Saturday, 10 December 2022

கண்ணகை அம்மன் அவதரித்த கதை

 முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த நெடுஞ்செழியன், இமயம் முதல் குமரி வரை இந்திய தேசத்தின் பலநாடுகளையும் போரிட்டு வென்றான். அனைத்து நாடுகளிலும் வெற்றி கொள்ளப்பட்ட செல்வங்களாலும், கல்வி மற்றும் தொழில்களாலும் பாண்டிய நாடு செழிப்புடன் விளங்கியது.

தானும் தன்நாடும் பெற்ற இத்தனை பேறுகளாலும் பாண்டிய மன்னன் செருக்கடைந்து இருந்தான் தான் பெற்ற பேறுகளால் தன்னை சிவனுக்கு நிகரானவன் என்று எண்ணி ஆணவம் கொண்டிருந்தான்.

எதுவும் அளவுக்கு அதிகமாக கிடைத்துவிட்டால் தன்னை விட பெரியது எதுவும் கிடையாது, தனக்கு தெரியாதது எதுவுமில்லை என்ற ஆணவம் மனிதனுக்கு தோன்றிவிடும். அதுபோல் பாண்டியனும் தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் அறமின்றி நடந்தான். அவனது ஆணவத்தால் நியாயவான்கள் பலர் தண்டிக்கப்பட, அதர்மிகள் சுதந்திரமாக உலாவினர்.

அவனுக்கு அவன் தவறை எடுத்துச் சொல்வார் எவருமில்லை. எதிர்த்து பேசவும் யாருக்கும் தைரியமில்லை. அவன் பராக்கிரமங்களை புகழ்ந்து பாடும் கூட்டமும், அவன் செய்வது எல்லாம் சரி என்று ஒத்தூதும் கூட்டமுமே அவனைச் சூழ்ந்திருந்தது. பாண்டிய நாடு முழுவதும் செல்வ மிகுதியால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று குதூகலமாக தோன்றினாலும் யாருக்கும் மனநின்மதி இருக்கவில்லை.

அவனது ஆட்சியில் அறம் தவறி ஒழுக்க கேடுகள் அதிகரித்து இருந்தது. நல்லவர்கள் மிகவும் துன்பப்பட்டு வருந்தினார்கள். அவர்கள் அனைவரும் சிவபெருமானிடமும் பார்வதி தேவியிடமும் தமது துன்பத்தை நீக்கும்படி வேண்டினார்கள்.மக்களின் குறைதீர்க பார்வதியும் எம்பெருமானும் திருவுளம் கொண்டார்கள்.

பாண்டிய மன்னனின் அரண்மனைக்கு சற்று வெளியே ஒரு மாமரம் விசித்திரமாக இருந்தது. மரத்தில் பழுத்த மாம்பழம் ஒன்று தோன்றும். யாரேனும் அதனைப் பறிப்பதற்காக மரத்தில் ஏறி அதனருகில் சென்றால் காணாமல் போய்விடும். இந்த தகவல் அரண்மனைக்கும் எட்டியது. நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவி அந்த மாம்பழம் தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கலாம், அதனை எப்படியாவது பறித்துத் தாருங்கள் என்று மன்னனிடம் வேண்டினாள். ஏறிச் சென்றால் தானே மறைகிறது என்று எண்ணிய பாண்டிய மன்னன் மரத்தின் கீழ் இருந்து அம்பினை எய்து கனியினை வீழ்த்தினான். வீழ்ந்த பழம் மண்ணில் விழாமல் இருக்க கையில் ஏந்தினான். ஆனால் அந்த மாம்பழம் கையில் பட்டதும் நெருப்பு கோளமாக மாறிச் சுட்டது. மண்ணில் விழாமல் பிடிக்க வேண்டும் என்ற அவனது முயற்சி தோற்றுப் போய் பழம் மண்ணில் விழுந்தது. மண்ணில் விழுந்த பழத்தை எடுத்து அதில் ஒட்டி இருந்த மண்ணைத் தட்டி விட்டு பழத்தைக் கொண்டு சென்று மகாராணியிடம் கொடுத்தான்.

