இந்து மதம் என்றால் என்ன.. அது பல சமயங்களின் கூட்டு என்றே பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல..
இந்த தேசத்தில் எழுந்த பின்வரும் ஆன்மீக தத்துவ கோட்பாடுகளில் ஒன்றையோ பலவற்றையோ ஏற்ற ஆன்மீக நம்பிக்கையாளர்கள் அனைவரையும் சேர்த்து குறிக்கும் பொதுவான பெயரே இந்து என்பது.
இந்துமதம் என்பது பின்வரும் கோட்பாடுகள் நம்பிக்கைகள் என்பவற்றின் அடிப்படையில் அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றை நோக்கிய வாழ்வியல் முறைமையே ஆகும்.
இவ் அனைத்து கோட்பாடுகளினதும் அடிப்படை நோக்கம் அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றை ஒரு மனிதன் அடைவதே!!
இந்த கோட்பாடுகளில் ஒன்றையோ பலவற்றையோ கடைப்பிடிப்பவை இந்து மதத்தின் உட்பிரிவுகள் ஆகும்.
மீமாம்சம்
சாங்கியம்
வைசேடிகம்
நியாயம்
அளவை
வேதாந்தம்
சித்தாந்தம்
அத்வைதம்
விசிட்டாத்துவைதம்
துவைதம்
#மீமாஞ்சம்
யாகங்கள், பலி கொடுத்தல், யக்ஞங்கள் மற்றும் அக்னி ஹோத்திரம், விரதங்கள், சந்தியாவந்தணம் மற்றும் பூசை புனஸ்காரங்களை செய்வதன் மூலம் ஒரு மனிதன் எளிதாக நேரடியாக சொர்க்கத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள்.
(இவை பொதுவாக இந்துமத உட்பிரிவுகள் அனைத்திலும் உள்ளது)
#சாங்கியம்
இயற்கை (அதாவது உயிரற்ற பொருட்கள்), அறிவுள்ள பொருள் (அதாவது உயிர்) ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற சடவாத தரிசனமாகும். படைப்பின் பரம்பொருள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.
இயற்கை அதன் முக்குணத்தால் எல்லாவற்றையும் தோற்றுவிக்கிறது என்பது இதன் கொள்கை.
கடவுள் வெளியே இல்லை உனக்குள்ளே இருக்கிறான் என்று சாங்கியம் கூறுகிறது.
(பௌத்தம், சமணம், பாசுபத சைவம், என்பன இந்த சாங்கிய மரபில் வந்த இந்துமத கோட்பாடே)
#வைசேஷிகம்
ஒரு பொருளை நன்கு அறியும் அறிவு (பிரமா) பிரமாணம் எனப்படுகிறது.
வைசேடிகம் ஒரு பொருளை நான்கு வழிகளில் அறிய முடியும் எனக்கூறுகிறது.
1 உணர்தல் (பிரத்தியட்சம்) (நேரில் பார்த்து உணர்தல்),
2 ஊகம் (அனுமானம்)
3. உவமை,
4 வாய்ச்சொல் (சப்தம்)
ஆகிய நான்கு முறைகளில் ஒரு பொருளைப் பற்றி விளக்க முடியும் என்றனர்.
#நியாயம்
நியாயத்தைப் பின்பற்றுபவர்கள், எற்புடைய அறிவைப் பெறுவதன் மூலமே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள்.
இதனால் அவர்கள் ஏற்புடைய அறிவைப் பெறுவதற்கான வழிகளை (பிரமாணங்கள்) அடையாளம் காண்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றனர். நியாயத் தத்துவப் பிரிவினர் இந்த ஏற்புடைய அறிவை அடையாளம் காண நான்கு பிரமாணங்கள் அல்லது வழிமுறைகளைக் கைக்கொள்கிறார்கள்.
#அளவை
வைதிக நெறி வேத நெறி. இந்த நெறியாளர் தெரியாத தெய்வத்தைத் தெரியும்படி விளக்கிக் காட்டுபவர்கள். ஐம்புலனால் அறியப்படாத தெய்வத்தை ஐம்புல அனுமானத்ததால் விளக்குபவர்கள்.
