Thursday, 24 March 2022

விசித்திரமான கிராமம்-குட்டிக்கதை

அது ஒரு விசித்திரமான கிராமம். அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு பீத்தலான பையை வைத்திருப்பார்கள். தினமும் கஷ்டப்பட்டு உழைத்து அந்த பீத்தலான பைக்குகள் உணவுப் பொருட்கள், பானங்கள் என்று இட்டு நிரப்புவார்கள். எவ்வளவு இட்டாலும் அது ஒருபோதும் நிரம்புவதில்லை. ஏனென்றால் பீத்தலான பையில் இருந்து சிறிது நேரத்திலே அவை வெளியேறிவிடும். அது நிரம்பாது என்று தெரிந்தாலும் யாரும் விடுவதாக இல்லை. தினமும் கஷ்டப்பட்டு உழைத்து ஏதாவது ஒன்றை உள்ளே இட்டு நிரப்புவார்கள். சிலர் தம் வசதிக்கேற்ப விதம் விதமான விலையுயர்ந்த பண்டங்களை போட்டு நிரப்புவார்கள். விலை கூடியதோ குறைந்ததோ அந்தப் பை ஒருபோதும் நிரம்புவதில்லை.

உள்ளே தினமும் பண்டங்களை போட்டு நிரப்புவதோடு நிறுத்தாமல், ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கேற்ப அந்த பீத்தல் பையை அலங்காரம் செய்வார்கள். விலை கூடிய பொருட்களால் அலங்காரம் செய்வதை பெருமையாக கருதிய பலர் மிகவும் பெறுமதி மிக்க பொருட்களால் அலங்காரம் செய்தார்கள். அந்த பீத்தல் பையை வைப்தற்கென்றே விதம் விதமாக வீடுகள் அமைத்து அதற்குள் அந்த பையை வைத்தார்கள்.சிலர் தங்கள் வசதிக்கேற்ப குடிசை அமைத்து தங்கள் பீத்தல் பைகளை வைத்தார்கள். சிலர் தமது செழிப்பை காட்டுவதற்காக மாடமாளிகைகள் அமைத்து அதில் தங்கள் பீத்தல் பைகளை வைத்தார்கள்.

அந்த பீத்தல் பைகளுக்கு ஒரு அதிசய இயல்பும் உள்ளது. இரண்டு விதமான பீத்தல் பைகள் ஒன்றுடன் ஒன்று சேரும்போது புதிதாக ஒரு பீத்தல்பை தோன்றும். அந்த பீத்தல் பைகளும் நினைத்தன நாம் ஒன்றுடன் ஒன்று சேர்வதும், புதிய பீத்தல் பையை உண்டாக்குவதும்தான் தம் பிறவிப் பயனென்று. அதனால் இரண்டு விதமான பீத்தல் பைகளை ஒன்றாக்கி வைப்பது அந்த ஊரில் வழக்கமானது. இரண்டு பீத்தல் பைகளை ஒன்றாக்கி வைப்பதை பெரும் நிகழ்வாக கொண்டாடினார்கள். அலங்காரம், ஆட்டம், பாட்டம் என்று அமர்களப்படுத்தினார்கள்.

பின் ஒருநாளில் பண்டங்களை உள்நிரப்ப முடியாமல், உருவம் சிதைந்து, துர்நாற்றம் எடுக்கும் வகையில் அந்த பீத்தல் பைகள் மாறிவிடும். அப்படி ஒரு பை மாறுவதை பார்த்து, ஏனைய பைகள் சுற்றிநின்று கவலைப்பட்டு கதறி அழும்.

ஆம் அது ஒரு விசித்திரமான கிராமம்.

அந்த விசித்திரமான கிராமம்தான் இந்த உலகம். அந்த பீத்தல் பைதான் உங்கள் உடல். அதை நிரப்பப் பாடுபடும் நீங்கள் அதை உணர்வதே இல்லை.


ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற் துருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே!


நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே!



No comments:

Post a Comment