Saturday, 5 February 2022

உலகின் புதிய மதம்- சிறுகதை

'மதுஸ்துவம்' இப்போது உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மதம். இந்த மதத்தை பின்பற்றுபவர்கள் தமது மதத்தைப் பரப்புவதற்காக புதிய புதிய வழிமுறைகளை பின்பற்றி வேகமாகப் பரப்பி வருகின்றனர்.

இந்த புதிய மதம் உருவாகியே சில ஆண்டுகள்தான் ஆகின்றது. ஆனால் அதன் வளர்ச்சி எண்ணமுடியாத அளவு அபரிமிதமானது.

மதுஸ் இலங்கையின் 'மாகந்துர' எனும் கிராமத்தில் பிறந்தவன். பன்னிரண்டு வயதிலேயே வீட்டைவிட்டு ஓடிவிட்டான். அவனுக்கு சிறுவயது முதலே சவாலான விடயங்களை செய்வதும், மக்களின் பாரம்பரிய வழிமுறைகளை மறுதலிப்பதுமே வழக்கமாக இருந்தது. பன்னிரண்டு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போனவன் 32 வயதில்தான் உலகுக்கு மீண்டும் அறியப்பட்டான். அதுவரையில் அவன் நிழலுலக ராஜ்ஜியம் ஒன்றையே ஆண்டுவந்திருக்கிறான்.

12 வயதில் ஓடிப்போனவனுக்கு அடைக்கலம் கொடுத்தது கள்ளச்சாராயம் விற்கும் குடும்பம் ஒன்றுதான். மூன்று வேளை உணவும், படுக்க இடமும் கிடைத்தது. வீட்டில் இருந்தது போல் பள்ளி செல்லும் கொடுமையோ, படி படி என்ற துன்புறுத்தலோ இல்லை. நின்மதியான வாழ்க்கை. கள்ளச்சாராயம் விற்கும் இடத்தை பிடிப்பதற்கு பொலீசார் வந்துவிடலாம் என்பதால், பொலீசார் வருகிறார்களா என்று பார்ப்பது மட்டுமே அவன் வேலை. அதனால் பொலீசார் என்றாலே அவனுக்கு அப்படி ஒரு வெறுப்பு.

கள்ளச்சாராயம் காச்சுவதிலும் சிறுவயதிலேயே தேறிவிட்டான். அப்போதே அவனுக்கு கஞ்சா வியாபாரிகள் சிலரின் தொடர்பும் கிடைக்கிறது. தங்கி இருக்கும் வீட்டார் கள்ளச்சாராயம் விற்க 'மதுஸ்' கஞ்சா விற்க ஆரம்பித்துவிட்டான். சிறிது நாட்களிலேயே அவன் கைகளில் லட்சங்களில் பணம் புரள்கிறது. குடி, கும்மாளம் என்பதே அவன் வாழ்க்கை என்றானது. பருவத்தின் மாற்றமும், கைநிறைந்த பணமும் பல விலைமாதர்களை அவனுக்கு விருந்தாக்க வைத்தது. 

இருபது வயதுக்குள் தொழிலின் அடுத்த பரிணாமத்தை அடைந்தான். இப்போது கஞ்சா கடந்து கொகைன், கரோயின் என்று விரிவடைந்திருந்தது அவன் தொழில். இப்போது நான்கைந்து விபச்சார விடுதிகள் கூட அவனுக்கு சொந்தமாக இருந்தது. அவனுக்கும் சவால்கள் இல்லாமல் இல்லை. அவனுக்கு சிறுவயது முதலே பொலீசாரைப் பிடிக்காது. இப்போது வரையில் அவனை எதிர்த்து தொழில் செய்தவர்கள் முதல், பொலீசார் வரை பலபேரைக் கொன்று விட்டான். அவனது நிழல் உலகில் அவன்தான் ராஜா. அவனை எதிர்த்தவர்கள் யாரையும் அவன் விட்டு வைப்பதில்லை.

முப்பது வயது கடந்தது. அவன் இப்போது சர்வதேச அளவில் கோலோச்ச ஆரம்பித்திருந்தான். கடல் கடந்து, நாடு கடந்து, அவன் வியாபாரம் விஸ்தரிப்பு செய்யப்பட்டது. 32 வயதில் அவன் செய்த இரண்டு கொலைகளே அவனை உலகுக்கு மீண்டும் அடையாளம் காட்டியது. தன் தொழிலுக்கு பிரச்சினையாக இருந்ததால் ஒரு பொலீஸ் அதிகாரியையும், அரசியல் தலைவர் ஒருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டான். 

