Friday, 31 March 2023

புதுவருட மருத்துநீர் தயாரிப்பது எப்படி

அறுபது ஆண்டு சுழற்சியைக் கொண்ட தமிழ் புதுவருட கொண்டாட்டத்தில் நீராடுதல் என்பது முதலாவது சடங்காக மேற்கொள்ளப்படும்.

புதுவருட தினத்தில் காலை எழுந்ததும் சிறுவர் முதல் பெரியவர் வரையில் அனைவரும் நீராடுவது வழக்கம். ஆனால் வழக்கமான நீராடுதல் போலல்லாமல் மருத்துநீர் தேய்த்து நீராடுவது என்பது புதுவருட தினத்தின் சிறப்பாகும். 

பொதுவாக இலங்கையில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் மருத்துநீர் காய்ச்சி மக்கள் அனைவருக்கும் வழங்குவார்கள். சிலர் தமது வீடுகளில் காய்ச்சி அயலவர்கள் அனைவருக்கும் வழங்குவார்கள். மக்கள் புதுவருடத்திற்கு முந்தைய மாலை வேளையில் அல்லது புதுவருட நாளின் அதிகாலை வேளையில் ஆலயங்களுக்கு சென்று மருத்துநீரை வாங்கிவந்து உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் முழுவதும் பூசி சிறிது நேரத்தின் பின்னர் நீராடுவார்கள். இந்த வழக்கம் தமிழகத்தில் இன்று மறந்துபோன ஒரு வழக்கமாக மாறிவிட்டது.

இந்த மரபை மீட்டு மீண்டும் பின்பற்ற விரும்புபவர்கள் மருத்துநீர் காய்ச்சி மக்களுக்கு வழங்கும் முறையை மீண்டும் உருவாக்கலாம். மருத்து நீர் காய்ச்சும் முறை மிகவும் இலகுவானது.

ஒரு சுத்தமான பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் 

தாழம்பூ, 
தாமரைப்பூ, 
மாதுளம் பூ, 
துளசி, 
விஷ்ணுகிராந்தி, 
சீதேவியால் செங்கழு நீர், 
வில்வம், 
அறுகு, 
பீர்க்கு, 
பால், 
கோசலம், 
கோமயம், 
கோரோசனை, 
மஞ்சள், 
மிளகு, 
திப்பிலி, 
சுக்கு 

ஆகியவற்றில் சிறிதளவை போட்டு நன்கு காய்ச்சி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுவே மருத்துநீராகும்.இம்மருத்துநீரை கிரக தோஷம் உள்ளவர்கள், மனச்சஞ்சலம், உடல் உபாதை உள்ளவர்கள்  தேய்த்து நீராட அவை மறையும் என்பது மரபாகும். 

இந்த புது வருடத்தில் இருந்து மருத்துநீர் வைத்து நீராடும் எம் மரபை மீட்டெடுப்போம். அனைவரும் வீடுகள் ஆலயங்களில் வைத்து மருத்துநீர் காய்ச்சி மக்களுக்கு வழங்கும் இப்புண்ணிய காரியத்தில் பங்கெடுப்போம்.




No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...