உலகில் உள்ள ஆன்மீக கடவுட் கோட்பாடுகளுக்கு இடையேயான ஒப்பீடு ஒரே பார்வையில்...
சித்தாந்தம்/சைவம்
*பதி/கடவுள்/இடம்
*பசு/உயிர்/பொருள்
*பாசம்
இந்த பிரபஞ்சம் எதுவும் தோன்றுவதற்கு முன்பே மூன்று வகையான பொருட்கள் அனாதியானவையாக இருந்தது என்பதும், அவை பதி பசு பாசம் என்பதும், பசு பாசம் என்னும் இரண்டும் பதியின் இருப்பிற்கு உள்ளே இருக்கிறது என்பதும் சித்தாந்தம் கூறும் முடிபு.
மண்ணில் ஓர் விதை இருந்தாலும் அது எவ்வாறு தானே நினைத்த மாத்திரத்தில் முளைத்து வளர முடியாதோ, பூமி இடம் கொடுத்து காற்று ஈரப்பதன் என்பவை சரியாக கிடைத்தால் மாத்திரமே பயிராக தோன்ற முடியுமோ அதுபோலவே, உயிர்கள் அனாதியாக இருந்தாலும் பதி அதற்கான சூழலை உருவாக்கி தனக்குள் அது செயற்படுவதற்கு இடம் கொடுக்காமல் உயிர்கள் செயற்பட முடியாது என்பது சித்தாந்த வாதம்.
பாசம் என்பது உயிர்கள் இடையே செயற்படும் ஓர் ஈர்ப்பு.
இங்கே பதியாகிய கடவுள் என்பது ஒரு நபரோ ஒரு ஆன்மாவோ கிடையாது. அது பிறப்பெடுக்கவோ, உயிர்களின் புலன்களுக்கு புலப்படவோ முடியாது.
பூமியில் இருக்கும் ஒரு பொருளுக்குள் பூமியை எப்படி அடக்க முடியும்? ஒரு சிறு குடுவைக்குள் எப்படி பெரிய கடலை அடக்க முடியும்? அதுபோலவே பிறவி நிலையில் பெறும் ஒரு சிறிய உடலுக்குள் எப்படி ஒட்டுமொத்த இருப்பையும் தாங்கிநிற்கும் இறைவன் என்னும் பேரிருப்பை அடக்க முடியும்?
இறைவன் என்பது விருப்பு வெறுப்புகளை தாங்கி செயலைப் புரியும் ஓர் ஆன்மா இல்லை, அது எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் எல்லாவற்றுக்கும் இருப்பிடமான ஒன்று என்பது சித்தாந்தம்.
அறிவு ஆற்றல் என்று அனைத்தும் அந்த இறை இருப்பில் இருந்து உயிர்களுக்கு கிடைக்கும் என்பது சித்தாந்த முடிபு.
இந்த பிரபஞ்ச தோற்றம் மற்றும் உயிர்களது உடல் என்பது இறைவனின் ஆற்றலால் உண்டானது. இந்த உடல் என்பது மாறக்கூடிய பொய்யான தோற்றம் என்றாலும் அதற்குள் இறைவன் என்னும் மாறாத மெய்ப்பொருள் மறைமுகமாக உள்ளது.
அதுபோலவே ஓர் உடல் என்று தோன்றுவதில் ஓர் உயிர் மட்டுமே கிடையாது. பல்வேறு உயிர்களும் அவை சார்ந்த உடல்களதும் சேர்க்கையே ஓர் உயிரினம் என்பதாக தோன்றுகிறது.
மறுபிறப்பு கர்மபலன் என்பவற்றை ஏற்கும் சித்தாந்த வாதம் உயிர்கள் செய்யும் முயற்சியால், இறைவனின் பேரருளால் அவற்றில் இருந்து நீங்க முடியும் என்கிறது.