எந்தெந்த வகையான அனுமான அளவைகளால் தெய்வத்தின் இருப்பு உய்த்துணரப்படும் என்பதன் விளக்கமே அளவை.
(வைதிக நெறி அளவை முறையை பின்பற்றுகிறது)
#வேதாந்தம்
வேதாந்தம் என்றால் அறிவால் உணர்ந்த முடிபு என்பது பொருள். நான்கு வேதங்கள் கூறும் முடிபு வேதாந்தம் எனப்படும்.
எந்த தனி மனிதனை மையமாக வைத்து உருவாகவில்லை எனினும் மனிதர்களை மையமாக வைத்து எழுந்த தத்துவங்களைக் குறைகூறுவதும் இல்லை. தனிநபர் வழிபாட்டை வேதாந்தம் ஏற்பதில்லை.
வேதாந்தம் மனிதன் தெய்வீகமானவன் என்று கூறுகிறது.
வேறுபட்ட மதச்சிந்தனைகள் எத்தனை இருந்தாலும் அனைத்தையும் அனுமதிக்க வேண்டும். அனைவரையும் ஒரே கருத்துக்குள் கொண்டுவர முயலக்கூடாது. பல கருத்துகளும் முடிவில் இறைவனையே அடைகின்றன என்கிறது வேதாந்தம்.
ஜாதிமுறையை வேதாந்தம் ஏற்பதில்லை. ஜாதிமுறை என்பது சமுதாயப் பழக்கம் என்கிறது வேதாந்தம்.
வேதாந்தம் ஒப்புக்கொள்ளும் ஒரே பாவம் , தன்னையோ, பிறரையோ பாவி,பலவீனர் என்று நினைப்பதே. தவறுகள் கருத்து உண்டு. ஆனால் பாவம் என்ற கருத்து இல்லை.
ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும், வெளியே உள்ள கடவுளை நம்பாதவனை சில மதங்கள் நாத்திகன் என்று கூறுவது போல் தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று வேதாந்தம் கூறுகிறது. ஆனால் இந்த நம்பிக்கை சிறிய-நான் என்பது சார்ந்தது அல்ல. ஏனெனில் ஒருமையே வேதாந்தத்தின் கோட்பாடு என்பதால் அனைத்திலும் நம்பிக்கை கொள்வது என்பது இதன் பொருள்.
(இந்துமதத்தின் பெரும்பாலான உட்பிரிவுகள் இக்கொள்கைகளை ஏற்கின்றன)
#சித்தாந்தம்
சிந்தித்து அறிந்த முடிபு என்பது பொருள்.
இறைவன், உயிர், மலங்கள் இவை மூன்றும் நிலையானவை என்றும் இவற்றை யாருமே படைத்தலில்லை என்பதும் சித்தாந்த கருத்தாகும்.
ஆயினும் என்றும் நிலைத்திருக்கும் இவை மூன்றும் வெவ்வேறு குணங்களை இயல்புகளைக் கொண்டுள்ளன என்று சித்தாந்தம் கூறுகிறது.
(சித்தாந்த சைவம் என்பது இக்கோட்பாட்டை பின்பற்றுகிறது)
#அத்வைதம்
இரண்டற்ற நிலை என்பது இதன் பொருள்.
இது இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும்.
சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பிரம்மம்|பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மாவாக விளங்குகின்றது என்றும் இத்தத்துவம் கூறுகிறது.
#விசிட்டாத்வைதம்
விசிட்டாத்துவைதமானது சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் சீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது.
சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈசுவரன் என்றும் திருமால் என்றும் பெயர் பெறுகிறார்.
அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை என்பதும் இதன் கொள்கை.
#துவைதம்
இரண்டானது என்பது இதன் பொருள்.
இறைவன் ஒருவனே சுதந்திரமானவன், உலகு உயிர் என்பவை வேறானவை.
இறைவன் தனி, மற்றவை அதில் சேராதவை.
பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று.
சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம் என்கிறது துவைதம்.
No comments:
Post a Comment