Friday, 22 September 2023

யாழ்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் யார்?

அதற்கு முதலில் கிழக்கிந்திய கம்பெனி தெரியுமா? ஓ.. தெரியுமே பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ஒரு வியாபார குழுமம் என்றுதானே நினைக்கிறீர்கள். அது சரிதான். ஆனால் பிரித்தானிய நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் அதில் கிடையாது. அதுதவிர டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி என்றும் ஒரு குழுமம் இருந்தது. பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் பின்னால் பிரித்தானிய அரசகுடும்பமும், அரசும் எவ்வாறு பக்கபலமாகவும் ஆதரவாகவும் இருந்ததோ அதுபோல், டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கு பின்னால் ஒல்லாந்த அரசும், அரசகுடும்பமும் இருந்தது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வியாபாரம் செய்வதற்காக வந்ததாக கூறிக்கொண்டாலும் கிழக்கிந்திய கம்பெனி எமது நாடுகளை ஆண்டதும், அவர்களிடம் இருந்தே பிரித்தானிய அரசுக்கு இந்த நாடுகளின் ஆட்சி அதிகாரம் கைமாற்றம் செய்யப்பட்டதும் வரலாறு.

இந்த கிழக்கிந்திய கம்பெனி போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல வியாபார குழுமங்கள் இங்கே இருந்துள்ளன. வியாபார குழுமங்கள் என்றால் அது ஒரு சமூகத்தைச் சேர்ந்த அமைப்பு கிடையாது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பல்வேறு இனங்களைச் சேர்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகள் சேர்ந்த ஒரு சங்கமாக இருந்தது. அந்த வியாபார குழுக்கள் தமது பாதுகாப்பிற்காக தனியான பாதுகாப்பு படைகளையும் வைத்திருந்துள்ளனர். பல நாடுகள் அதனை அனுமதித்து இருக்கின்றன.

வாதாபி என்பது சாளுக்கியர்களின் தலைநகரம். இன்றைய கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இந்த வாதாபியை மையமாகக் கொண்டும் ஒரு வியாபார குழுமம் இருந்துள்ளது. அதில் பல்வேறு உப குழுக்களும் இருந்துள்ளது. அவை தனியான கொடி தனியான சில பழக்க வழக்கங்கள் என்பவற்றையும் கொண்டிருந்தன. இந்த வாதாபியை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு வியாபார குழுமம் இடப கொடியை தமது கொடியாக கொண்டிருந்துள்ளது. இந்த வியாபார குழுமம் இன்றைய கர்நாடகம், தமிழகம், ஆந்திரம், இலங்கை போன்ற பகுதிகளில் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளது. 

வாதாபி சாளுக்கிய இராச்சியத்தை மையப்படுத்தி அவர்கள் குழுமம் இயங்கினாலும், சோழ பாண்டிய பல்லவ பகுதிகளிலும் செல்வாக்கும் சிறப்பு உரிமைகளும் பெற்றவர்களாகவே இருந்தார்கள். இன்றைய பல்தேசிய கம்பெனிகள் எல்லா நாடுகளிலும் செல்வாக்கு பெற்றிருப்பது போல. சாளுக்கிய இராச்சியம் மேலைச் சாளுக்கியர், கீழைச் சாளுக்கியர் என்று கலிங்கப்பகுதியிலும் ஆந்திரப் பகுதியிலும் விஸ்தரிப்பு செய்யப்பட்ட போது இந்த வியாபார குழுமமும் அந்த பகுதிகளை மையப்படுத்தி இயங்க ஆரம்பித்தது.

பிற்கால சோழ இராச்சியம் வலுவிழந்து சோழர் பெயரில் சாளுக்கியர் ஆளும் நிலை வந்தபோது, குலோத்துங்கன் காலத்தில் சோழ இராச்சியத்திலும் இவர்களின் செல்வாக்கு ஏனைய வணிக குழுக்களை விட மேலோங்கி இருந்தது. இந்த சாளுக்கிய இராச்சியத்தை மையப்படுத்திய வணிக குழுவினர் வளஞ்சியர் என்ற பெயரில் அழைக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். இவர்கள் பட்டாரகியை வழிபட்டார்கள், இவர்களின் கொடியாக இடபக்கொடி இருந்தது என்று கூறப்படுகிறது. பட்டாரகி என்பது இன்று பத்ரகாளி, மாகாளி, பிடாரி என்று கூறப்படும் உக்கிரமான பெண் தெய்வ வடிவத்தை குறிக்க கூடியது. பட்டாகத்தி என்று கூறப்படும் பெரிய கத்தியைக் கையில் வைத்திருக்கும் தெய்வ வடிவம் பட்டாரகி என்பதாக அல்லது பட்டாரகி தெய்வம் வைத்திருக்கும் கத்தி என்பதால் அது பட்டாகத்தி என்பதாக ஆகியிருக்கலாம். பட்டாரகியை வழிபடுபவர்கள் என்பதால் பட்டாரகர் என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள். 