பழம் கையில் ஏந்தும் பொழுது தணலாக சுட்டது என்ற செய்தியை கேட்டு பயந்த கோப்பெருந்தேவி அந்தப் பழத்தை உண்ணாமல் ஒரு பொன் குடத்தில் இட்டு வைத்தாள். பின் மூன்று நாட்களின் பின்னர் அந்த பொன்குடத்தைத் திறந்து பார்த்த மகாராணிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. குடத்தில் வைத்த மாங்கனி பேரழகு மின்னும் ஒரு பெண்குழந்தையாக மாறியிருந்தது.பயந்துபோன மகாராணி குடத்தை குழந்தையுடன் எடுத்து சென்று மன்னனிடம் காட்டி பதைபதைத்தாள். பாண்டியனுக்கு என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. அரண்மனையின் ஆஸ்தான சோதிடரை அழைத்து ஆலோசனை கேட்டான். 

சோலியை உருட்டிப் போட்ட சோதிடருக்கு எதிர்காலம் அப்படியே புரிந்தது. இந்த குழந்தையால் தான் மன்னனின் மரணமும், மதுரையின் அழிவும் என்று தெரிந்தது. விதியை மாற்ற சோதிடருக்கும் விருப்பமில்லை. விதி என்பது அப்படித்தானே தன்னை வடிவமைக்கும். குழந்தையாக உருவெடுத்து நின்ற பார்வதியை மனத்தால் வணங்கிய சோதிடர், மன்னா இந்த குழந்தை இராச்சியத்திற்கு நல்லதல்ல, நாட்டில் இருந்து எடுத்துச்சென்று வெளியே விட்டுவிடு என்றார்.

எல்லை தாண்டி இன்னொரு நாட்டில் சென்று எப்படி குழந்தையை விட்டுவிட்டு வருவது என்று சிந்தித்த பாண்டியன், அழகிய மிதக்கும் பேழை ஒன்றைச் செய்து, அதில் குழந்தையை வைத்து ஆற்றில் விட்டு வரச்சொல்லி ஏவலர்களைப் பணித்தான். ஏவலர்களும் அவ்வாறே செய்தார்கள்.

அந்த காலத்தில் சோழநாட்டை கரிகால பெருவளத்தான் ஆட்சிசெய்துவந்தான். அந்த சோழ நாட்டின் தலைநகரான காவிரிப் பூம்பட்டினத்தில் மாசாத்துவன், மாநாகன் என்னும் இரு நண்பர்கள் வணிகத் தொழில் செய்து வந்தார்கள். அவர்கள் இருவரும் காவிரிப் பூம்பட்டினத்தின் ஆற்றுப் படுகையின் ஓரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது பேழை ஒன்று மிதந்து வருவதைக் கண்டார்கள்.இருவரும் ஓடிச்சென்று பேழையைத் தூக்கி வந்து திறந்து பார்த்தார்கள். ஒரு அழகிய பெண் குழந்தை ஒன்று

அதனுள் அழுதவாறு இருந்தது. மாநாகனுக்கு ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. அந்த குழந்தையின் பெயர் கோவலன். ஆனால் மாசாத்துவனுக்கு திருமணம் செய்து பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. அதனால் அந்த பேழையில் வந்த குழந்தை தான் வணங்கும் ஈஸ்வரனே அனுப்பிய குழந்தை என்று மகிழ்ந்து வீட்டிற்கு எடுத்துச் சென்றான். தம் வாழ்வின் இருளை நீக்கி மகிழ்ச்சியை உண்டாக்கியவள் என்ற பொருளில் கண்ணகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். 

காலம் மிக வேகமாக ஓடியது. கோவலன் கண்ணகை இருவரும் வளர்ந்து மணவயதை அடைந்தார்கள். கோவலனை கண்ணகைக்கு சீரும் சிறப்புமாக கோலாகலமாக மணமுடித்து வைத்தார்கள். நண்பர்களான மாசாத்துவனும் மாநாகனும் தமது பிள்ளைகளை மணமுடித்து வைத்து சம்பந்திகள் ஆனார்கள்.

