Sunday 25 July 2021

ஆண்டவன் என்பதோ தேவன் என்பதோ கடவுள் இல்லை

இந்து மதத்தில் கடவுள், தேவர், உருத்திரர், ஆதித்தர், வசுக்கள், தெய்வம், ஆண்டவர் என்பவை எல்லாம் வெவ்வேறான அர்த்தம் உடையவை. 

அன்னிய மதத்தவர்கள் இங்கு வந்ததன் பின்னர் அந்த வார்த்தைகள் தொடர்பான குழப்பம் எமது இந்துக்கள் மத்தியிலும் ஏற்பட்டு விட்டது.

இந்து மதத்தில் பல கடவுள்கள் உள்ளதாக எங்கிருந்தோ வந்த அன்னியர்கள் நம்பவைத்து விட்டார்கள். எம் இந்துக்களில் பலரும் அதை நம்புகிறார்கள் என்பது மறுக்கமுடியாத வேதனையான உண்மை.

இந்துமதம் "கடவுள்" என்று சொல்வது இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர் அது தோன்றுவதற்கு காரணமாக இருந்த நிலையான மூலமான ஒன்றே என்பதாகும். அதனைப் பரப்பிரம்மம் என்று இந்துமதம் கூறும். பரப்பிரம்மம் என்பது ஒன்றுதான். அது பலவல்ல.

அந்த பரப்பிரம்மத்தில் இருந்து தோன்றியதே பிரம்மம் என்பது. அந்த பிரம்மம் ஆதியில் தோன்றுவதற்கு காரணமாக இருந்த சக்தியையே இந்துமதம் ஆதிபராசக்தி என்கிறது.

அதன் பொருள் ஆதியில் பிரம்மம் தோன்றுவதற்கு காரணமாக இருந்த பரப்பிரம்மத்தில் இருந்து வெளிப்பட்ட சக்தி என்பதாகும்.

பரப்பிரம்மம் ஒருபோதும் செயலாற்றுவதில்லை. அது செயல்கள் எதற்கும் காரணமாவதில்லை. அது செயல்களைக் கடந்த எல்லாவற்றையும் உடைய நிலையான இருப்பு. அந்த நிலையான அனாதியான இருப்பையே கடவுள் என்கின்றனர் இந்துக்கள்.

அந்த நிலையான இருப்பை, பிரம்மம் தோன்றுவதற்கு தேவையான சகல பொருட்களையும் ஆற்றல்களையும் வழங்கியது என்று பொருட்பட சர்வேஸ்வரன் என்று குறிப்பிடுகின்றார்கள் இந்துக்கள். சர்வேஸ்வரன் என்றால் சகல ஐஸ்வர்யங்களும் உடையவன் என்று பொருள். இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான பிரம்மம் தோன்றுவதற்குரிய சகல செல்வங்களையும் வழங்கியது அந்தப் பரம்பொருள் ஆகையால் சர்வேஸ்வரன் என்று குறிப்பிடுகின்றார்கள்.

சர்வேஸ்வரன் என்ற அந்த நிலையான பரப்பிரம்ம இருப்பில் இருந்து ஆதிபராசக்தி வெளிப்பட்டு அதனால் பிரம்மம் தோன்றுகிறது. அந்த பிரம்மத்தில் இருந்து வெளிப்படும் விந்து நாத சக்தியால் இந்த பிரபஞ்சம் அதில் உள்ள உயிர்கள் என்று அனைத்தும் தோன்றுகிறது.

விந்து என்றால் உயிர்,உயிர்ப்பு, உயிர்கள் தோன்ற காரணமானது என்று பொருள். இந்த உடல் பூமி பிரபஞ்சம் என்று அனைத்தும் உயிர்ப்புடன் இயங்க காரணமானது விந்துசக்தி. பிரம்மத்தில் இருந்து பிரபஞ்சத்திற்கு, சூரியனில் இருந்து பூமிக்கு, பூமியில் உள்ள உயிர்களுக்கு இந்த உயிர்ப்பை வழங்கும் விந்து ஒளியாக இருப்பதால் விந்துவை ஒளிச்சக்தி என்றும் சொல்வர். 

