Friday, 4 August 2023

நல்லூர் கோயிலும் யாப்பாணிகளும்

நல்லூர் கந்தசுவாமி கோயில் யாழ்ப்பாணத்தின் அடையாளமாக, இந்துக்களின் பெரும் ஆதரவு பெற்ற ஒரு தலமாக, சிறந்த நிர்வாகம் கொண்ட ஒரு ஆலயமாக என்று பலவாறு மிகைப்படுத்தல்கள் செய்யப்படும் ஒரு இடமாகும்.

ஆனால் உண்மையில் அவ்வாறு எதுவும் கிடையாது. அது யாழ்பாணத்தில் உள்ள ஒரு ஆலயம் அவ்வளவுதான்.

யாழ்பாணத்தில் நிலவும் சாதிய பிரச்சினை, பிரதேச வாத பிரச்சினை என்பவற்றால் நல்லூர் இந்த நிலையை எட்டியது என்றே சொல்ல வேண்டும். அதை வேண்டுமானால் விரிவாகவும் பார்க்கலாம்.

யாழ்பாணத்தில் வடமராட்சியார், தென்மராட்சியார், யாழ்ப்பாணத்தார், தீவார் என்ற பிரதேச ரீதியான பாகுபாடுகள் வலிமையாக இருந்தது. தீவாரை யாழ்பாணத்தவர் என்று ஏற்பதில்லை என்ற நிலையும் இருந்தது. அது தனிக்கதை. 

அதுபோலவே வெள்ளாளர், கரையார் என இரு முனைப்புப் பெற்ற சமுதாயங்களும் யாழ்பாணத்தில் இருந்தது. இது இரண்டும் முரண்நிலை சாதிகளோ, எதிர் நிலை சாதிகளோ கிடையாது. இவை இரண்டும் ஒரே பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சாதிகளும் கிடையாது. வெள்ளாளர் என்போர் விவசாய நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் சாதியாகவும், கரையார் என்பவர்கள் கரையோர பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சாதியாகவுமே இருந்தார்கள். இரண்டு சாதிகளிலும் அனைவரும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கவில்லை. அந்த சாதிகளில் உள்ள ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் ஏனையவர்கள் அவர்களின் ஆதிக்கத்தை ஏற்றவர்கள் என்பதாகவும் இருந்தது. 

அந்த ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய குடும்பங்கள் ஆச்சாரம், மேட்டிமைத்தனம், சமூக ஆதிக்கம் என்பவற்றை கொண்டவர்களாகவும் அதனைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பினைக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். இங்கே வேளாள தலைக் குடும்பங்கள் கைக்கொண்ட ஆதிக்கம் ஆச்சாரம் என்பவற்றுக்கு சற்றும் குறைவில்லாத சமூக தீண்டாமையை கரையார தலைக் குடும்பங்களும் கைக்கொண்டார்கள். பின்னர் கல்வி, பொருளாதார மேம்பாடு பெற்ற கராயார குடும்பங்கள், தலைக்குடும்ப வழிமுறைகளை தாமும் பின்பற்றி தம்மை மைலோங்கி கரையார்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.

அன்றைய காலத்தில் நல்லூர் முருகன் கோயிலை விட மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும், செல்வச்சந்நிதி முருகன் கோயிலும் பிரசித்தி பெற்ற சிறப்புப் பெற்ற தலமாக இருந்தது. இந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வேளாள ஆதிக்க கோயிலாகவும், செல்வச்சந்நிதி முருகன் கோயில் சாதாரண மீன்பிடி கரையார்களின் கோயிலாகவும் இருந்தது. வழமையாக எல்லா ஊர்களிலும் உள்ளது போலவே என் கோயிலா? உன் கோயிலா? என்ற போட்டி இந்த இரண்டு கோயில்களுக்கு இடையேயும் இருந்து வந்துள்ளது. அந்த காலப்பகுதியில் இரண்டு கோயில்களும் மக்கள் அதிகம் விரும்பிச் செல்லும் இடமாகவும் இருந்துள்ளது.