பிரச்சினை பெரிதாகி விட்டது. பொலீஸ் எப்படியாவது இவனை பிடிக்க வெறிபிடித்து அலைந்தது. தப்பித்து ஓடி துபாய்க்கு சென்றுவிட்டான். விடாது கருப்பாக தொடர்ந்தது பொலீஸ். துபாயில் வைத்தே கைதுசெய்து விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு கொண்டு வந்தது.

சட்டத்தின் முன் நிறுத்தி தூக்குத் தண்டனை வழங்க துரித கதியில் செயலாற்றியது அரசு. தூக்குக் கயிற்றில் தொங்கும் நாளுக்காக காத்திருந்தான் மதுஸ். பொலீசாருக்கு பொறுமையில்லை. இவன் சிறையை உடைத்து தப்பித்து விடலாம் என்று கருதினார்கள். இவனின் விபச்சார விடுதி அமைந்துள்ளது பண்ணை ஒன்றுக்கு மறைத்து வைத்த கைக்குண்டு ஒன்றை எடுப்பதற்காக என்று அழைத்துச் சென்றார்கள். பொலீசாரை கைக்குண்டால் தாக்க முனைந்ததாக கூறி சுட்டுக் கொன்றார்கள்.

'மதுஸ்' என்கவுண்டர் செய்யப்பட்ட செய்தி அவன் ஆதரவு போதை வியாபாரிகள், விபச்சாரிகள் என்று பலரையும் கண்ணீர் சிந்த வைத்தது. ஆனால் மக்கள் பலரும் மகிழ்ந்தார்கள்.

அவன் பல குடும்பங்களை சீரழித்து வாழ்ந்தாலும், அவனால் பயன்பெற்றவர்களும், வாழ்ந்தவர்களும் கூட இருந்தார்கள். அவர்களின் மனதில் அவன் தேவனாக நின்றான். அவனது விபச்சார விடுதியில் இருந்த விபச்சாரிகள் சிலரும், அவனது போதைப் பொருள் வியாபாரிகள் சிலரும், அவனை வணங்கி தங்கள் தொழிலை செய்தார்கள். தம் குழுவில் உள்ள ஏனையவர்களையும் அவ்வாறே செய்ய ஊக்குவித்தார்கள். என்ன இருந்தாலும் அவர்களின் இந்த வாழ்க்கை, நிழலுககை ஆண்ட மதுஸ் கொடுத்ததல்லவா? அவர்களின் நிழலுலக ஆண்டவன் அவன். அவர்கள் கண்ணால் கண்ட மெய்யான தேவன் அவன். அவர்களால் வேறோர் தெய்வத்தை, கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.

இப்போது மதுஸை வணங்குபவர்கள் அதிகரித்திருந்தார்கள். அவர்களின் வெளிநாட்டு போதைவஸ்து முகவர்கள், அவன் சென்ற இடங்களில் சல்லாபித்த விபச்சாரிகள் என்று பலரும் வணங்க ஆரம்பித்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரு புதிய மதமாக உருவாகி இருந்தனர். அவர்கள் தமது மதத்தின் புனித அடையாளமாக 'தூக்குக் கயிற்றை' அடையாளப்படுத்தினர். வீட்டு வாயில்களில், தமது வழிபாட்டு இடங்களில் தூக்குக் கயிற்றை அடையாளமாக வைத்தனர். மதுஸ் தமக்காக, தமது சுபீட்சமான வாழ்வுக்காக தூக்குக் கயிற்றை சுமக்க இருந்தது தியாகம் என்று பெருமை கொண்டனர்.

மதுஸ் தூக்குக் கயிற்றை நோக்கி இருந்தாலும், கடைசியில் என்கவுண்டர் செய்யப்பட்டு துப்பாக்கி தோட்டாவாலேயே கொல்லப்பட்டான். அதனால் அவர்கள் துப்பாக்கி தோட்டாவையும் தமது புனித அடையாளமாக ஏற்றுக் கொண்டனர். தோட்டாக்களை தமது கழுத்தில் அணிந்து கொண்டனர். துபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டு பண்ணையில் வைத்து துப்பாக்கியால் கொல்லப்பட்டது வரையான காலப்பகுதியை வருடாவருடம், தோட்டாவின் பாடுகள் என்று கொண்டாடினர். அவர்களின் வழிபாட்டு தலங்களில் உண்மையான ஆண்டவன் மதுஸின் இரத்தம் என்று கள்ளச்சாராயமும், ஆண்டவர் மதுஸின் தூய ஆவி என்று கஞ்சாப் புகையும் இழுக்க வழங்கப்பட்டது.

