ஒரு நாள் ஒரு விவசாயி தனது தோட்டைத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் அருகில் உள்ள பற்றைக் காட்டை சுத்தம் செய்தார். அந்தப் பகுதியில் பற்றைகளோடு சேர்த்து கற்களும் கிடந்தது. கற்களை அகற்றினால் தான் பயிரிட முடியும் என்பதால் மிகவும் சிரமப்பட்டு அந்த கற்களையும் அகற்றினார். அப்போதுதான் கற்களின் இடுக்குகளின் கீழே வித்தியாசமான முட்டைகள் சில இருப்பதைக் கண்டார். அவை சாதாரண முட்டைகளைவிட பெரிய உருவத்தில் கொஞ்சம் கடினமான ஓட்டுடன் இருந்தன. விவசாயி அவற்றை கவனமாக தோண்டியெடுத்து ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு மீதமுள்ள நிலத்தை சுத்தமாக்க ஆரம்பித்துவிட்டார்.
விவசாயி தோட்டம் செய்வதற்கான நிலம் முழுவதும் சுத்தம் செய்தபின்னர் நிலத்தை பண்படுத்தி பயிர்களை நட்டார். வாரங்கள் சில கடந்தபின்னர்தான் அவருக்கு முட்டையின் ஞாபகம் வந்தது. அந்த வித்தியாசமான முட்டைகளை வைத்த இடத்திற்கு சென்று பார்த்தார். அவருக்கு ஒரே ஆச்சரியம். அந்த முட்டைகள் சிலவற்றில் இருந்து டைனோசர் குட்டிகள் பொரித்திருந்தது. அழிந்து போனதாக சொல்லப்பட்ட டைனோசர்கள் தனது தோட்டத்தில் இருப்பதைப் பார்த்து அவரால் நம்பமுடியவில்லை.
தகவல் ஊரெல்லாம் பரவியது. அதற்குள் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் செல்ல அவர்களும் வந்துவிட்டார்கள். வந்தவர்கள் டைனோசர் குட்டிகளை பாதுகாப்பாக மீட்டு தமது திணைக்களத்தின் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றார்கள். நாட்கள் வாரங்கள் என்று வருடங்கள் சில கடந்தது. இப்போது டைனோசர் குட்டிகள் வளர்ந்து பெரிதாக ஆகிவிட்டன. அவை தாவர உண்ணி டைனோசர்கள். மிகவும் பெரிய உருவில் வளர்ந்து நின்றன. யானையை விட பெருத்த உருவம், ஒட்டகச்சிவிங்கியை விட நீண்ட கழுத்து என்று அதன் உருவம் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியது. வளர்ந்த குட்டிகளில் ஒன்று மக்கள் பார்வைக்காக மிருகக்காட்சி சாலையில் சேர்க்கப்பட்டது. தகவல் கேள்விப்பட்டு நாடு முழுவதும் உள்ள மக்கள், கூட்டம் கூட்டமாக வந்தனர்.
தீயாய் பரவிய செய்தி அந்தப் பார்வையற்றறோர் இல்லத்தில் இருந்தவர்களுக்கும் எட்டியது. அந்த டைனோசர் பற்றி மற்றவர்கள் சொல்வதைக் கேட்க அவர்களுக்கும் ஆர்வம் பற்றிக்கொண்டது. அந்த இல்லத்தில் இருந்த பிறவிக் குருடர்கள் நால்வர் எப்படியாவது அந்த டைனோசரை பார்த்து விடுவது என்று புறப்பட்டார்கள். ஒருவாறு மிருகக்காட்சி சாலைக்கு வந்து டைனோசர் இருக்கும் இடத்திற்கும் வந்துவிட்டார்கள். இவ்வளவு தூரம் வந்தவர்கள் தாம் எப்படி டைனோசரை பார்ப்பது என்பதை சிந்திக்கவில்லை. நால்வரும் உட்கார்ந்திருந்தது கவலையோடு யோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் நால்வரில் ஒருவனுக்கு அந்த யோசனை தோன்றியது. எம்மால் பார்க்கத்தானே முடியாது அருகில் சென்று தடவிப் பார்ப்போம் என்றான். மற்றவர்களுக்கும் அந்த யோசனை சரியாக படவே சந்தோஷமாக சம்மதித்தனர்.
நால்வரும் எழுந்து டைனோசர் கூண்டு அருகில் சென்றனர். வாயில் காவலரிடம் தங்கள் பிரச்சினைகளை சொல்லி தடவிப் பார்க்க அனுமதி கோரினர். காவலனுக்கும் இவர்களைப் பார்க்க பாவமாக இருந்தது. சரி, ஒவ்வொருவராக சென்று தடவிப் பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி அனுமதித்தார்.
முதலில் ஒருவன் உள்ளே போனான். போனவன் டைனோசரின் வாலைப் பிடித்தான். நுணியில் சிறிதாக இருந்து மேலே செல்லச் செல்ல அகலமாக போனது வால். ஒரு பக்கத்தில் முள்போல் சொரசொரப்பாக இருந்தது. அதன் உயரம் ஓரளவுக்கு மேல் அவனுக்கு எட்டவில்லை. அவன் எட்டிய அளவுக்கு தடவிப் பார்த்துவிட்டு வந்துவிட்டான்.