சமணம் / அனேகாந்தவாதம்
*ஆன்மாக்கள்/ உயிர்கள்
*சடப்பொருட்கள்/ உயிரற்ற பொருட்கள்
இவர்கள் கடவுள் என்று தனியான ஒன்றை ஏற்பதில்லை. உயிர்களும், சடப்பொருட்கள் என்னும் உயிரற்ற பொருட்களும் அனாதியாக இருக்கிறது என்றும் ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றுபோல கிடையாது என்பதும் அறிவில் ஆற்றலில் வேறுபட்ட ஆன்மாக்கள் உள்ளது என்பதும் இவர்களது வாதம்.
அறிவு ஆற்றல் என்பவற்றில் பெரிய ஒரு ஆன்மா படைப்பு முதலான செயல்களைச் செய்வதாக கூறும் இவர்கள் ஆன்மாக்களுக்கு பேரறிவு பேராற்றல் உண்டு என்று நம்புகின்றனர். இந்த பிரபஞ்சத்தை இயக்குவது அந்த பிரபஞ்சத்தின் ஆன்மாவே அன்றி அதற்கு மேலான ஒன்று இல்லை என்பது சமண வாதம். ஜீவன்களின் ஆத்மா ஜீவாத்மா என்பது போல பரத்தின் ஆன்மா பரமாத்மா என்பது சமண வாதம். அந்த பரமாத்மா என்னும் நிலையை அதாவது பரமாத்மாவை ஒத்த மிகப்பெரிய ஆற்றல் நிலையை சில பயிற்சிகள் முயற்சிகள் மூலம் அடையலாம் என்பதும் சமண நம்பிக்கை. அவ்வாறு முயற்சி செய்து உயர் நிலையை அடைந்தவர்கள் என்று கூறி சிலபல நபர்களையும் வணங்குவார்கள்.
ஆன்மாவை ஏற்கும் இவர்கள் மறுபிறப்பு மற்றும் கர்மபலனை ஏற்கிறார்கள். ஆனால் தவத்தால் ஆன்மாக்கள் தாமாகவே பிறப்பை கர்மாவை இல்லாமல் செய்யலாம் என்பது சமண வாதம். அவ்வாறு கர்மாவை நீக்க ஆன்மாவாலேயே முடியும் என்னும் இவர்கள் கடவுள் என்று ஒன்றை ஏற்பதில்லை. ஆனால் சொர்க்க நிலையை அடைய பெரிய உயிர்கள் உதவுவதற்காக கூறுகிறார்கள்.
இந்த சமண வாதங்கள் சைவர்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மக்கள் வணங்கிய தெய்வங்களை பரமாத்மா என்பதாக மாற்றி, வைணவம் முதலான மதங்களை உருவாக்கி பரப்பி வருகின்றனர்.
பௌத்தம்
*அறிவுள்ள பொருள்
*அறிவற்ற பொருள்
இந்த பிரபஞ்சம் எதுவும் தோன்றுவதற்கு முன்னர் இவ்வாறான இரண்டு பொருட்கள் இருந்ததாக கூறும் பௌத்தம் ஆன்மா கடவுள் என்பவற்றை ஏற்பதில்லை.
பௌத்த கோட்பாட்டின் அடிப்படையில் ஆன்மா என்பது அறிவுள்ள பொருள் அறிவற்ற பொருள் இருட்டும் சேர்வதால் உண்டாகும் ஒரு செயற்கை பொருளாகும். உயிர் இருபொருள் சேர்க்கையால் உருவானது என்றால் மரணத்தின் போது அது அழிந்து போய்விடும். ஆனால் பௌத்தம் மறுபிறப்பு மற்றும் கர்மா பற்றியும் பேசுகிறது.
பிரபஞ்சம் என்பது இந்த இரண்டு பொருட்கள் சேர்ந்து உருவானது என்று பேசும் பௌத்தம் தவம் செய்வதன் மூலம் பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்த முடியும் என்றும் புத்தர் பிரபஞ்ச இயக்கத்தை கட்டுப்படுத்தினார், படைப்பினை செய்யும் முதல் தோன்றிய உயிரான பிரம்மாவிற்கு ஆணையிட்டார் என்றெல்லாம் பேசுகிறது.
