படபடப்பாக வீட்டுக்குள் வந்த மரகதத்திடம் "ஏன் பிள்ளை நல்லநாள் அதுவுமா இப்படி பதறிற்று வாற" என்று கேட்டாள் மங்களம் பாட்டி. "இந்த ரீற்றா பெத்துப்போட்ட ரெண்டாவது வேலிக்கால எட்டி எட்டி பார்த்துக்கொண்டு நிற்குது.. இன்னைக்கு நாங்க பொங்கல் வைச்ச மாதிரித்தான்" என்று சலித்துக்கொண்டே சொன்னாள் மரகதம்.
"நீ இந்த நாயை பார்க்கிறத விட்டுட்டு பார்க்கிற வேலையைப்பார், எல்லாத்தையும் தம்பிரான் பாத்துக்குவார்" என்றாள் மங்களம் பாட்டி. மங்களம் சொன்ன வார்த்தைகளால் மரகத்தத்தின் மனம் ஆறுதல் அடையவில்லை. "இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக்கொண்டே இருப்பார், இதுக்கெல்லாம் எப்பதான் முடிவு கட்டப்போறார்" என்று மனதுக்குள் நொந்து கொண்டாள்.
அது போர்த்துக்கேயர் எமது மண்ணை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்திருந்த காலம். கிறிஸ்தவ காட்டுமிராண்டிகள் தமது அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டிருந்த காலம். அன்று எல்லா இடங்களிலும் கட்டாய மதம்மாற்றம் நடந்துகொண்டிருந்தது. கிறிஸ்தவர்களாக மாறவேண்டும் அல்லது கிறிஸ்தவர்கள் போலாவது தம்மைக் காட்டிக்கொள்ள வேண்டும். உயிர்வாழ்வதற்கு வேறு வழியே இல்லை. அன்றைய கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்களால் தமிழர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள்.விரும்பியோ விரும்பாமலோ அந்த அடையாளங்களை ஏற்பதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். மறுப்பவர்கள் மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
தமிழர்களின் பாரம்பரிய விழாக்கள், பண்டிகைகள், விரதங்கள் அனைத்தும் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டிருந்தது. யாரேனும் தமிழர்களின் பாரம்பரிய வழிபாடு, விரதம், பண்டிகை என்று கொண்டாடினால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார்கள். அவ்வாறு சித்திரவதை செய்யப்பட்ட பலர் கொல்லப்பட்டார்கள். அதனால் அப்போது யாரும் வெளிப்படையாக தமிழர்களின் பாரம்பரிய வாழ்வை வாழவே முடியாது என்றாகிவிட்டது.
ஆனால் மக்கள் பலரும் இரகசியமான முறையில், ஏதோ திருட்டு வேலை செய்வதுபோல தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்களை பின்பற்றியே வந்தனர். ஆனால் அதனைக் கூட கிறிஸ்தவ காடையர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாரம்பரிய நிகழ்வுகளை நடத்தும் தமிழர்களை ஒற்றர்கள் மூலம் கண்டறிந்து சித்திரவதை செய்வதையும், கொலைகள் செய்வதையும் தொடர்ந்து கொண்டே இருந்தது கிறிஸ்தவ காட்டுமிராண்டி கூட்டம்.
நாட்டிலோ, ஊரிலோ எங்குமே கோயில்கள் இல்லை. எல்லா கோயில்களும் கிறிஸ்தவ காட்டுமிராண்டி கூட்டத்தினால் இடித்து அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது எஞ்சியிருப்பவை முனியப்பர் முனீஸ்வரன் என்று வணங்கப்படும் பெருமரங்களும், நாகம்மா நாகதம்பிரான் என்று வணங்கப்படும் புற்றுக்கோயில்களும், விழாக்கள், விரதங்கள் தவிர்த்து சிலுவை வேடம் தரிக்கும் வைரவர் சூலங்களும் மட்டுமே.
வழிபடும் வரை சூலமாக வைத்திருந்துவிட்டு, வழிபாடு முடித்தபின்னர் அதன் இரு கையையும் நிமிர்த்தி சிலுவை போன்று மாற்றிவிடுவார்கள்.
மரகதத்தின் வீடிருக்கும் காணிக்குள் இருப்பதும் அப்படி ஒரு புற்றுக்கோயில்தான். மரகதம் குடும்பத்திற்கு நாகதம்பிரான்தான் குலதெய்வம். நாட்தவறாமல் விளக்கேற்றி பால்வைத்து பூசை செய்யும் கோயில். ஆனால் இப்போது மாதம் ஒருமுறை விளக்கேற்றுவதே பெரிய பாடாகிவிட்டது.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத பௌர்ணமி அன்று குலதெய்வம் கோயிலுக்கு பொங்கல், படையல் என்று ஊரைக் கூட்டி கோலாகலமாக கொண்டாடுவது மரகதம் குடும்பத்தின் வழக்கம். ஆனால் கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்ததில் இருந்து ஊரைக்கூட்ட முடியவில்லை. இதற்கு முதல் வருடம்கூட யாருக்கும் தெரியாமல் பொங்கல் செய்து படைத்து பூசை செய்துவிட்டு, பிறகு அடையாளங்களை அழித்துவிட்டே வந்தார்கள். வந்த கொஞ்ச நேரத்திலேயே கிறிஸ்தவ காட்டுமிராண்டி கூட்டம் தேடுதல் நடத்தியது. ஒன்றுமே அந்த கூட்டத்தின் கையில் கிடைக்காததால் திரும்பிப்போனது.
