Sunday 22 May 2022

புலிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்- பகுதி 1 (வரலாற்றுக் கதை)

முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணத்தில் இது பத்தொன்பதாவது இடம். எங்கே போகிறோம் என்று தெரியாமல்தான் பயணித்தார்கள், ஆனால் இன்று முள்ளிவாய்க்காலை அண்மித்து விட்டார்கள். வன்னிவிளாங்குளத்தில் இருந்து புறப்பட்ட நமசிவாயம் குடும்பம் பதினெட்டு இடங்களில் குடில் அமைத்துவிட்டார்கள். ஆனால் எதிலும் ஓரிரு வாரங்களுக்குமேல் இருக்க முடியவில்லை. இப்போது இது பத்தொன்பதாவது குடில். ரெட்டைவாய்க்கால் சந்தியில் இருந்து வலைஞர்மடம் செல்லும் பாதையில் ஓரிடத்தைப் பிடித்து குடிலமைத்து விட்டார்கள்.

நமசிவாயத்தின் ஒரே பிள்ளை தீபா. கேட்டது எல்லாம் கிடைக்கும் செல்லப்பிள்ளை. வயல், வளவு, மாடு, ஆடு என்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்த குடும்பம் என்பதால், வாழ்க்கை பற்றிய பயம் ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் இன்று ஒருவேளை உணவை நின்மதியாக உண்பதே பிரச்சினையாக இருந்தது. வறுமை, பசி என்றால் என்னவென்றே தெரியாமல், வேளா வேளைக்கு விதம் விதமாக சாப்பிட்டு வளர்ந்த அவளுக்கு இவையெல்லாம் புதிதாக இருந்தது. 

தொடர்ச்சியான இடப்பெயர்வால் படிப்பும் குழம்ப; பதினோராம் வகுப்பு தேர்வுகூட அவளால் எழுத முடியவில்லை. தீபாவின் குடும்பம் குடிலமைத்த இடத்திற்கு அருகில்தான் தர்சினியின் குடும்பமும் குடிலமைத்து இருந்தது. வன்னிவிளாங்குளத்திலும் தீபாவின் வீட்டிற்கு அருகில்தான் தர்சினியின் வீடு. தர்சினியும், தீபாவும் ஒரே வகுப்பில்தான் படித்தார்கள். இன்று இடம் பெயர்ந்து வரும்போதும் ஒன்றாகவே வந்திருந்தார்கள். 

தர்சினியின் குடும்பம் சொல்லிக்கொள்ளும்படி வசதியான குடும்பம் இல்லை. ஏதோ அன்றாடம் உழைத்து வயிற்றைக் கழுவுபவர்கள். தகப்பன் கூலி வேலைக்கு சென்று கொண்டுவரும் பணத்தில் குடும்பத்தின் சீவியம் ஓடியது. தர்சினி குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. அவளுக்கு மூத்தவன் இயக்கத்தில் இணைந்து இறந்து போய்விட்டான். அவளுக்கு கீழே நான்கு சகோதரர்கள். ஊரில் இருக்கும் போது தீபாவின் தாய் லட்சுமிதான் பார்த்து பாராமல் உதவிசெய்வார். அரிசி, மா, தேங்காய் என்று கேட்காமலேயே கொடுத்து விடுவார். ஆனால் இன்று அவர்களுக்கே கஷ்டம். அடுத்தவருக்கு எப்படி உதவி செய்வது. ஆனாலும் ஏதோ முடிந்ததை செய்தார்.

முன்பு ஜெயசிக்குறு சண்டை நடந்தபோதும் வன்னிவிளாங்குளத்தில் இருந்தும் ஒருமுறை இடம்பெயர்ந்தார்கள். அப்போது தீபாவின் குடும்பம் யோகபுரத்தில் தங்கிவிட, தர்சினியின் குடும்பம் மன்னார், மடுவிற்கு இடம்பெயர்ந்து சென்றது. அங்கே மடு கிறிஸ்தவ தேவாலயத்தை அண்டித்தான் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. கிறிஸ்தவ பாதிரிகள்தான் முகாம் நிர்வாகம், நிவாரணம் என்று எல்லாவற்றையும் முடிவு செய்தனர். போனவுடன் நான்கு நாட்களுக்கு எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தது. பிறகு நிலமை மாறிவிட்டது. கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால்தான் உணவுப் பொதிகள் கிடைக்கும், கொட்டகை கிடைக்கும் என்று நிர்ப்பந்தித்தார்கள். வறுமை வயிற்றை வதைக்க வேறுவழியில்லாமல் தர்சினியின் தந்தையும் மதம்மாற முடிவெடுத்தார். கோயில் குளம் விரதம் என்று வறுமையிலும் தடம்மாறாமல் வாழ்ந்த தர்சினியின் தாய் ரஞ்சனிக்கு அதில் இஷ்டமே இல்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் போனது, உதவி செய்வதற்கும் யாரும் இல்லை, அகதி முகாம்களில் வேலையும் கிடைக்காது, எத்தனை நாட்களுக்கு தான் வயிற்றில் ஈரத்துணியைப் போட்டுக் கொண்டு தூங்குவது. மனமே இல்லாமல் மதம் மாற சம்மதித்தாள் ரஞ்சனி. வயிற்றுப் பாட்டிற்காய் வாழ்க்கையை விற்பது அசிங்கமாக இருந்தாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை.

