Sunday, 27 February 2022

சிவராத்திரியின் சிறப்பு-வேடன் மன்னனான கதை

முன்னொரு காலத்தில் பாரத தேசத்தை சித்ரபானு என்ற மாமன்னன் ஆண்டுவந்தான். ஒருநாள் அவன் அரசவையில் இருந்த போது முனிவர்கள் சிலர் வந்தார்கள். வந்த முனிவர்களை அரசனும் அவையோரும் வணங்க முனிவர்கள் அனைவருக்கும் ஆசிகளை வழங்கினார்கள்.

வந்த முனிவர்களை ஆசனம் அளித்து, உபசரித்த மன்னன் அவர்கள் வந்தததன் நோக்கத்தை வினவினான். 

"மன்னவா உங்கள் ஆட்சியின் சிறப்பாலும், ஈசனவன் அருளால் நாடும் மக்களும் சீரும் சிறப்பும் பெற்று வாழ்கின்றனர். எம் தலைமுறைகள் தாண்டியும் இந்த நாடும் எம் சந்ததிகளும் சுபீட்சமாக வாழ மஹா சிவராத்திரி தினத்தை சிறப்பாக அனுஷ்டிக்க வேண்டும்" என்று கோரினர்.

மன்னனோ எதுவும் தெரியாதது போல் "இந்த மஹா சிவராத்திரி தினத்திற்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? ஏன் அனுஷ்டிக்க வேண்டும்?" என்று கேட்டான்.

மன்னவா மாதாமாதம் வளர்பிறை தேய்பிறை என்று இரு சதுர்த்தசி தினங்களும் சிவராத்திரி தினம் என்று அனுஷ்டிக்க பட்டாலும், மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினமே மஹா சிவராத்திரி என்று அனுஷ்டிக்க படுகிறது. இந்த தினத்தின் சிறப்பை உணர்த்தும் கதை ஒன்றை சொல்கிறேன் கேள்" என்று சொல்லி மன்னன் சித்ரபானுவிற்கு கதைசொல்ல ஆரம்பித்தார் முனிவர்களில் ஒருவர்.

"மன்னவா! முன்பொரு காலத்தில் பாரத தேசத்தின் மத்திய பெருவனத்தில் செங்கோடன் என்று ஒரு வேடன் இருந்தான். அவன் தொழில் வேட்டையாடுதல் என்றாலும் எந்நேரமும் சிவசிந்தனையிலேயே வாழ்ந்தான். அவன் பக்தியை, இறையன்பை கண்டு மகிழ்ந்த எம்பெருமான் அவனைச் சோதித்து அருள நினைத்தார். ஒருநாள் இரவுவேளை வேட்டைக்கு புறப்பட்டான் செங்கோடன். வேட்டைக்கு விலங்குளைத் தேடி சென்றவனுக்கு வேட்டை கிடைக்காமல் அவனே வேட்டையாடப்படும் நிலைக்கு ஆளானான். திடீரென அவர்முன் தோன்றிய புலியொன்று அவனை நோக்கி பாய்ந்து வந்தது. 

சட்டென்று சுதாரித்துக் கொண்ட செங்கோடன் தூணியில் இருந்து அம்பை எடுத்து நாணேற்றி புலியைநோக்கி விட்டான். அவன் இலக்கு ஒருபோதும் தவறியதில்லை, ஆனால் இன்று தவறிவிட்டது. அடுத்த அம்பை எடுத்து நாணேற்றி புலியைநோக்கி விட்டான். அதுவும் இலக்கைவிட்டு தவறிவிட்டது. இப்படி தூணியில் இருந்த எல்லா அம்புகளையும் எய்துவிட்டான். எதுவுமே புலியை தொடவில்லை. தப்பித்து ஓடி விடவும் முடியாது. புலியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடி மனிதனால் தப்பிக்க முடியாது அல்லவா? இப்போது அவனுக்கு வேறு வழியில்லை. அருகில் இருந்த ஒரு மரத்தில் பாய்ந்து ஏறிக்கொண்டான். புலியோ அவனை விடுவதாக இல்லை. மரத்தில் அடியிலேயே புலி படுக்கையைப் போட்டுவிட்டது. இவனுக்கு தப்பித்து செல்லவும் வேறு வழியில்லை. 

