Friday, 4 August 2023

மலையகமக்களின் 200வருட போராட்ட வாழ்க்கை

இலங்கையின் மத்தியில் அமைந்துள்ள, மலைகளைக் கொண்ட பகுதி மலையகம் என்று அழைக்கப்படுகிறது. இது பண்டைய கண்டி ராஜ்ஜியத்தின் தலைநகர் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளாகும். 

காலனித்துவ காலத்தில் இந்த பகுதிகளில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தோட்டத் தொழிலாளர்களே மலையக மக்கள் எனப்படுகின்றனர்.

இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி, மதுரை, கரூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவிலான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பெருமளவில் பள்ளர், பறையர், கள்ளர், மறவர், முத்தரையர் போன்ற சாதிகளும் நாயுடு, கவுண்டர், நாயர், அகமுடையார் என்று பல்வேறு சாதிகளும் சிறிய அளவிலும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அன்றைய நாளில் அது ஒரு கடினமான பயணம். தனுஷ்கோடியில் இருந்து ஆயிரம் பேர் புறப்பட்டால் மலையக பகுதிகளை சென்றடையும் போது சுமார் 300 பேர் வரையிலேயே எஞ்சியிருப்பார்கள் என்றால் அந்த பயணத்தின் கொடூரத்தை சிந்தித்து பாருங்கள். கடற்பயணத்தில் படகு கவிழ்ந்து மரணம், காட்டு வழிப் பயணத்தில் விலங்குகள் பாம்புகள் என்பவற்றால் மரணம் என்று அது உயிரைப் பணயம் வைத்த ஒரு பயணம். அவ்வாறு கடினமான பயணத்தின் பின்னும் அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்ததா என்றால் கிடையாது. மலைக்காடுகளை அழித்து பாதைகளோ பாலங்களோ இல்லாத இடத்தில் பெரிய பெரிய தோட்டங்களை உருவாக்கும் கடினமான பணிகளை மேற்கொண்டார்கள். காட்டு விலங்குகள், பாம்புகள், காலனித்துவ எஜமானர்கள் என்று அவர்களுக்கு பல்வேறு வகைகளில் மரணம் காத்திருந்தது. 

அவர்கள் வாழும் உரிமை, வழிபாட்டு உரிமை என்று எந்த ஒரு உரிமையும் இல்லாதவர்கள் என்ற நிலையிலேயே இருந்தார்கள். அவர்கள் தமது சொந்த ஊர்களில் இருந்து புறப்படும் போது கொண்டுவந்த பிடிமண்ணையும் குலதெய்வத்தையும் கூட வழிபட முடியாது என்று அவர்களின் கிறித்தவ எஜமானர்கள் தடை செய்தார்கள். கட்டாய மதமாற்றம், கட்டிய பெண்டாட்டியை கங்காணி அழைத்துச் சென்று எஜமானனுக்கு விருந்தாக்குவது என்ற கொடுமைகளை எல்லாம் சந்தித்தவர்கள் அவர்கள். அவ்வாறான கொடுமைகளை ஒற்றையாய் நின்று எதிர்த்த ஆண்கள் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கிறித்தவ எஜமானர்களால் கொல்லப்பட்டனர். 

1806 ஆம் ஆண்டு அடிமை முறையை கைவிடுவதாக கிறித்தவ ஆட்சியாளர்கள் கொள்கை அளவில் முடிவெடுத்தாலும், தோட்ட தொழிலாளர்கள் என்ற பெயரில் அழைத்து வரப்பட்டாலும் இந்த மக்கள் அடிமைகள் போலவே நடத்தப்பட்டார்கள். அடிமைகளை வைத்து தொழில் செய்த கிறித்தவ எஜமானர்களுக்கும், இவர்களை தொழிலாளர்கள் என்று பெயரளவில் சொன்னாலும் அடிமைகளின் எஜமானர்கள் என்ற அளவிலேயே அவர்களின் மனநிலையும் நடைமுறைகளும் இருந்தது. 

தமக்கு பிடித்தமான பெண்களை வேண்டும் போது அழைத்துச் செல்வதும், தட்டிக் கேட்கும் நபர்களை கொல்வதும், தமது இச்சைக்கு பிறந்த பிள்ளைகளை, தமது இச்சைக்கு இரையான பெண்களை கட்டாய மதமாற்றம் செய்ததும் கிறித்தவ எஜமானர்கள் அவர்களை தொழிலாளர்கள் என்று கருதாமல் அடிமைகள் என்று கருதினார்கள் என்பதற்கு சான்றாகும். 

மக்கள் எத்தனை நாட்களுக்கு தான் பொறுத்துப் போவார்கள். ஒரு கட்டத்தில் தமது உரிமைகள், கௌரவமான வாழ்க்கை என்பவற்றுக்காக இணைந்து போராட ஆரம்பித்தார்கள். கிறிஸ்தவ எஜமானர்களின் தடைகளை மீறி மரங்களின் கீழ் தாம் கொண்டுவந்த பிடி மண்ணை, இறை அடையாளப் பொருட்களை வைத்து வழிபட ஆரம்பித்தார்கள். தமது பெண்களை கூட்டிக் கொடுக்கும் கங்காணிகளை, கிறித்தவ எஜமானர்களை கொல்லும் அளவிற்கு துணிந்தார்கள். சிலரை கொன்றார்கள். மக்கள் ஒன்றுசேர்ந்து எதிர்ப்பதும், பதில் தாக்குதல் நடத்துவதும் கிறித்தவ முதலாளிகளுக்கும் கூட்டிக் கொடுக்கும் கங்காணிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இனி மிரட்டல் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்று உணர்ந்தவர்கள் தமது உபாயத்தை மாற்றினார்கள்.

