Saturday 8 January 2022

சிவன் சொத்து குலநாசம் (மாலிக் கபூரின் வாழ்க்கைக் கதை)

பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. நாதசைவம் தோன்றிப் பெருக்கெடுத்தோடிய மண் காம்பத நாடு. (இன்றைய குஜராத்தின் அகமதாபாத் நகரை உள்ளடக்கிய பகுதி) ஆனால் அந்தக் காலப்பகுதியில் சிவ வழிபாடு சீர்கெட்டிருந்தது. வெறும் தியானமும், சடங்குகளும் மட்டுமே ஆன்மவிடுதலையைத் தந்துவிடும் என்றும் கடவுள் என்பது தேவையில்லாத ஒன்று என்றும் மக்களும் மன்னனும் நம்பவைக்கப்பட்டிருந்தார்கள். தாரகாவனத்து முனிவர்கள் போல் மன்னனும் மக்களும் மதியிழந்து போயிருந்தனர்.

ஆம், கடவுள் நம்பிக்கையற்ற சாங்கிய சமணமரபுகள் தம் செல்வாக்கை நாடுமுழுவதும் பரப்பியிருந்தது. சைவ ஆலயங்கள் கேட்பாரற்ற நிலையில் கிடக்க கடவுளே இல்லை என்ற சமணக் கோயில்கள் பளிங்குக் கற்களால் பளபளத்தன. அப்போதுதான் கோரக்க நாதரின் சீடர்மரபில் வந்த முக்காலமும் உணர்ந்த ககினிநாதர் காம்பத நாட்டின் அரசவைக்கு வருகிறார். 

எதிர்காலத்தை அறிந்த ககினிநாத முனிவர் நாட்டிற்கு ஏற்பட இருக்கும் ஆபத்து மனக்கண்ணில் தோன்ற அதைப்பற்றி மன்னனுக்கு முன்னெச்சரிக்கை செய்கிறார். காம்பத நாட்டின் மன்னன் கர்ணதேவ மகேல மனதில் பயம் குடிகொள்கிறது. "நான் என்ன பிராயச்சித்தம் செய்வேன்?" என்று முனிவரைப் பணிந்துநின்றான்.

முனிவரோ மூன்று யோசனைகளை பிராயச்சித்தமாக முன்மொழிந்தார்.பாழடைந்த சிவாலயங்கள் சீர்செய்யப்பட்டு நித்திய பூசைகள் செய்யப்படவேண்டும். இதனால் மக்களின் ஆன்ம பலம் பெருகும். எந்த ஆபத்தினையும் எதிர்கொண்டு வெல்வார்கள் என்பது ஒன்று.

சிவசிந்தனை மறந்து யோகமும், யாகமும் மட்டுமே எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்ற சிந்தனையை மக்களிடம் நீக்கவேண்டும். யாகங்கள்,யோகங்கள் என்பவற்றை விட சிவசிந்தனையில் செய்யும் தர்மங்களும், கர்மங்களும், தியாகமுமே வாழ்வை வழிப்படுத்தி வெற்றிபெற வைக்கும் என்பது இரண்டு. முக்கியமாக இராணி கமலாவதியின் பணிப்பெண்ணாக பணிபுரியும் அரவாணி அனந்தவவ்லியை கொன்றுவிடவேண்டும், ஏனென்றால் ஒரு உயிரைக்கொல்லும் பாவத்தைவிட பல்லாயிரம் உயிர்களைக் காப்பது தர்மமாகும். இது மூன்றாவது யோசனை என்றார்.அரசவையில் பெருத்த சலசலப்பு ஏற்பட்டது. 

இந்த முனிவன் சமணத்தை அழித்து சைவத்தை நிலைநாட்ட சூழ்ச்சிசெய்கிறான் என்று சிலர் சினந்தனர், யாகமும் வேள்வியும் தராதபயனை உம் சிவவழிபாடு தந்துவிடமா என்று இகழ்ந்தனர் சிலர், ஒரு அப்பாவி அரவாணியைக் கொன்று சமணத்தின் மாண்பை சீர்குலைக்க முனைகிறான் முனிவன் என்று முறைந்தனர் சிலர். இப்படி மந்திரிகளும், அவையினரும் மாறிமாறிக்கொடுத்த ஆலோசனைகளால் மன்னன் மனம்பிறழ்ந்தான். மன்னனதும் மந்திரிகளினதும் மனக்குறிப்பறிந்த ககினிநாதர் இதற்குமேல் இருப்பது பயனில்லை என்பதால் "நான் சொல்வதே ஒரேவழி, மீறினால் இந்த காம்பதநாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரதமே பாழ்பட்டுப்போகும்" என்று எச்சரித்துவிட்டுப் புறப்பட்டார். 

மன்னன் பயந்தான் ஆனால் மந்திரிகள் கொடுத்த மதிமயக்கும் வார்த்தைகளால் முனிவன் சொன்னதை மறந்தான். அப்படி அவன் மறந்திருந்தபோதுதான் அந்த விபரீதம் நடந்தது.