மொத்தத்தில் பௌத்த கோட்பாடுகள் என்பது முரண்பாடுகள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.
ஆன்மாக்கள் இல்லை அறிவுள்ள பொருள் என்று ஒன்று உள்ளது, அதனை ஆன்மா என்றால் ஆன்மா என்பது ஒன்றே பலவல்ல, அந்த ஒரே ஆன்மாவே எல்லாவற்றிலும் உள்ளது என்பதாக கூறும் பௌத்தம், சைவர்களுடன் தத்துவார்த்த ரீதியான வாதத்தில் தோற்றதன் பிற்பாடு அதன் அடிப்படை நம்பிக்கையை வேறு பெயர்களில் சில பல மாறுதல்களை செய்து பரப்ப ஆரம்பித்தது.
இன்று ஸ்மார்த்த வாதம் பேசும் ஆத்மா ஒன்றே என்பது இந்த பௌத்த வாதத்தின் தொடர்ச்சியே.. சங்கராச்சாரியார்கள் மற்றும் ஸ்மார்த்த மடத்தினர் தங்களை அந்த ஒரே ஆத்மாவாக பாவனை செய்வதற்கும், நானே கடவுள் என்று பேசுவதும், இந்த கடவுள் இல்லை என்று பேசும் பௌத்த வாதத்தின் தொடர்ச்சியே.
பௌத்தத்தில் கடவுள் ஆன்மா இரண்டுமே இல்லை. அறிவுள்ள பொருள் அறிவற்ற பொருள் என்று இரண்டு உண்டு.
ஆனால்,
ஸ்மார்த்தத்தில் ஆத்மா என்ற ஒன்று மட்டுமே உண்டு. கடவுளும் இல்லை சடப்பொருட்கள் என்பதும் இல்லை. இந்த உலகம் உடல் என்று அனைத்தும் பொய், அதுவொரு பொய்யான கற்பனை என்பது ஸ்மார்த்த வாதம்.
கிறிஸ்தவம் இஸ்லாம்
கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற ஆபிரகாமிய மதங்கள் ஆன்மீக ரீதியான கோட்பாட்டு முடிவுகள், வாதங்கள் எதுவுமே இல்லாத வெறும் நம்பிக்கை என்பதாகவே இருக்கிறது. அவர்களுக்கு ஆழமான எந்தவொரு ஆன்மீக தேடலோ புரிதலோ கிடையாது.
இருந்தாலும் அவர்கள் பொதுவாக யாரோ ஒருவர் இந்த உலகத்தை படைத்ததாகவும் அவரே எல்லாவற்றையும் கண்காணிப்பு செய்வதாகவும் நம்புகின்றனர். இது சமண பௌத்த நம்பிக்கைகளை ஒத்த, ஒரு ஆன்மாவே எல்லாவற்றிற்கும் காரணம் என்பதாகவே உள்ளது.
களிமண்ணில் மனிதனை செய்து, படைப்பாளன் அதற்குள் உயிர் உண்டாக காற்றை செலுத்தினார் என்பது, அவர்கள் கூறும் படைப்பாளர் ஒரு உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்திக் காட்டுகிறது. அதனால் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களின் நம்பிக்கை சமண பௌத்த வாதங்களை அடிப்படையாகக் கொண்டது என்றே கொள்ளவேண்டும்.
படைப்பாளன் ஒருவன் எல்லாவற்றையும் படைத்ததாக நம்பச் சொல்லும் இவ் ஆபிரகாமிய மதங்கள், அதற்கான சாத்திய நிலைகள் பற்றிய எந்தவொரு தர்க்க வாதத்திற்கும் தனது நம்பிக்கையை உட்படுத்தியது கிடையாது. ஆன்மீக ஆராய்ச்சியோ தேடலோ இல்லாத வெறும் நம்பிக்கை குழுக்கள் என்பதாகவே அம்மதங்களை பார்க்கலாம்.