தமது இச்சைக்கும் தேவைக்கும் இவர்களைப் பயன்படுத்துவது என்றால் அவர்களை அவர்களின் வாழ்வியலில் இருந்து மாற்றவேண்டும் என்று முடிவு செய்தார்கள். மானமிழந்த எதற்கும் சம்மதிக்கும் வகையிலான சமுதாயம் ஒன்றை அவர்களிடையே உருவாக்க வேண்டும் என்று முனைந்தார்கள். அதற்கு அவர்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றுவதே ஒரே வழிமுறை என்று தீவிரமாக செயற்பட்டார்கள். மதம் மாறினால் பதவி கிடைக்கும், பணம் கிடைக்கும், உணவுப்பொருள் கிடைக்கும் என்று எவருக்கு எது தேவையாக இருக்கிறதோ அது கிடைக்கும் என்று கூறி மதம் மாற்றினார்கள். மானத்துடன் வாழ வேண்டும் என்று போராடியவர்கள் எப்படி சலுகைகளுக்காக மாறுவார்கள். ஆனால் மாறுவதற்கும் சிலர் இருந்தார்கள். மதம் மாறியவர்கள் எஜமானர்களின் அருகிலேயே வேலைக்கு வைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அளவில் பெரியதான இருப்பிடங்கள் வழங்கப்பட்டது. எஜமானர்கள் மட்டுமல்லாமல் கங்காணிகளும் அவ்வப்போது தமது இச்சைகளை அவர்கள் மூலம் தீர்த்துக் கொண்டார்கள். ஆனால் மானம் பெரிதென்று வாழ்ந்த மக்கள் எத்தனை கடுமையான வேலையைச் செய்தாலும் பரவாயில்லை, மதம் மாறிவிட்டு மானத்தை விற்று வாழமுடியாது என்று உறுதியுடன் நின்றார்கள்.

உலகிலேயே தன்மானத்தை காக்க, தமது பாரம்பரிய வாழ்வியலை காக்க அதிகமான துன்பத்தை சந்தித்தவர்கள், தியாகங்களை செய்தவர்கள் இந்த மலையக மக்கள்தான். 

ஆபிரிக்க அடிமைகளை கொண்டு உலகெங்கிலும் ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பிய கிறிஸ்தவர்கள், அடிமை முறையை கைவிடுவது என்று முடிவு செய்தபோது அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்று ஆய்வு செய்தார்களாம். அதற்கு தென்னிந்தியாவிற்கு வந்து சென்ற ஒரு கிறிஸ்தவன் சொன்னானாம் ஆபிரிக்கர்களை விட அதிகமாக உழைக்க கூடிய, எந்தவொரு எதிர்ப்புமின்றி கீழ்ப்படிந்து வேலைசெய்ய கூடிய மக்கள் கூட்டம் தென்னிந்திய பகுதிகளில் இருக்கிறது என்றும், அந்த வெற்றிடத்தை நிரப்ப அவர்களை பயன்படுத்தலாம் என்றும் ஆலோசனை கூறினானாம்.

அதனால்தான் பல்வேறு ஆசைவார்த்தைகளை கூறியும், முன்பணம் கொடுத்து கடனாளி ஆக்கியும் தென்னிந்திய பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் என்ற பெயரில், மக்களை நவீன அடிமைகளாக அழைத்து வந்தார்களாம் அன்றைய கிறித்தவ எஜமானர்கள். இலவசத்திற்கும், முற்பணத்திற்கும் ஆசைப்பட்டு வந்தாலும், எதிர்ப்பின்றி கீழ்ப்படிந்து வேலை செய்தாலும் அவர்கள் அடிமைகள் கிடையாது. தமது பாரம்பரிய வாழ்வியலை காப்பாற்றுவது என்று வரும்போது உலகில் மிகப் பெரிய போராட்ட இனமாகவே வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள்.

உலகில் வாழ்வதற்காக போராடிய மக்கள் இருக்கலாம், ஆனால் வாழ்க்கையையே போராட்டமாக கொண்ட ஒரு சமூகம் என்றால் அது மலையக மக்கள்தான். அவர்கள் போராடுவது தமது கௌரவமான வாழ்க்கைக்காக, தன்மானத்தை அடகு வைக்காத வாழ்க்கைக்காக, தமது பாரம்பரிய வாழ்வியலை காப்பாற்றுவதற்காக...

நிச்சயமாக அவர்கள் வெற்றி பெறுவார்கள். வெற்றி பெற்ற ஒரு சமுதாயமாக உயர்ந்து நிற்பார்கள்..

இந்த மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 வருடங்கள் ஆகின்றன. இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று பரவலாக வாழ்கிறார்கள். மலையகத்தில் இருப்பவர்களைவிட கொழும்பிலும், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலும் வாழ்பவர்களே இன்று அதிகம். 

அவர்கள் இன்று சொந்தமான நிலபுலன்கள், வீடு, வாகனம், உத்தியோகம், தொழில்துறை என்று உயர்ந்த நிலைக்கு மாறியுள்ளார்கள். அவர்களது வளர்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

#மலையகம்200



2 comments:

  1. Great service to Tamil world with Great courage enthusiasm dedication Happiness hardwork Devotion Vision etc! God is with u always my friend! Greetings from Sivan Tamil Temple/ Sivayogi Ashram/ Sivan Tamil Kultur Senter Korslundvegen 45,2092 Minnesund Norway! WhatsApp groups: World Harmony Forum/ United Gandhiyan Nations/ World Tamil Spiritual Forum/ World Tamils Assembly WorldTamilRefugeesForum.blogspot.com Sarvadesatamilercenter.blogspot.com
    shannalliahbiography.blogspot.com
    +4791784271

    ReplyDelete

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...