மணம் முடித்து சிலகாலம் மகிழ்ச்சியாக வாழ்ந்த கோவலன் வியாபாரம் செய்வதற்காக காவிரிப்பூம்பட்டினம் செல்கிறான். அப்போது சோழ மன்னனின் அரண்மனை அரங்கத்தில் மாதவி என்னும் கணிகையர் குலப் பெண்ணின் அரங்கேற்றம் நடப்பது கேள்விப்பட்டு பார்ப்பதற்காக செல்கிறான். அவள் ஆடல் திறத்திலும், அழகிலும் மயங்கிப் போய் வெளியே வந்து கோவலனுக்கு அரசனின் அறிவிப்பு சபலத்தை தூண்டியது.

மாதவியின் கணிகையர் குலத்தவர்கள் உலகாயதம் என்னும் சமண பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடவுள் என்று ஒன்று இருப்பதை ஏற்காமல் இந்த உலகமே உண்மையானது, உலகியல் இன்பங்களில் திளைத்து இருப்பதே வாழ்வின் பயன் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவர்கள். அவர்கள் யாரும் திருமணம் செய்வதில்லை. திருமணம் கடந்த உறவே அவர்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. பெண்கள் பருவ வயதை அடைந்தவுடன் அவர்களின் அழகு திறமை என்பவற்றை பொறுத்து விலை தீர்மானிக்கப்பட்டு செல்வந்தர் களுக்கு விற்கப்படுவார்கள்.

மாதவியின் அழகு திறமை என்பவற்றை பொறுத்து அவளுக்கு 1008 பொன் என்பது விலையாக தீர்மானிக்கப்பட்டது. அரங்கேற்றம் செய்தபோது மன்னன் பரிசாக அளித்த மாலையை எவன் 1008 பொன் கொடுத்து வாங்குகிறானோ அவனுக்கே மாதவி சொந்தம். பொதுவாக இவ்வாறான கணிகையர் குலப் பெண்களை வாங்குபவர்கள் தங்களின் இச்சை தீர்ந்தவுடன் அவர்களை வியாபாரப் பொருளாக்கி விடுவார்கள். 

கோவலன் தான் வியாபாரம் செய்வதற்காக கொண்டுவந்து பணத்தை எடுத்து மாலையை வாங்கினான்.அடங்காத ஆசையுடன் சென்றவன் மாதவியே கதி என்று அவளுடனேயே தங்கிவிட்டான். கோவலனுக்கு அவளை வியாபாரப் பொருளாக்க விருப்பமில்லை. தன் வீடு மனைவி எல்லாவற்றையும் மறந்து மாதவியின் அணைப்பிலேயே மயங்கிக் கிடந்தான்.

கோவலனைக் காணாத கண்ணகி மனமுருகி ஈஸ்வரனை வழிபட்டாள். அப்போது அவள் மனதில் தோன்றிய ஈஸ்வரன் அவளின் பிறப்பின் நோக்கத்தையும், அவள் அன்னை பார்வதியின் அம்சம் என்பதையும் உணர்த்தி எல்லாம் விதிப்படியே நடக்கிறது, வருந்தாதே, இவை எல்லாம் உன் அவதாரத்தின் நோக்கம் நிறைவேறுவதற்காகவே என்று கூறி மறைந்தார்.

சில காலம் செல்ல செல்வங்கள் அனைத்தையும் இழந்த கோவலன், மாதவியின் நடத்தையிலும் வெறுப்புற்று மீண்டும் கண்ணகியிடம் வருகிறான். மாதவியிடம் சென்று செல்வங்கள் அனைத்தையும் இழந்ததால் இப்போது அவர்களை வறுமை சூழ்ந்திருந்தது. மீண்டும் வியாபாரம் செய்வதற்கு மூலதனம் இல்லாததால், மூலதனத்தை பெறும் பொருட்டு கண்ணகியின் மாணிக்கப்பரல்களாலான கால்சிலம்பம் ஒன்றை வாங்கிக் கொண்டு பாண்டிய நாட்டிற்கு செல்கிறான். 