அவன் மனதில் எந்நேரமும் சிவசிந்தனை நிறைந்து இருந்ததால் பயம் தோன்றவில்லை. ஆனால் நேரம் செல்லச் செல்ல தூக்கம் மட்டும் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. தூக்கத்தில் தவறிவிழுந்தால் புலி அவனை வேட்டையாடிவிடும். வேட்டைக்கு வந்தவன் இரையாகிப் போக தயாராக இல்லை. தூக்கத்தை போக்க எதையாவது செய்தாக வேண்டும். மரத்தின் மேலிருந்து என்ன செய்ய முடியும். யோசித்துக் கொண்டே மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாக பறித்து கீழே போடலானான். அவன் தூக்கம் போய்விட்டது. நேரம் போனதே அவனுக்கு தெரியவில்லை விடிந்துவிட்டது.

மரத்தின் கீழே பார்த்த செங்கோடனுக்கு ஒரே ஆச்சரியம். புலி இருந்த இடத்தில் புலியைக் காணவில்லை. அவ்விடத்தில் எம்பெருமானின் சிவலிங்க திருமேனி ஒன்றே இருந்தது. சிவலிங்கம் வில்வ இலைகளால் அர்ச்சிக்கப்பட்டிருந்தது. 

வேடனுக்கு ஈசனின் திருவிளையாடல் புரிந்தது. இரவு வந்தது புலியல்ல எம்பெருமானே என்றுணர்ந்தான். அவன் தப்பிக்க ஏறியிருந்த மரம் ஓர் வில்வ மரம். அவன் தூக்கத்தை விரட்ட பறித்துப் போட்ட வில்வ இலைகளே எம்பெருமான் லிங்கத்தை அர்ச்சனை செய்திருந்தது.

கீழே இறங்கிய செங்கோடன் லிங்கத்திருமேனியை கட்டியணைத்து ஆனந்தக்கூத்தாடினான். கூத்தாடியவன் முன்னால் அந்த ஆனந்தக்கூத்தனே நேரில் தோன்றினார். "உன்னை சோதிக்கவே நான் புலியாக தோன்றினேன். இந்த இரவில் நீ விழித்திருந்து நோற்ற விரதத்தால் பிறவிகள் தோறும் பெரும் புகழும் பெருமையும் பெறுவாய், இறுதியில் நீ முக்திபெற்று என் பதத்தை அடைவாய். யாரெல்லாம் இந்த தினத்தில் விழித்திருந்து விரதம் நோற்கிறார்களோ, அவர்கள் தூயமனதால் வேண்டியவை அனைத்தும் ஈடேறும், அழியாப்புகழும் என் பதமும் கிட்டும்" என்று வாழ்த்தி மறைந்தார்.

இந்த கதையை சொன்ன முனிவர் "மன்னவா இந்த மஹா சிவராத்திரி தினத்தில் தூய மனதுடன் வேண்டும் அனைத்தும் வேண்டுபவருக்கு கிட்டும்" என்று சொல்ல மன்னன் சித்ரபானு சிரித்தான்.

முனிவர்களும், அவையோரும் மன்னன் ஏன் சிரிக்கிறான் என்று புரியாமல் விழித்தார்கள். அப்போது மன்னன் சொன்னான் "அந்த செங்கோடன் என்ற வேடன் வேறுயாருமல்ல, முற்பிறவியில் நான்தான் அந்த வேடனாக இருந்தேன். என்னை அறியாமலேயே மஹா சிவராத்திரி தினத்தில் எம்பெருமானை வணங்கியதால் இப்பிறவியில் இந்த புண்ணிய தேசத்தின் மாமன்னன் ஆனேன். நான் பெற்ற புண்ணியம் இந்த தேசத்தின் மக்கள் அனைவரும் பெறவேண்டும். சிவாலயங்கள் தோறும் மஹா சிவராத்திரி விரதம் சிறப்பாக நடைபெற நானும் உதவுவேன்" என்றான்.

மன்னனின் விருப்பமும் முனிவர்கள் விருப்பமும் ஒன்றாக மக்களின் விருப்பமும் அதுவாகவே ஆனது. பாரதம் முழுவதும் மஹா சிவராத்திரி விரதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தி பூர்வமாக அனுஷ்டிக்க பட்டது. 

"நாமும் எண்ணம்போல் வாழ்வும், இறைபதமும் பெற்றுவாழ மஹா சிவராத்திரி தினத்தில், மனத்தூய்மையுடன் எம்பெருமானை வேண்டுவோம்.."

சர்வம் சிவமயம்...



No comments:

Post a Comment