அன்றைய அசிங்கம் வேறு, இன்றைய அவலம் வேறு. ஒருவாறு தங்கள் வசதிக்கேற்ப குடில் அமைத்து தங்கிவிட்டார்கள். தீபாவின் தந்தை வரும்போதே மரக் குற்றிகள், தகரம், பைகள் என்று உழவியந்திரத்தில் ஏற்றி வந்ததால், குடிலுகுள்ளாகவே பதுங்கு குழி வெட்டி அதற்கு மேல் மரம், மண் மூட்டை, தகரம் என்று போட்டு ஓரளவு பாதுகாப்பான இருப்பிடத்தை அமைத்துவிட்டார். உழவியந்திர பெட்டிக்கு கீழே அமைக்கப்பட்ட இன்னும் ஒரு பதுங்குகுழி சமையற்கூடம் ஆனது. அன்றைய அகதி வாழ்வில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் அவர்கள் அமைக்கும் பதுங்கு குழிகளிலும், பதுக்கி வைத்திருந்த உணவுப் பொருட்களிலும்தான் வெளிப்பட்டது.

பதுங்கு குழியின் மேல் உள்ள தகரத்தில் விழும் எறிகணை சன்னங்களும், ஆறிப்போய் வந்து விழும் தோட்டாக்களும்கூட அவர்களுக்கு பழக்கப்பட்டு விட்டது. அந்த சப்தங்கள் கூட சகஜமாக மாறிவிட்டது. பதுங்கு குழிகளுக்குள்ளேயே முக்கால்வாசி வாழ்க்கை போனது. எறிகணை வீச்சும், துப்பாக்கி சூடும் தணிந்திருக்கும் நேரத்தில் மட்டுமே வெளிக்காற்றை சுவாசிக்க முடிந்தது. அந்த காற்றில் கூட கந்தகம் மணந்தது. தொடர்ந்து பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம். தீபாவிற்கு பொழுதே போகவில்லை. எறிகணை வீச்சு இல்லாத நேரத்தில் பக்கத்து பதுங்கு குழி ஒன்றில் இருப்பவர்களுடன் அறிமுகம் ஆகிவிட்டாள். அவர்கள் பதுங்கு குழியில் டீவி வைத்து படம் பார்ப்பதை அறிந்தாள். அவளுக்கும் பொழுது போக்க வேறு வழியில்லை. தீபாவும் அங்கே படம் பார்க்க சென்று விடுவாள். 

பக்கத்தில் உள்ள பதுங்கு குழிக்குச் சென்று படம் பார்ப்பதை நமசிவாயம் விரும்பவில்லை. ஓரிரு நாட்களில் டீவி, டெக், ஜெனரேட்டர் என்று வாங்கிவந்துவிட்டார். இப்போது தீபாவிற்கு வெளியே செல்வதும் தேவையில்லாமல் போனது. எறிகணை வீச்சு, துப்பாக்கி சூடு எல்லாவற்றையும் மறந்து, வேளாவேளைக்கு உண்பது, படம் பார்ப்பது, தூங்குவது என்று நாட்கள் போனது. ஆனால் அந்த நின்மதிகூட ஓரிரு நாட்களுக்கு மேல் நிலைக்கவில்லை. புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு வேறு நிலையை அடைந்திருந்தது.