இந்த பிரபஞ்ச உயிர்புக்கு காரணனாக தலைவனாக இருப்பவன் கோவிந்தன். இந்த பூமியில் மனித(நர) உயிர்கள் உருவாவதற்கு அயனனாக(பிரம்மனாக) இருப்பவன் நாராயணன்.

நாதம் என்றால் ஒலி. இந்த பிரபஞ்ச தோற்றத்தின் போது அலைந்துதிரிந்த சடங்களை சடத் துணிக்கைகளை ஒன்றாக்கி ஒழுங்கமைத்து பிரபஞ்சத்தை உருவாக்கியது இந்த நாதமே. அதனால் சடங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருப்பதை நாதன் என்கிறார்கள். ஒரு சடமானது தனது நிலைமாற்றத்தில் பதினெட்டு கணங்களை சந்திக்கிறது. அந்த கணங்கள் அனைத்திற்கும் இந்த நாதமே காரணமாக இருக்கிறது. கணங்கள் அனைத்திற்கும் காரணமாக இருக்கும் நாதன் கணநாதன் எனப்படுகிறான். இந்த சடங்களால்தான் வினைகள் நிகழ்கின்றன. வினைகள் நாதத்தால் நிகழ்கின்றன. அதனால் அவன் வினைகளின் நாயகன் எனும் பொருளில் விநாயகன் எனப்படுகின்றான்.

இந்துக்கள் வணங்குவது சர்வேஸ்வரன் எனும் பரப்பிரம்மத்தையும், அதன் வெளிப்படு சக்தியாக விளங்கும் ஆதிபராசக்தியையும், ஆதிபராசக்தியகல் இருந்து தோன்றும் ஏனைய சக்திவடிவங்களையுமே.

இந்த விந்துநாதசக்தியானது பிரபஞ்சம் முழுவதும் பரவி வியாபித்துள்ளது. அவ்வாறு பரவி வியாபித்துள்ள சக்தியே எமது மானுட சடவாழ்வின் அனைத்துக் கர்மங்களுக்கும் காரணமாக உள்ளது.

இவ்வாறு பிரபஞ்சம் எங்கும் பரவி வியாபித்துள்ள சக்திகளையே தேவர்கள், ஆதித்தர்கள், உருத்திரர்கள் என்று இந்துக்கள் வழிபடுகிறார்கள். தேவர்களையோ, ஆதித்தர்களையோ, உருத்திரர்களையோ இந்துக்கள் ஒருபோதும் கடவுளாக கருதுவதில்லை.

சூரியன், சந்திரன், நட்சத்திரம், பஞ்ச பூதங்கள் என்பவற்றை வசுக்கள் என்று போற்றி வழிபடுகிறார்கள். இவற்றையும் இந்துக்கள் கடவுளாக வழிபடுவதில்லை.

தெய்வங்கள் என்போர் மாதா பிதா குரு என்று இந்துமதம் கூறும். ஒரு குலத்தின் சிறந்த தாயாக, தந்தையாக, குருவாக இருந்து வழிநடத்தி மறைந்து இறைபதம் அடைந்த உயர் மானிட ஆத்மாவை தெய்வங்கள் என்று போற்றி வணங்குவார்கள். தாயைத் தந்தையைக் குருவைப் போற்றி வணங்கும் மரபே தெய்வ வழிபாடு என்பது.

இவ்வாறே நல்லாட்சி புரிந்த மன்னனை, நல்வழியில் நடாத்திய சமூகத் தலைவனை அவன் இறைபதம் அடைந்த பின்னர் ஆண்டவன் என்று போற்றி வணங்கினார்கள். ஆண்டவர்களை ஒருபோதும் இந்துக்கள் கடவுளாக கருதுவதில்லை.

ஆண்டவன் என்பதோ தேவன் என்பதோ தெய்வம் என்பதோ ஒருபோதும் கடவுள் இல்லை. அனைத்து இந்துக்களுக்கும் அந்தப் புரிதல், கடவுள் பற்றிய உணர்தல் வரவேண்டும். உலகில் கடவுள் பற்றிய தேடலுள்ள ஒரே மதம் இந்துமதம் மட்டுமே! 

இந்த உண்மையை அனைத்து இந்துக்களுக்கும் உணர்ந்துகொள்ள வேண்டும்.



No comments:

Post a Comment

யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்? மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான த...