இந்த வருடம் பொங்கல் விழாவை நடத்தவே விடக்கூடாது என்பதற்காகவே ரீற்றா அவளின் இரண்டாவது மகனை உளவுபார்க்க அனுப்பியிருந்தாள். ஆனால் இப்படி யாரும் எட்டிப் பார்க்கக்கூடாது என்று போன கிழமைதான் மரகதமும் அவளின் கணவன் மாணிக்கமும் தெருவோர வேலி முழுவதும் அலம்பல் வைத்து கட்டி இரண்டு பக்கமும் பனையோலையும் வைத்து அடைத்தார்கள். அந்த வேலிக்கூடாக ஒன்றுமே தெரியாமல்தான் ரீற்றாவின் இரண்டாவது படாத பாடுபட்டுக் கொண்டு திரிந்தது.
ரீற்றா அந்த ஊர்க்காரிதான். இந்த கிறிஸ்தவ கூட்டம் வருவதற்கு முன்பு அவள் ஊரைவிட்டு விரட்டப்பட்டிருந்தாள். அவளின் பெயர் ஒருவருக்கும் தெரியாது. "பெரிசு, பெரிசு" என்றுதான் அவளை எல்லோரும் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டு வயதிலேயே தம்பிமுத்தனின் பெரிய மகனோடு பெரிய வேலைபார்க்க பனங்காட்டுக்குள் போய், பிடிபட்டு ஊரைவிட்டு கலைக்கப்பட்ட ஓடுகாலிதான் இந்த ரீற்றா. அவள் அதற்குப் பிறகு நீண்டகாலம் ஊருக்குள் வருவதில்லை. ஏன் வரவே விடுவதில்லை என்றே சொல்லலாம். அந்த சம்பவத்திற்கு பிறகு தம்பிமுத்தனின் குடும்பம் எங்கே போனதென்றே தெரியாது. ஆனால் இந்த ரீற்றாவின் குடும்பம் ஊருக்கு வெளியே உள்ள பனங்காட்டுக்குள் ஒரு குடிசை போட்டுக் கொண்டு இருந்தது. "தாயும், மகளும் பெரிய வேலைபார்க்க தகப்பன் காவல் பார்க்கிறான்" என்று சனங்கள் அந்த காலத்தில் கேவலமா கதைப்பார்களாம். அரிசிக்கும் கிழங்குக்கும் அடிவயிறு நனைப்பதே றீற்றாவின் அப்போதைய முழு நேர தொழில்.
இப்போது அவளை பிடிக்க இயலாது. ஊருக்குள்ள றீற்றாவின் வீடுதான் பெரிய வீடு. தம்பிமுத்தனின் மகனுடன் பனங்காட்டுக்குள் போய் பிறந்த மூத்தது, இப்போது வளர்ந்து ஊழியம் செய்ய என்று போய்விட்டதாம். அவ்வப்போது வெள்ளை நிறத்தில் பாவாடை மாதிரி ஒரு ஆடை உடுத்திக்கொண்டு வந்துபோகும். இரண்டாவதிற்கு அப்பா யாரென்றே தெரியாது. பனங்காட்டுக்குள் பலான தொழில் செய்தபோது பிறந்தது அது. அதுவும் ஊழியம் செய்யத்தான் போகப் போகின்றதாம். அதற்கு ஏதோ பயிற்சி எடுக்கிறதாம். இன்னும் முடியவில்லையாம். அதைவிட இன்னும் நாலு இருக்கிறது ரீற்றாவிற்கு. நாலும் பெண். அவற்றுக்கும் அப்பா யார் என்று தெரியாது. அதுகளும் இப்போது தாயுடன் சேர்ந்து தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டன.
ரீற்றா இப்போது தனியாக இல்லை. நாலு மகள்கள். அதைவிட வெளியூரில் இருந்து வந்து தங்கியுள்ள நான்கைந்து இளம் பெண்கள். அவள் தொழில் கொடிகட்டிப் பறந்தது. அவள் வீட்டிற்கு கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு அதிகாரிகள், உள்ளூர்,வெளியூர் ஊழியக்காரர்கள் என்று வருவதும் போவதுமாக இருப்பார்கள். பனங்காட்டுக்குள் இருந்தபோது வாடிக்கையாளர்களாக இருந்தவர்களும் அவ்வப்போது வந்து செல்வார்கள். அவள் வீடு இப்போது பரபரப்பான இடம். வெள்ளை, கறுப்பு என்று வர்ண வேறுபாடு இல்லாமல் பலர் வந்து தங்கிச் செல்வார்கள். அவள் வீட்டு வாசலில் சிலுவை குறியீடாக பொருத்தப்பட்டிருந்தது.