வீட்டிற்கு ஒருவர் கட்டாயம் புலிகள் இயக்கத்தில் இணையவேண்டும் என்று சொல்லித்தான் இதுவரை ஆட்சேர்த்தவர்கள், இப்போது வலுவுள்ள அனைவரும் இணையவேண்டும் என்று தம் நிலைப்பாட்டை மாறியிருந்தார்கள். முன்பு வீட்டில் ஒரு பிள்ளை என்றால் விட்டு வைத்தவர்கள், இப்போது அதுவெல்லாம் கிடையாது. கண்ணில் காண்பவர்களை எல்லாம் விரட்டி விரட்டிப் பிடித்தார்கள். அவ்வப்போது மக்கள் வசிக்கும் கூடாரங்களை சுற்றி வளைத்து உள்ளே இருக்கும் இளைஞர் யுவதிகளை பிடித்து வாகனங்களில் ஏற்றிச் சென்றார்கள். தீபா இருக்கும் பகுதியிலும் சுற்றி வளைத்து தேடினார்கள். அண்டா ஒன்றிற்குள் மறைந்து வைத்து ஒருவாறு காப்பாற்றி விட்டார் நமசிவாயம். அதுபோல தர்சினுயும் மண்மூட்டைக்கு நடுவில் ஒளிந்திருந்து தப்பித்து விட்டாள். பிள்ளைகளை பறிகொடுத்தவர்கள் மண்ணை அள்ளிக் கொட்டி திட்டினார்கள். பிள்ளைகளை பறிகொடுத்தவர்களின் ஓலமும், அவலக்குரலும் அந்தப்பகுதியையே பதைபதைக்க வைத்தது. பிள்ளைகளை காப்பாற்றியவர்களால் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை இனி எப்போது வருவார்கள், பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவது என்று பதைபதைப்புடன் இருந்தார்கள்.

அன்றைய இரவு முழுவதும் யாரும் தூங்கவில்லை. நமசிவாயமும் மனதில் நின்மதியில்லாமல் தவித்தார். ஒரே மகள், அவர்களின் வாழ்க்கையே அவள் மட்டுந்தான். அவளையும் பறிகொடுத்துவிட்டு என்ன செய்வது என்று தவித்தார். லட்சுமியும் நமசிவாயமும் ஒருவரை ஒருவர் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்; பொழுது விடிந்துவிட்டது.

அன்று காலை அமைதியாகவே இருந்தது, அதுவரை துப்பாக்கிச்சூடும் ஆரம்பிக்கவில்லை, எறிகணைகளும் வீசப்படவில்லை. அந்த நேரத்தில் பதுங்கு குழி வாசலில் நின்றாள் ரஞ்சினி. "லட்சுமி அக்கா! உந்த கோதாரி விழுவார் இனி எப்ப பிள்ளை பிடிக்க வாறாங்களோ தெரியாது, எங்கட வீடுகள்ள பிள்ளையள் இருக்கிறத எவன் காட்டிக் கொடுப்பான் எண்டும் தெரியாது, அதான் தர்சினிய ஃபாதர் கூட விடலாம்னு இருக்கிறோம், வேணும்னா தீபாவையும் அங்கயே கொண்டு போய் விட்டுடலாம்" என்றாள்.

விடிய விடிய தீபாவின் எதிர்காலம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ரஞ்சினி சொல்லியது ஏதோ போல தோன்றினாலும், ஃபாதர் கூட விடுவது என்பதை நமசிவாயத்தால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. "அவங்களோட விடுறதைவிட பிள்ளை செத்தால் கூட பரவாயில்ல என்றார்". ஆனாலும் லட்சுமிக்கு பிள்ளையைக் காப்பாற்ற அது சரியான வழியாகவே பட்டது. "சர்ச்சுக போய பிள்ளைங்களை பிடிக்க மாட்டாங்கய்யா, சாப்பாட்டுக்கும் பிரச்சினை வராது, நிறைய பிள்ளைங்க ஏற்கனவே உள்ள இருக்குதாங்கய்யா, அதாங்கய்யா கேட்டன், சாயந்திரம்தான் தர்சினியை கூட்டிற்று போறம், நீங்க யோசிச்சிட்டு சொல்லுங்கய்யா" என்று சொல்லிவிட்டு ரஞ்சினி தன் பதுங்கு குழியை நோக்கி நடந்தாள்.

நமசிவாயம் மனதில் கனத்த அமைதி. ஓடாத டீவியை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். டீவி பார்க்கவே தன் மகளை பக்கத்து குடிலுக்கு அனுப்ப விரும்பாதவர் அவர், பாதிரியுடன் அனுப்ப தயாராக இல்லை. லட்சுமியோ விடுவதாக இல்லை. அவள் வெள்ளை மனதில் நஞ்சை தூவிவிட்டாள் ரஞ்சினி. அவர் அமைதியைக் குலைத்து அடம்பிடிக்கத் தொடங்கினாள்.

(தீபாவின் வாழ்க்கை என்னவானது.?)

தொடரும்...


(கோப்புப் படம்)

No comments:

Post a Comment

யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்? மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான த...