அடுத்தவன் சென்று டைனோசரின் கால்களைப் பிடித்த்தான். உருளையாக மொழுமொழுவென்று சீராக இருந்தது. அப்படியே உருளை அவனது கைகள் எட்டாத உயரத்திற்கு சென்றது. அவனும் எட்டும் அளவுக்கு தடவிப் பார்த்துவிட்டு வந்துவிட்டான்.
மூன்றாமவன் சென்றான். அவன் நான்கு கால்களுக்கும் நடுவில் நின்றான் நகர்ந்து தொட்டுத் தடவிப் பார்த்தான். நான்கு உருளைகள் நான்கு இடத்தில் இருப்பதைக் கண்டான். அவனும் தடவிப் பார்த்துவிட்டு வந்துவிட்டான்.
நான்காமவன் உள்ளே சென்றபோது டைனோசர் களைப்பில் சரிந்து படுத்திருந்தது. போனவன் வயிற்றை தடவினான்,பெரிய கோளம்போல இருந்தது. எட்டிப் பார்த்தான் ஒரு அளவுக்கு மேல் எட்டவில்லை. சற்று நகர்ந்து பார்த்தான். சரிந்து படுத்திருந்த டைனோசரின் இரண்டு கால்களையும் தடவினான். இரண்டு உருளைகள் ஒன்றன் மேல் ஒன்றாக பின்னியது போல இருந்தது. அவனும் தடவிப் பார்த்துவிட்டு வந்துவிட்டான்.
நான்கு நண்பர்களுக்கும் டைனோசரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. மகிழ்ச்சியோடு தமது இல்லத்திற்கு திரும்பினார்கள். இல்லத்தில் இருந்த ஏனைய குருடர்கள் டைனோசர் எப்படி இருக்கும் என்று கேட்டார்கள்.
அதற்கு முதலாமவன் கீழே ஒடுங்கி மேலே அகன்று உருளையாக செல்லும் என்றான். அது முள்போல் இருக்கும், ஆனால் எட்டாது என்றான். இடைமறித்த இரண்டாமவன் இல்லை இல்லை உருளையாகத்தான் இருக்கும். ஆனால் ஒரே அளவில்தான் இருக்கும். முள் எல்லாம் இல்லை, மொழு மொழு என்றிருக்கும். எட்டாது என்பது உண்மைதான் என்றான். அப்போது இடைமறித்த மூன்றாமவன் ஒரு உருளை இல்லை நான்கு உருளைகளாக இருக்கும். நான்கும் வேறு வேறு இடத்தில் இருக்கும், ஆனால் எட்டாது என்பது உண்மைதான் என்றான். அதன்பின் நான்காமவன் சொன்னான் நீங்கள் மூவரும் சொல்வது தவறு. அது கோளமான வடிவத்தில் தான் இருக்கும். இரண்டு உருளைகள் பின்னியதுபோல கிடையாக இருக்கும். அனால அந்த உருளைகள் கோளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் என்றான்.
இந்த நான்கு பார்வையற்றவர்கள் போலத்தான் நாம் இந்துக்கள் இல்லை சைவர்கள், நாம் இந்துக்கள் இல்லை வைணவர்கள் என்று சொல்லி வாதாடும் உட் தத்துவக்காரர்கள் அனைவரும் இருக்கிறார்கள்.
நான்கு குருடர்களும் சொன்ன டைனோசர் உருவம் எப்படி உண்மையில் டைனோசர் இல்லையோ, அதுபோலத்தான் இந்த சைவ, வைணவ பிரிவினர் சொல்வதும் இந்துமதம் இல்லை. சைவம், வைணவம் என்பவை இந்த குருடர்கள் தடவிப் பார்த்த டைனோசரின் ஏதோ ஒரு பாகத்தையும், இந்து என்பது இவர்களின் பார்வையில் படாத இவர்கள் தொட்டுணராத முழுமையான டைனோசரையும் ஒத்தது.
இல்லத்திற்கு திரும்பி வந்த நால்வரிடம் டைனோசர் பற்றி கேட்ட ஏனைய குருடர்களின் நிலையில் இருப்பவர்கள்தான் இந்த கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள். அவர்களுக்கு தடவிப் பார்க்கும் ஆர்வமும் இல்லை, அதற்கான வாய்ப்புகளும் அவர்களின் மதத்தில் இல்லை. இல்லத்தில் இருந்துகொண்டே டைனோசர் எப்படி இருக்கும் என்று கேட்ட குருடர்களைப் பார்க்கிலும் அந்த நான்கு குருடர்களும் மேம்பட்டவர்களே தவிர, அவர்களும் முழுமையாக டைனோசரை பார்க்க பார்வை பெறவேண்டும்.
கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களைவிட சைவம் வைணவம் மேலானது என்று பேசிக்கொண்டு இருக்காமல், இவற்றையும் உள்ளடக்கிய, இவற்றையும் கடந்த இந்து தர்மத்தின் முழுமையை உணர்ந்து கொள்ளுங்கள். ஆன்மீகம் என்பது முழுமையை நோக்கிய பயணம். பரந்த பார்வையுடன் இந்துவாய் வாழ்வோம்.. குருட்டு நம்பிக்கைகளை தூக்கி வீசிவிட்டு இந்துக்களாக மாறுவோம்..
No comments:
Post a Comment