்களிப்புடன், அவருக்குரிய பங்கைக் கொடுத்து வேள்வி செய்ய வேண்டும் என்பதாகும். அவரை அழைத்து வந்து அவருக்குரிய பங்கைக் கொடுத்து அவர் இங்கேயே இருந்துவிட்டால் வன்னிக்கு சென்று வேள்வி தொடங்கத் தேவையில்லை"

"நானே சென்று அவர்களை அழைத்து வருகிறேன். அவர்கள் கேட்கும் பங்கை கொடுத்து விடுகிறேன்" என்று வார்த்தை தளதளக்க கனகராசா சொன்னார். 

"எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும், வைகாசி மாதம் வளர்பிறை முடிந்து வரும் முதலாவது சனிக்கிழமை நரசிம்மரை வதைத்து வைரவர் மோட்சமளித்தநாள். நரசிம்ம வைரவருக்கு உகந்த அந்த நாளிலேயே வேள்வியை நடத்துங்கள்" என்று ஆசீர்வதித்து சித்தர் அங்கிருந்து புறப்பட்டார். அந்த நரசிம்ம வைரவரே தம்மை காப்பாற்ற சித்தர் வடிவில் வந்து வழிகாட்டியாக மக்கள் மகிழ்ந்தார்கள். 

மக்கள் அனைவரும் அன்றே வேள்விக்கு தயாரானார்கள். ஒவ்வொரு வீட்டிலும் வேள்விக்கென்றே ஒரு கிடாய் வளர்க்க ஆரம்பித்தார்கள். அவ்வருட வேள்வி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு யாரும் பலிகொள்ளப் படவில்லை. மதமாற்ற கூட்டம் ஏவிய வாலாயங்கள் விரட்டப்பட்டு மக்கள் நின்மதியாக வாழ ஆரம்பித்தார்கள். 

அன்று முதல் எத்தனை தடைகள் வந்தபோதும், அரக்கர்கள் போல வந்து பலர் வேள்வியை தடுக்க முனைந்தபோதும் அவற்றை எல்லாம் வென்று வேள்வியை நிறைவேற்றியே வருகிறார்கள். அன்னியர்கள் இந்த மண்ணைவிட்டு நீங்கும் வரை வேள்வி தொடரும் என்று மக்கள் உறுதியாக கூறுகின்றனர். ஆவிகளை ஏவிவிடும் அரக்கர் கூட்டம் இந்த மண்ணை விட்டு நீங்கும் போது நரசிம்ம வைரவரே வேள்வியை நிறுத்து என்று கூறுவார். இது அந்த கிராமத்தில் உள்ள மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.


(மாயவனின் நரசிம்ம அவதார முடிவில், அவரை அழிந்து முக்திக்கு அருளிய சரப ரூபம் என்பது சிவனின் அறுபத்து நான்கு வைரவர் மூர்த்தங்களில் ஒன்றாகும். இந்த சிவனின் சரப வைரவ மூர்த்தமே நரசிம்ம வைரவர் எனப்படுகிறது)












No comments:

Post a Comment