Monday, 30 September 2024

மயிரைப் புடுங்கிகள் உருவானகதை

கடவுளே இல்லை என்றும், எம்மால் எம் தவத்தால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்ற சமணர்களின் வாதத்தை வெல்வதற்காக சைவர்கள் போராடிக் கொண்டிருந்த காலம். 

அப்போதெல்லாம் சமணர்கள் முண்டம் வழிப்பது கிடையாது. சிக்கெழுந்த பாண்டல் தலையர்களாக அழுக்கான நாற்றம் பிடித்த உடலுடன் அவர்கள் அலைந்து கொண்டிருந்த காலம். அவர்கள் குளிப்பது கிடையாது. முடியை வாரிக் கட்டுவது கிடையாது. அவர்களில் சிலர் ஆடை உடுத்துவர்.  பலர் உடுத்துவதே இல்லை. இதுதான் அன்றைய சமணர்கள் கோலம்.

சும்மா இருந்துவிட்டால், மூச்சை அடக்கி விட்டால் எல்லாவற்றையும் தனதாக்கி கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சுற்றிக் கொண்டு, மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருந்த காலம் அது. மக்களுக்கு கடவுள் மீதான நம்பிக்கை இல்லாமல் போயிருந்தது. சிவாலயங்கள் எல்லாம் சிதிலமடைந்து கிடந்தது. 

இறைவனே இல்லை என்று நம்ப வைக்கப்பட்ட மக்கள், இந்த நாற்றம் பிடித்த மனிதர்களை மண்டியிட்டு வணங்கிக் கொண்டிருந்தார்கள். கல் எப்படி கடவுள் ஆகும், அதனால் எதையும் செய்ய முடியாது, உயிரோடு இருக்கும் இவர்கள் தான் கடவுள், இவர்கள் உங்கள் கடவுளுக்கும் மேலானவர்கள், அவர்கள் தம் தவ வலிமையால் கடவுளையே வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள் என்று சைவர்களை நோக்கி பேசும் அளவுக்கு சமணர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு பெருங் கூட்டமே அன்று இருந்தது.

அவ்வாறான காலத்தில் தான் வடக்கே இருந்த சிவஞானி ஒருவர் தென்னகம் நோக்கி வந்தார். இங்கு வந்து இங்குள்ள ஆலயங்களின் மக்களின் நிலையைப் பார்த்து மிகவும் மனம் வருந்தினார். ஆன்மீக பூமி சிவபூமி என்று போற்றப்பட்ட தேசம் இப்படி அறியாமையால் சீர்கெட்டு கிடைக்கிறதே என்று கவலைப்பட்டார். இவர்களுக்கு எப்படி உணர்த்துவேன் இறைவா நீதான் வழிகாட்ட வேண்டும் என்று வேண்டி நின்றார். அவர் வேண்டுதல் வீண்போகவில்லை.

சமணர்கள் அவ்வப்போது மாற்று மதங்களை, கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தி மாநாடுகள் கூட்டங்கள் என்று நடத்துவார்கள். அந்த சிவஞானி வந்த காலத்திலும் அவ்வாறான கூட்டம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பதற்கு கூட ஆளில்லாத நிலையில் அவர்களே கேள்விகளையும் எழுப்பி, அவர்களே பதில்களையும் சொல்லி புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தார்கள்.

அந்த கூட்டத்திற்குள் அந்த சிவஞானி உள்நுழைகிறார். ஒட்டுமொத்த கூட்டமும் அவரையே பார்க்கிறது. அழுக்குப் பொதிந்த பாண்டல் கூட்டத்தின் மத்தியில் கமகமக்கும் வாசனை வீச ஒருவர் வருகிறார். நேர்த்தியான தூய்மையான ஆடைகள், சீராக வாரி முடிந்த தலைமுடி. அங்கங்கள் முழுவதும் அலங்கரித்து நிற்கும் ஜவ்வாது வாசனை வீசும் விபூதியும் உருத்திராக்க மாலைகளும். அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். பன்றிக் கூட்டத்தில் நடுவில் நிற்கும் பசுபோல பளிச்சென்று தெரிந்தார்.