ரீற்றாவின் மகன் சுற்றித்திரியும் அந்த நேரத்திலும் படையலுக்கு தேவையான எல்லாவற்றையும் வீட்டிற்குள் வைத்தே செய்துவிட்டாள் மரகதம். அதற்குள் பூசைக்கான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்துவிட்டார் மாணிக்கம். பொழுது சாய ஆரம்பித்திருந்தது. யாரும் பார்க்காத வண்ணம் ஒவ்வொரு பொருளாக புற்றுக்கோவிலடிக்கு கொண்டுசென்றனர் மரகதத்தின் பிள்ளைகள். மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த பஞ்சலோக நாகத்தை எடுத்து புற்றுக்குள் சொருகினான் மரகத்தத்தின் மூத்தமகன் மேகநாதன். இலையை வைத்து வேகமாக படையலை வைத்துவிட்டு, ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி புற்றுவாயில் வைத்தார் மாணிக்கம். புற்றில் இருந்து வழக்கமாக வரும் நாகராஜன் வரவில்லை. அனைவருக்கும் ஒரே கவலை. ஆனால் என்ன செய்வது. காலம் தாழ்த்த முடியாது அவசர அவசரமாக பூசைகளைச் செய்தார் மாணிக்கம்.
பூசை முடிந்தது. மனமுருகி தேவாரம் பாட ஆரம்பித்தார் மரகதம். இடர்களையும் பதிகத்துப் பாடலை அவளுடன் சேர்ந்து குடும்பம் முழுவதும் பாட ஆரம்பித்தது.
"மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்று உனைப் பேசின் அல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே"
என்று அவர்கள் பாடி முடிக்கவும், "ஐயோ, அம்மா" என்று கதறல் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
"எதுக்கும் பதட்டப்படாதங்க, எல்லாம் நல்லதுதான் நடந்திருக்கு" என்றாள் மங்களம் பாட்டி.
அவசர அவசரமாக எல்லாவற்றையும் அகற்றினார்கள், பூசை செய்த அடையாளமே தெரியாமல் தடயங்களை அழித்தார்கள், பஞ்சலோக நாகத்தையும் மண்ணில் புதைத்தார்கள். பால் கிண்ணத்தை மட்டும் புற்றடியில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார்கள். வீதியில் வேலி ஓரத்தில் நாலைந்து பேர் பரபரப்பாக நிற்க ஒருவன் முனகிக்கொண்டே இருந்தான். மரகதம் கடப்பை திறந்து எட்டிப் பார்க்கவும் முனகியவனின் உயிர் பிரியவும் சரியாக இருந்தது.
ரீற்றாவின் ரெண்டாவது மகனே செத்துப்போய் கிடந்தான். உளவுபார்க்க வந்தவன் நிலவுபார்க்கக் கிடந்தான். வேலியைப் பிரித்து கண்வைத்தவனின் ஒரு கண்ணையே காணவில்லை. எட்டிப் பார்த்தவன் எட்டாத தூரத்திற்கு சென்றுவிட்டான். ஆம், நாகராஜன் அவன் கண்ணிலேயே கொத்தியுள்ளான். எப்படித் தப்புவது?
நாகராஜன் கடமை முடிந்த திருப்தியுடன் அமைதியாகப் பாலைக் குடித்துவிட்டு புற்றுக்குள் சென்றான்.
ரீற்றாவின் வீட்டில் இருந்து வந்த சிலர் சவத்தை தூக்கிக் கொண்டு போனார்கள். மரகதத்திற்கு இந்த மரணம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லா மரணங்களும் மனவருத்தம் தருவதில்லை, சில மரணங்கள் மகிழ்ச்சியையும் உண்டுபண்ணும் என்பதை அவள் அப்போதுதான் அனுபவபூர்வமாக உணர்ந்தாள்.
சவத்தின் பின்னால் கதறி அழுதபடியே ரீற்றா சென்றாள். எட்டிப்பார்க்கும் மரகதத்தை நிலவு வெளிச்சத்தில் ரீற்றா திரும்பிப்பார்த்தாள். இப்போது மரகதத்தின் கண்களில் இருந்தும் கண்ணீர் துளிர்த்தது. இருவர் கண்களிலும் கண்ணீர்.
கண்ணீர் இரண்டுமே ஒன்றுதான்.ஆனால் மரகதத்தின் கண்களில் இருந்து வருவது ஆனந்தக்கண்ணீர். ஆனால் ரீற்றாவின் கண்களில் இருந்து வருவதை என்னவென்று சொல்வது??
No comments:
Post a Comment