Saturday, 5 November 2022

சிவன் சொன்ன ரகசியம்

மகாபாரத போர் முடிந்து கலியுகம் ஆரம்பமாகிய காலம். இந்த கலியுகத்தின் வாழ்வை எண்ணி மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள் என்று அனைவரும் கலங்கிங்கொண்டு இருந்தார்கள். விஸ்வாமித்திரர் மட்டும் எந்த சலனமும் இல்லாமல் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தார். அவரது தவத்தின் பயனால் அவர்முன் சிவன் தோன்றினர். விஸ்வாமித்திரா எதற்காக இப்படி கடுந்தவம் புரிகிறாய், உனக்கு என்ன வேண்டும் கேள் என்று கேட்டார்.

ஈஸ்வரனை பணிந்த விஸ்வாமித்திரர் "பெருமானே இந்த கலியுகத்தின் வாழ்வை எண்ணி மனிதர்கள், முனிவர்கள், தேவர்கள் என்று அனைவரும் கலங்கி நிற்கிறார்கள். இந்த கலக்கத்தை போக்க அருள்புரிய வேண்டும். கலியுகத்திலும் தர்மம் மாறாமல் துன்பமின்றி வாழ அருள்புரிய வேண்டும்" என்று வேண்டினார்.

"விஸ்வாமித்திரா! உன் வேண்டுதலிலேயே அதற்கான தீர்வும் உள்ளது. யுகங்களை பற்றிக் கலக்கம் கொள்ளாதே, எந்த யுகமாக இருந்தாலும் அறம் தவறியவர்கள் அமைதியாக வாழமுடியாது, அவர்களுக்கு மெய்யின்பமும் கிட்டாது. மக்கள் தர்மத்தின்படி வாழ்ந்தால் அவர்களுக்கு துன்பம் கிடையாது. நீ கலங்கிநிற்க தேவையில்லை" என்றார்.

"ஈஸ்வரா அப்படியானால் ஏனைய யுகங்கள் போலத்தான் இந்த யுகமும் இருக்குமா? அப்படியானால் ஏன் கலியுகத்தைக் கண்டு எல்லோரும் பயப்படுகிறார்கள்?"

"உன் சந்தேகம் நியாயமானது, அவர்கள் பயப்படுவதற்கும் காரணம் உள்ளது. ஏனைய யுகங்களைவிட அதர்மிகள் அதிகரித்து இருப்பார்கள், தர்மம் என்பது கூட தனியான பெயராக அடையாளம் காட்டப்படும். தர்மத்தை காப்பதற்காக கடுமையாக போராட வேண்டி இருக்கும். தர்மத்தை குறிக்கும் பெயர் புதிது என்றும், அதனால் முன்பு தர்மம் என்ற ஒன்று இருந்ததே இல்லை என்றும் அதர்மிகள் வாதிப்பார்கள். வன்முறையில் அதர்மம் திணிக்கப்படும். தர்மத்தின் வழியில் வாழ்பவர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள். எது தர்மம் என்றே தெரியாத பெரிய மக்கள் கூட்டம் உருவாகி இருப்பார்கள்" என்றார்.

"பெருமானே! நீங்கள் மட்டுமே எல்லாம் அறிந்தவர், எது எப்படி நடக்கும் என்பதையும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறினால் நாம் அதிலிருந்து தப்பிக்க வழி கிடைக்கும். அதற்கு நீங்கள் தான் அருளவேண்டும்"

வேண்டியவர்களுக்கு வேண்டியது எல்லாம் அருள்பவர் அல்லவா ஈஸ்வரன், அதனால் விஸ்வாமித்திரருக்கு எதிர்கால உண்மையை உரைத்தார். 

"அறிவாற்றல் கிடைக்கும் வழிமுறைகளையும், தர்மத்தின் அடிப்படைத் தத்துவங்களையும் மக்களுக்குப் பரப்பும் வழிமுறையை உருவாக்கு, காலத்தால் அவை அழிவதுபோல் தோன்றும், நேராக கூறும் கருத்து திரித்துக் கூறப்படும், குறியீடாக கூறும் கருத்து புரிந்து கொள்ளாமல் போகும், நீ உருவாக்கும் வழிமுறைகள் உன்னை வெறுப்பவர்கள் மூலமே பரப்பப்படட்டு காக்கப்படும். ஆனால் உரிய காலத்தில் அவை மீட்கப்பட்டு சரியான அர்த்தங்கள் மக்களுக்கு உணர்த்தப்படும்.

ஈஸ்வரா உரிய காலம் எது என்று கூறவில்லையே..?

"மனிதப் பிறவிகளை கடவுள் என்றும், தூதுவர் என்றும் நம்பும் அதர்மிகள் அதிகரித்து வருவார்கள். வாள்முனையிலும் வன்முறையிலும் அதர்மத்தை பரப்பும் அதர்மிகள் அன்பு, அமைதி என்று வேடம் தரிப்பார்கள். நீ உருவாக்கும் தர்மம் அன்று "இந்து" என்று பெயர் பெற்று நிற்கும். பெயர் புதிது என்பதால் தமது அதர்மமே பழமையானது என்றும் சரியானது என்றும் வாதிப்பார்ரகள். நீ வகுத்த வழிமுறையிலேயே அதர்ம சிந்தனைகளையும் பரப்ப முனைவார்கள்"

அதர்மிகள் அழிப்பது முடியாத காரியமா? அவர்களை வெல்வது எப்படி?

"தர்மம் ஒன்றுதான் அவர்களை அழிக்கும் ஆயுதம். மக்கள் ஒழுக்கம் தவறாமல் வாழவேண்டும், அறிவு பெற்று உழைப்பை நம்பி வாழவேண்டும், அப்போது அதர்மிகள் முற்றாக அழிந்து விடுவார்கள். உழைக்காமல் வாழவேண்டும் என்பவர்களும், ஒழுக்கமின்றி வாழ விரும்புபவர்களுமே அதர்மிகளாக மாறுகிறார்கள். உழைத்து வாழும் ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாகும் போது கலியுகம் கூட மகிழ்ச்சி நிறைந்ததாக மாறிவிடும்" என்றார் ஈஸ்வரன்.

"சிவசிவா" என்று பாதம் பணிந்தார் விஸ்வாமித்திரர். 

சர்வம் சிவமயம்





No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...