அவர்களின் மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வருடாவருடம் விபச்சார விடுதிப் பண்ணையில் ஒன்றுகூடினர். வெளிநாடுகளில் இருந்தும் அந்த இடத்திற்கு புனித யாத்திரை வந்தனர். அவர்களின் மத வழிபாட்டுத் தலங்கள் நாடுகள் கடந்து கிராமங்கள் நகரங்கள் என்று பரவியது. உலகெங்கும் உள்ள விபச்சாரம் செய்பவர்கள், கள்ளச்சாராயம், போதைவஸ்து, கஞ்சா விற்பவர்கள் என்று பலரும் இந்த மதத்தில் இணைந்தார்கள். தமக்காக, தமது தொழிலுக்காக, தம்மைப் போன்ற தவறான தொழில் செய்தவர்களுக்காக மரணித்த உண்மையான தேவன் மதுஸ் என்று கொண்டாடினார்கள். அவர் மீண்டும் பிறப்பெடுத்து வருவார் என்றும் அப்போது நிச்சயமாக தூக்குக் கயிற்றிலேயே உயிர் விடுவார் என்றும் நம்பினார்கள். சில கஞ்சா, கொகைன் பாவிப்வர்களும் சில விபச்சாரிகளும், மதுஸ் இறந்ததாக சொல்லப்பட்ட பின்னரும் தாம் அவரைக் கண்டதாகவும், அவர் தமக்கு நல்ல தொழில் ரகசியங்களை சொல்லி தந்ததாகவும் சொன்னார்கள். அதனால் அவர்கள் பலரும் மதுஸ் இறந்த பின்னர் உயிர்த்தெழுந்து வந்ததாக உறுதியாக நம்பினார்கள். தம் தொழிலை ஒரு காலத்தில் ஆண்டதால் அவரை ஆண்டவர் என்றும் புகழ்மாலை சூட்டினார்கள்.

இப்போது தவறான தொழில்களும், தவறானவர்களும் உலகத்தில் அதிகரித்ததால் அவர்கள் அனைவரையும் தமது மதத்தில் இணைக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் மதம் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இவர்களின் மதம் இப்போது 'மதுஸ்துவம்' என்றும் 'மதுஸ்ரியானிட்டி' என்றும் பரவலாக அறியப்படுகிறது.

மதுஸ்துவத்தை பின்பற்றுபவர்கள் உலகில் உள்ள ஏனைய மதத்தவர்களை இப்போது இழிவுபடுத்த ஆரம்பித்தது விட்டார்கள். தமது தேவனான மதுஸ்தான் உண்மையான ஆண்டவன் என்றும், மற்றவர்களின் கடவுள்கள் சாத்தான்கள் என்றும் பழித்தார்கள். மதுஸ்தான் உண்மையான தேவன், உங்கள் கடவுள் உங்களுக்காக தூக்குக் கயிற்றை நோக்கி இருந்தாரா? துப்பாக்கி தோட்டாவால் இரத்தம் சிந்தி இறந்தாரா? என்று கேள்விகள் கேட்டார்கள். மதுஸ் துப்பாக்கி தோட்டாவால் இரத்தம் சிந்தியதால் தமது பாவங்கள் அனைத்தும் நீங்கிவிட்டதாகவும் அதனால் போதைவஸ்து வியாபாரம் விபச்சாரம் எதுவுமே பாவமில்லை என்றும் வாதிட்டார்கள்.

ஏனைய மதத்தவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றவும் ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை எதிர்த்துப் போராட யாருக்கும் வல்லமை இல்லை. போதைப்பொருள் கோஷ்டிகள், விபச்சாரிகள் இவர்களை எதிர்க்க யாரால் முடியும். ஏனைய மதத்தவர்களை தாக்கி, அவர்களின் வழிபாட்டு தலங்களை இடிக்கிறார்கள். கட்டாய மதமாற்றம் செய்வது தங்கள் உரிமை என்று போதைவஸ்து வியாபார தலைவர்களும், விபச்சார விடுதி பொறுப்பாளர்களும் பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள். பல நாடுகளில் மதுஸ்துவத்தை பின்பற்றுபவர்கள் ஆட்சியில் அமர்ந்து விட்டார்கள்.

அவர்களின் மதுஸ்துவம் மிகமிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் மதுஸ்துவம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது ஒன்றுதான் அவர்களின் இலக்கு. உண்மையான தேவன் மதுஸின் இராஜ்ஜியம் உலகம் முழுவதும் வரவேண்டும் என்று மதத்தைப் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

விரைவில் வரும்.. 



No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...