பாண்டிய நாட்டில் மாணிக்க பரல்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று பயணித்த கோவலனுக்கு ஆபத்து சூழ்ந்தது. இவன் பாண்டிய நாட்டிற்குள் போன அதே காலத்தில் பாண்டியன் மனைவியின் கால்சிலம்பமும் காணாமல் போய் கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் என்று முரசறையப்பட்டது. இதை அறியாத கோவலன் கால் சிலம்பை விற்க கடைத் தெருவிற்கு செல்கிறான். வாங்குவதற்காக சிலம்பை பார்த்த பொற்கொல்லன் கோவலனைத் திருடன் என்று சொல்லி மன்னனிடம் பிடித்துக் கொடுக்கிறான். கோவலன் வாழ்க்கையில் விதி விளையாடியது. ஆணவம் தலைக்கேறி ஆட்சி செய்த பாண்டிய மன்னன், விசாரணை ஏதும் செய்யாமல் கோவலனே குற்றவாளி என்று சொல்லி தலையை துண்டித்து தண்டனை கொடுக்கிறான்.

நடந்ததை உணர்ந்த கண்ணகி சினங்கொண்டு பாண்டிய நாட்டிற்கு வந்தாள். அரண்மனைக்கு சென்று குற்றம் ஏதும் செய்யாத தன் கணவனை கொன்ற கொலைகாரன் நீ என்று பாண்டியனை பார்த்து சீறினாள். ஆணவம் தலைக்கேறிய பாண்டியன் தான் செய்தது சரியென்று வாதித்தான். கோவலன் கொண்டு வந்த சிலம்பையும், ராணியிடம் இருந்த சிலம்பையும் வாங்கி உடைத்து வீசுகிறாள். ராணியின் சிலம்பில் இருந்து முத்துப் பரல்களும், கோவலன் கொண்டு வந்த சிலம்பில் இருந்து மாணிக்க பரல்களும் தெறித்தன. அவள் கொண்டுவந்த மற்றைய சிலம்பையும் எடுத்து உடைத்து வீசினாள். அதிலிருந்தும் மாணிக்க பரல்கள் தெறித்து விழுந்தன. 

பாண்டியன் அரியணையில் இருந்து கீழே இறங்கினான். தன் தவறையும், தான் ஆணவத்தால் செய்த அநீதியையும் எண்ணி கலங்கினான். இதுவரையில் ஆணவத்தால் எத்தனை தவறுகள் செய்தேனோ என்று பதறினான். நான் ஆள்வதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கும் தகுதியில்லாதவன் என்று தன் உறைவாளை உருவினான். அவன் வாழ்வை அவனே முடித்துக் கொண்டான். 

மதுரை மக்களுக்கு தான் யாரென்பதை கண்ணகி வடிவில் இருந்த பார்வதி தேவி உணர்த்தினார். மன்னனின் அகங்காரமும் அதனால் உண்டான மரணமும் மதுரை மக்களை பயங்கொள்ள செய்தது. மக்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து, ஆணவத்தையும் அறியாமையையும் போக்கி நல்லபடியாக வாழ ஆரம்பித்தார்கள். தூங்கா நகரம் துகிலுரியும் தொழில் விட்டு ஒழுக்கமாக மாறியது.

கண்ணகி வடிவில் தோன்றி மதுரை மக்களின் ஆணவத்தையும் அறியாமையையும் அழித்த பார்வதி, தன்னை நம்பியவர்கள் அனைவரது ஊர்களுக்கும் சென்று காட்சியளித்து, அருளாசி வழங்கி இறுதியில் கையிலாயத்தை சென்றடைந்து தன் அவதாரத்தை முடித்துக் கொண்டார்.








No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...