யாழ்பாணத்தில் ஆரிய சக்கரவர்த்திகள் என்போர் பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் உருவான ஒரு ஆட்சியாளர்களாக அறியப்படுகிறார்கள். இது சோழ பேரரசு வலுவிழந்து சோழர்கள் பெயரில் சாளுக்கியர் ஆட்சியில் அமர்ந்த காலப்பகுதியாகும். சோழ பேரரசின் பெயரிலேயே சாளுக்கியர் ஆட்சியில் அமர்ந்தார்கள் என்றால் அன்றைய பாண்டியர்கள் என்பவர்களும் பாண்டியர் பெயரிலான சாளுக்கியர் என்றே கொள்ளவேண்டும். சமகாலத்தில் வலுவான இருந்த சோழ பேரரைசையே சோழர்கள் பெயரில் கைப்பற்றி ஆண்ட சாளுக்கியர், பலகாலம் முன்பாகவே சிதைந்துபோன பாண்டிய இராச்சியத்தை விட்டு வைத்திருக்க மாட்டார்கள். அதனால் அன்றைய காலப்பகுதியில் பாண்டியர் பெயரில் ஆண்டவர்களும் சாளுக்கியர் என்றே கொள்ளவேண்டும்.

இவ்வாறு சாளுக்கியர் தென்னிந்தியாவில் அதிகாரத்தில் அமர்ந்த காலத்திலேயே யாழ்ப்பாணத்திலும் ஆரிய சக்கரவர்த்திகள் என்ற பெயரில் ஒரு ஆட்சியாளர்கள் உருவாகினார்கள். ஆக இதுவும் சாளுக்கிய ஆட்சியின் தொடர்ச்சி என்றே கருதவேண்டும். அதுவரை இருந்த நிலவுடைமையாளர் ஆட்சி முறைக்கு மாற்றாக வியாபாரிகள் ஆட்சியில் அமர்ந்தார்கள் என்று சொல்லலாம். 

ஆரிய சக்கரவர்த்திகள் என்போர் வீரமாகாளி அம்மனை வழிபடுபவர்களாகவும், நந்திக் கொடியை தமது கொடியாக கொண்டவர்களாகவும் இருந்தனர். சாளுக்கியர் கொடியில் இருந்து சூரிய சந்திர அடையாளங்களையும் தமது அரசு கொடியில் வைத்திருந்தனர். இந்த வளஞ்சியர் குழுவைச் சேர்ந்த படையின் தலைவன் ஒருவன் ஆரிய சக்கரவர்த்தி என்ற பட்டத்துடன் இங்கே ஆண்டிருக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 

இந்த இடப கொடியில் இருக்கும் இடபம் கவரா என்று அழைக்கப்படும். இன்றும் சிங்கள மக்கள் எருதை கவரா என்றே அழைக்கின்றனர். இந்த கவரா கொடியினை கொண்ட குழுவினர் கவராக்கள் என்று அழைக்கப்படும் வழக்கமும் இருந்துள்ளது. இடப வாகனத்தை கொண்ட சிவனின் வடிவம் கவரேஸ்வர் என்று அழைக்கப்படும். எருது வாகனத்தில் உள்ள காளியின் வடிவமும் உண்டு. 

சோழர்கள் கூட நிசும்பசூதனி என்ற பெயரில் இந்த அகோர காளியை வழிபடுபவர்களாகவும், சிவ வழிபாட்டை பரதெய்வ வழிபாடாக பின்பற்றுபவர்களாகவும் இருந்துள்ளனர். இந்த சாளுக்கிய அரசை மையப்படுத்திய வளஞ்சியர் குழுமங்கள் கபரேஸ்வரர், நகரேஸ்வரர் போன்ற கடவுள்களை பரதெய்வமாக வழிபட்டாலும், வாதாபி சாளுக்கியர்கள் கந்த கடவுளை பரதெய்வமாக கந்தேஸ்வரர் என்றும் வழிபட்டுள்ளனர்.

ஆக, இந்த ஆரிய சக்கரவர்த்திகள் என்போர் சாளுக்கிய இராச்சியத்தை மையப்படுத்திய வளஞ்சியர் குழுவைச் சேர்ந்த ஒரு பிரிவினரின் ஆட்சி என்பதை உறுதியாக கூறலாம். அவர்களே நல்லூர் வீரமாகாளி அம்மனை வழிபடுபவர்களாகவும் அந்த ஆலயத்தை அமைத்து ஆட்சி செய்தவர்களாகவும் கொள்ளலாம். பின்னர் தென்னிலங்கையில் ஆண்ட வேறொரு வளஞ்சியர் குழுவைச் சேர்ந்த சப்புமல்குமார எனப்படும் செண்பக பெருமாளே யாழ்பாணத்தை கைப்பற்றி சிலகாலம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோயிலை அமைத்தவர் என்று கொள்ளலாம்.

இப்போது இந்த வளஞ்சியர் குழுமம் என்ன ஜாதி என்று தேடுவது அர்த்தமற்றது. ஏனென்றால் அது பல இன சமூக குழுக்கள் சேர்ந்த ஒரு கூட்டம். இன்று அவர்கள் எந்தெந்த ஜாதிகளில் கரைந்து போயுள்ளார்கள் என்று வேண்டுமானால் தேடிப் பார்க்கலாம். இந்த பட்டாரகி தெய்வம் எனப்படும் பத்ரகாளி அல்லது மாகாளியை குலதெய்வமாகவும் , கவரேஸ்வரர் எனப்படும் இடபவாகன சிவனை பரதெய்வமாகவும்  வழிபடுபவர்கள் யார் என்று தேடினால், அவ்வாறு யாரேனும் இருந்தால் அவர்கள் இந்த ஆரிய சக்கரவர்த்திகளின் பண்பாட்டு மிச்சங்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

இங்கே அரசவம்சம், அரச வம்சத்தின் வாரிசுகள் என்று யாரும் கிடையாது. ஏனென்றால் ஆரிய சக்கரவர்த்திகள் என்பவர்களே ஒரு வியாபார குழுமம்தான்.



No comments:

Post a Comment