குஜராத் மன்னன் இராசகரனை வென்று சோமநாதர் கோயிலை இடித்தழித்த அலாவுதீன் கில்ஜியின் படைகள் காம்பத நாட்டிற்குள் புகுந்தார்கள், நாடுமுழுவதும் ஒரே அவலக்குரல். கண்ணில் காணும் மக்களையெல்லாம் கொடூரமாக கொன்றொழித்தார்கள். பெண்கள் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார்கள். இளம் ஆண்களை அடிமைகளாகவும், இளம் பெண்களை பாலியல் அடிமைகளாகவும் கவர்ந்து சென்றார்கள். அப்படியே காம்பத மன்னன் கர்ணதேவ மகேலவும் கில்ஜியின் படைகளால் கொடூரமாக கொல்லப்பட்டான். மன்னனின் பட்டத்து ராணி கமலாதேவி மதம்மாற்றப்பட்டு டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் உடமையாக்கப்பட்டாள். இந்த மனிதப்பேரவலத்தில் சுமார் 50000 பேர் கொல்லப்பட்டார்கள். 20000 பேர் அடிமைகளாக கொண்டுசெல்லப்பட்டனர். அப்படி அடிமைகளாக கொண்டுசெல்லப்பட்டவர்களில் மகாராணியின் பணிப்பெண்ணாக இருந்த அரவாணி அனந்தவவ்லியும் ஒன்று.

அந்தப்புரத்தில் அழகிய பெண்கள்பலர் அடிமைகளாக இருந்தாலும் அரவாணி அனந்தவவ்லிமேல் அலாவுதீன் கில்ஜிக்கு அப்படியோர் விருப்பு. அந்தப் புரத்தைவிட்டு அனந்தவல்வியுடனேயே இரவுகளைக் கழித்தான். மதத்தலைவர்கள் சிலர் சிலர் எதிர்த்தபோதும் அவன் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. அரவாணி அனந்தவவ்லியை மதம்மாற்றி மாலிக் கபூர் என்று பெயர்சூட்டினான். மாலிக் கபூர் என்று பெயர்மாற்றிய அனந்தவவ்லியை அடிமைப்படைப்பிரிவு ஒன்றிற்கு தளபதியாகவும் ஆக்கினான்.

கிடைக்காத ஒன்று கிடைத்தால் ஒருவன் தலைகால் புரியாமல் ஏதேதோ செய்வான் அல்லவா? அப்படித்தான் அரவாணி மாலிக் கபூரும் செய்தது. சிறிது நாட்களிலேயே அலாவுதீன் கில்ஜியின் படைகளிலேயே மிகவும் கொடூரமான படைப்பிரிவு என்ற நிலைக்கு வந்தது மாலிக் கபூரின் படைகள். டெல்லியில் இருந்து தெற்கு நோக்கி வந்த படைகள் வேதகிரி, வாரங்கல் என்பவற்றை சூறையாடி பல்லவ சோழ பாண்டிய நாடுகளிற்குள் புகுந்தன. சோழப் பேரரசு வாரிசுகள் இல்லாமல் வீழ்ச்சியடைந்திருந்த நேரம். எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் சதிராட்டம் ஆடியது மாலிக்கின் படைகள். காஞ்சிபுரம், சிதம்பரம், திருவரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் என்று பலநூறு கோயில்கள் இடிக்கப்பட்டு மூலவர் சிலைகள் சிதைக்கப்பட்டது. வரலாறு காணாத கொடூரத்தை பாண்டிய நாடும் சோழநாடும் எதிர்கொண்டது. பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு கொன்று தெருக்களில் வீசப்பட்டார்கள். பால்ய வயது சிறுமிகள்கூட கபூரின் படைகளால் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டார்கள். 

பின் பாண்டிய, சோழ நாடுகளில் இருந்து சுமார் 240 தொன் தங்கம் மற்றும் வைர வைடூரியங்களை 612 யானைகள் 20000 குதிரைகள் என்பவற்றில் ஏற்றி டெல்லிக்குக் கொண்டு சென்றது மாலிக்கின் படைகள்.

இத்தனை பெரிய கொடூரங்களை நிகழ்த்தி இவ்வளவு பெருஞ்செல்வத்தை கொண்டுவந்த தன் விருப்பத்திற்குரியஅரவாணி மாலிக் கபூரை ஆரத்தழுவி ஆர்ப்பரித்த அலாவுதீன் கில்ஜி, டில்லிப் படைகளின் தலைமைத்தளபதியாக்கினான் .

சிவன் சொத்து குலநாசம் என்று சொல்வார்கள் அல்லவா? அது சாதாரண வார்த்தை அல்லவே! அதேதான் இங்கும் நடந்தது. அலாவுதீன் கில்ஜி சிறிது நாட்களிலேயே உடல் முழுவதும் கொப்பளங்கள் விழ படுக்கையில் வீழ்ந்து நினைவும் அற்றுப்போனான். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய மாலிக் கபூர் அலாவுதீன் கில்ஜியின் வாரிசுகளைக் குருடாக்கிவிட்டு சுயபுத்தியில்லாத சிறுவன் ஒருவனை மன்னனாக்கி ஆளத் தொடங்கியது. 

ஆனால் மாலிக் கபூரின் ஆட்சிக்கனவும் நீண்டநாள் நிலைக்கவில்லை. சிறுவனை அரசனாக்கி ஆளத்தொடங்கிய சிலநாட்களிலேயே அரண்மனையில் உள்ளவர்களாலேயே இரவு தூங்கும் போது மாலிக் கபூர் கொல்லப்பட்டது. ஏனென்றால் சிவன் சொத்து குலநாசம் அல்லவா?

சிவ வழிபாட்டை கைவிட்ட காம்பத நாடு அழிந்தது. சிவபக்தன் சொல்கேளாமல் கர்ணதேவன் மாண்டான். சிவன்சொத்தை ஏற்ற கில்ஜி நினைவின்றிப்போனான். சிவன்சொத்தை சூறையாடிய கபூரின் வாழ்வும் வாழாமல் முடிந்தது.

சர்வம் சிவமயம்




No comments:

Post a Comment

யார் இந்த நரகாசுரன்? தீபாவளி ஏன்?

 ஏன் அவன் இறந்த நாளை தமிழர்கள் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்? மிலேச்சர்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? மிலேச்சத்தனமான த...