நானே கேள்வி நானே பதில் என்று புளகாங்கிதம் அடைந்த சமண கூட்டம் வெலவெலத்துப் போய் அவரைப் பார்த்தது. அவர் புன்முறுவலுடன் அவர்களின் நடுவே சென்று நின்றார்.

"கடவுள் என்பது இல்லை, எல்லாவற்றையும் நாமே செய்யலாம், எல்லா வல்லமையும் தவத்தால் முயற்சியால் மட்டுமே எமக்கு கிடைத்துவிடும் என்பது தானே உங்கள் வாதம்" என்றார்?

சமணர்கள் கூட்டம் ஆம் என்று ஒருமித்தவாறு தலையை அசைத்தது.

"உங்கள் தவத்தினால், தவ வலிமையால் தேவர்களையும் கட்டுப்படுத்த முடியும், அந்த பிரம்மனுக்கே ஆணையிட முடியும் என்பதுதானே உங்கள் வாதம்" என்றார்?

ஆம் என்று அந்த சமணக் கூட்டம் மீண்டும் தலையை அசைத்தது.

"உங்களால் எதுவும் முடியாது.. உங்கள் தவத்தால் எதையும் செய்ய முடியாது.. இறைவன் அருளின்றி இங்கு எதுவும் நடவாது."

"நீங்கள் சுற்றும் பூமியை நிறுத்த தேவையில்லை. உங்கள் தவ வலிமையால் சூரியனை மறைத்து பகலை இரவாக்க தேவையில்லை. அது எல்லாம் உங்களால் முடியாது என்று எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். நான் கேட்பது மிகவும் இலகுவான ஒன்று. உங்களால் உங்கள் தலையில் வளரும் மயிரையாவது மீண்டும் முளைக்காதவாறு பிடுங்கி எறிய முடியுமா? அப்படி உங்களால் முடிந்தால் உங்கள் தவத்திற்கு வலிமை உள்ளதா, எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் சக்தி உள்ளதா என்று பிறகு விவாதிக்கலாம். நான் இப்போது போகிறேன், நான் மீண்டும் திரும்பி வருவேன், அப்போது உங்கள் தலைமுடியை நீங்களே மீண்டும் வளராதவாறு ஆக்கி வையுங்கள், அப்போது விவாதிப்போம்" என்று கூறிவிட்டு புன்னகை தவழும் அந்த பிரகாசமான உருவம் கூட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றது.

அதற்கு மேல் எதுவும் பேச முடியாத சமணர் கூட்டம், அந்த ஒன்றுகூடலை அத்துடன் முடித்துக் கொண்டு கலைந்துவிட்டது.

பின்னர் தம் யாத்திரையை முடித்துக் கொண்டு அந்த சிவஞானியும் மீண்டும் வடக்கே சென்றுவிட்டார். ஆனால் அந்த சிவஞானி மீண்டும் வருவார், அதற்கு முன்பு தமது முடியை மீண்டும் வளராமல் பிடுங்க வேண்டும் என்று எண்ணிய சமணர்கள் ஒவ்வொரு இடமாக இருந்து தமது மயிர்களை பிடுங்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு இடத்தில் உள்ள மயிரைப் பிடுங்கினால் அது இன்னோர் வேரிலிருந்து முளைக்க ஆரம்பித்து. ஆனால் வேலை வெட்டி எதுவும் இல்லாத சமணர்கள், தமது மயிரைப் பிடுங்குவதையே பிரதான வேலையாக கொண்டு செய்யலானார்கள். ஒட்டுமொத்த மயிரையும் பிடுங்கி எடுப்தையே பெரிய சாதனையாக கருத ஆரம்பித்தார்கள். 

முண்டம் வழிப்பது என்ற சமணர்களின் நடைமுறை இந்த மயிர் பிடுங்கும் வழக்கத்தில் இருந்து வந்ததே. மயிர் பிடுங்கும் வலியை தாங்க முடியாத சமணர்களே பின்னர் முண்டம் மழிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.



No comments:

Post a Comment

மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயில், பூதவராயர் கோவிலா?

யாழ்ப்பாணத்தில் பிரபலமான இந்து ஆலயங்களில் மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலயமும் ஒன்றாகும். இன்று பிள்ளையார் கோயிலாக சிறப்புப் பெற்றிருந்தாலும...