ஆனால் மாவட்டபுரம் கந்தசாமி ஆலய நிர்வாகத்தின் சாதியவாத நடவடிக்கைகள்,  கிறித்தவ நிகழ்ச்சி நிரலில் சிக்குண்டமை, சமூக பாகுபாடு என்பவற்றால் மக்கள் ஆலயத்திற்கு வருவது குறைவடைந்து சென்றது. அந்த காலப்பகுதியிலேயே மக்கள் நல்லூரை நோக்கி அதிகளவில் செல்ல ஆரம்பித்தனர். தென்மராட்சி பகுதியில் நிலவிய சாதிய வெறியும் செல்வச்சந்நிதி நோக்கி செல்லாமல் நல்லூர் நோக்கி மக்களைத் திருப்பியது. வடமராட்சியில் உருவான மேலோங்கி கரையார்களும், வேளாளர்களும் கூட நல்லூருக்கு வருவதை பெருமைக்குரிய ஒன்றாக மாற்றி இருந்தார்கள். பின் யுத்ததத்தால் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் பூட்டப்பட்டு மக்கள் வழிபாடு செய்யமுடியாத சூழல் உருவான போது யாழ்ப்பாண வேளாளர்களும் இந்த நல்லூர் என்பதை தமது முதன்மையான தலமாக அடையாளப்படுத்திக் கொண்டார்கள். 

தமக்குப் போட்டிச் சமூகமாக இல்லாத கைக்கோளர் வசம் நல்லூர் இருப்பது வேளாளர்கள் இந்த கோயிலை ஆதரிப்பதற்கு காரணமாக இருந்தாலும், தமக்கு கீழான கைக்கோளர் ஆதிக்கத்தில் அந்த ஆலயம் இருப்பது அவர்களுக்கு உறுத்தலாகவுமே இருந்து வந்துள்ளது.  

பலரும் நினைப்பது போல யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி கோயில் வேளாள முதலியார்களால் நிர்வாகம் செய்யப்படவில்லை. செங்குந்த முதலிகள் என்று சொல்லப்படும் ஒரு கைக்கோள பிரிவினராலேயே அது நிர்வகிக்க படுகிறது. மாபாண முதலிகள் என்பவர்கள் கைக்கோள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

யாழ் இசைக்கும் ஒரு பாணனுக்கு பரிசாக வழங்கப்பட்ட பகுதியே யாழ்பாணம் என்று ஒரு கர்ண பரம்பரை கதை உள்ளது. அந்த பாணர்களின் பெரிய குடும்பம் தான் மாபாணர் குடும்பம் என்று சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த முதலி பட்டமும், நல்லூர் ஆலயமும் காலனித்துவ காலத்திலேயே இந்த கைக்கோளர் கைகளுக்கு சென்றுள்ளது.

அப்படியானால் காலனித்துவ காலத்திற்கு முன்பு இந்த நல்லூர் ஆலயம் எங்கே இருந்து? யாரிடம் இருந்தது என்பது ஆராய்ச்சிக்கு உரியது. 

ஆனால் ஆண்ட சமூகங்கள், சுய அடையாளம் உள்ள சமூகங்கள் அன்னிய ஆதிக்கத்தை ஏற்று அவர்களுக்கு பணிந்து ஒருபோதும் சேவகம் செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது. ஆனால் யார் வந்தாலும் யார் ஆண்டாலும் அவர்களுக்கு சேவகம் செய்ய ஒரு கூட்டம் தயாராகவே இருக்கும். காலனித்துவ காலத்தில் ஆதிக்கத்தில் இருந்த சமூகங்கள் அனைத்தும் அவ்வாறான சேவகம் செய்யும் சமூகங்களே அன்றி அவர்கள் உயர்ந்த சமூகங்கள் கிடையாது. ஆனால் காலனித்துவ கால அடிமை சேவகர்களுக்கு உயர் பட்டங்களையும் அதிகாரங்களையும் அள்ளி வழங்கினார்கள் வெள்ளையர்கள். அவர்களிடமே ஆலயங்கள் பொது நிறுவனங்கள் என்பவற்றை பரிபாலிக்கும் உரிமையையும் வழங்கினார்கள்.

தமக்கு அதிகாரத்தையும் பொறுப்பையும் வழங்கிய எஜமானர்கள் வம்சம் வருகையில் அவர்களை அவ்வாறே வரவேற்று உபசரிப்பது ஒன்றே ஒரு சிறந்த அடிமை சேவகனுக்கான பண்பாக இருக்க முடியும். அதைத்தான் நல்லூர் நிர்வாகம் செய்துள்ளது. அவ்வாறுதான் அவர்கள் செய்வார்கள்.



No comments:

Post a Comment