Saturday, 6 September 2025

வெள்ளிக்கிழமைகளில் ஏன் மாட்டிறைச்சி சாப்பிட சொன்னார்கள்? அதனால் என்ன நன்மை கிடைக்கும்

இலங்கை சிவபூமி என்பது பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ள பட்ட ஒன்று. இலங்கையில் உள்ள பழைமையான சிவாலயங்கள் மற்றும் பாரம்பரிய மக்களின் வாழ்வியல் என்பவை எல்லாம் அதை உறுதிப் படுத்துவதாகவே உள்ளது. அதிலும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் சைவர்களாகவே உள்ளார்கள். 

சைவர்கள் என்று சொன்னாலும் பொதுவாக கடலுணவுகளை அதிகம் உண்ணும் மக்களாகவும், ஆனாலும் வெள்ளி, செவ்வாய், திங்கள், சதுர்த்தி, பிரதோஷம் என்று அதிகமாக நாட்களில்  மச்சம் மாமிசம் என்பவற்றை தவிர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். பொதுவாக அனைத்து தமிழ் மக்களும் வெள்ளிக்கிழமைகளில் கட்டாயமாக அசைவத்தை தவிர்த்து விடுவார்கள். ஏன் அன்றைய நாட்களில் வீடுகளை கழுவி மெழுகி சமைக்கும் வழக்கம் கூட இன்றுவரை தொடர்கிறது.

யதார்த்தம் இப்படி இருக்க புலிகள் இயக்கம் வெள்ளிக் கிழமைகளில் மாட்டு இறைச்சி உணவை தமது உறுப்பினர்களுக்கு கட்டாயமாக வழங்கியது. அங்கு தெரிவு சுதந்திரம் எல்லாம் கிடையாது. அதுதான் உணவு, அதைத்தான் சாப்பிட்டு ஆகவேண்டும்.

புலிகளின் போராட்டம் தமிழ் மக்களுக்கான போராட்டம் என்றால், தமிழர்களின் இருப்பு க்கான போராட்டம் என்றால், தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியலில் மறுக்கப்பட்ட ஒன்றை மறுதலித்து ஏன் வெள்ளிக் கிழமைகளில் மாட்டிறைச்சியை வழங்கினார்கள்?

ஒரு இனத்தின் இருப்பு என்பது அந்த மக்களின் பாரம்பரிய வாழ்வியலையும் சேர்த்தது தானே? வாழ்வியலை சிதைத்தால் அந்த இனத்தின் இருப்பு சிதைந்து விடாதா?

இனத்தின் இருப்பை சிதைத்துக் கொண்டு இனத்திற்கான போராட்டம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? அது எப்படி வெற்றி பெறும்? 

புலிகள் வெள்ளிக்கிழமைகளில் மாட்டிறைச்சி உணவு வழங்கும் நடைமுறை எத்தனையாம் ஆண்டில் ஆரம்பித்தது என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம். ஆனால் எனக்கு தெரிந்து 1996 காலப்பகுதியில் இருந்து கடைசிவரை அந்த நடைமுறை தொடர்ச்சியாக இருந்துள்ளது. 

புலிகள் தமது உறுப்பினர்களுக்கு திருநீறு பூசக் கூடாது, பொட்டு வைக்க கூடாது, ருத்ராட்சம், தாயத்து என்பவற்றை கட்டக்கூடாது என்பதுவரை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். ஆனால் சிலுவை அணிந்த பல புலி உறுப்பினர்களை நான் கண்டிருக்கிறேன், பலரும் கண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் எதற்காக செய்தார்கள் என்றோ, ஏன் செய்தார்கள் என்றோ தெரியவில்லை. இதனால் அவர்கள் பெற்ற நன்மை என்னவென்று எனக்கு புரியவில்லை. 

புலிகள் வேண்டுமென்றே தமிழர்களின் பாரம்பரிய வாழ்வியல் அடையாளங்களைச் சிதைத்து மதமாற்றம் என்ற பெயரில் இனவழிப்பு செய்திருப்பார்கள் என்று நம்ப முடியவில்லை. அவர்கள் மதமாற்றத்திற்கு துணை போயிருப்பார்கள் என்றும் கூற முடியவில்லை. 

ஆனால்,

இவ்வாறு எல்லாம் செய்ததற்கு என்ன காரணம், அதன் பின்புலம் என்ன என்பது நிச்சயமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று. போராட்டம் ஆரம்பித்த போது சிறுபான்மையாக இருந்த கிறிஸ்தவ மதம் போர் முடிந்த இன்றைய காலகட்டத்தில் பல்கிப் பெருகி அதிகமானது எவ்வாறு? போராட்டத்தின் விளைவாக இந்த மண் அடைந்தது மதமாற்றத்தை மட்டும் தானா? 400 வருட அன்னிய ஆட்சியில் செய்ய முடியாத மதமாற்றத்தை முப்பது வருட யுத்தம் சாத்தியமாக்கியது எவ்வாறு? 

மதமாற்றம் என்பது இனவழிப்பு என்பதை உணராமல் தமிழர்களை மயங்கச் செய்து வைத்திருப்பது எது?



No comments:

Post a Comment