Saturday, 12 March 2022

ஐயப்ப வழிபாடு தவறா?- சிறுகதை (சூட்சுமானந்தா கதைகள்)

ஒருநாள் சுவாமி சூட்சுமானந்தாவின் ஆச்சிரமத்திற்கு அடியவர்கள் சிலர் கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கூலிக்கு உழைக்கும் மக்கள். ஆன்மீகத்தின் அடிப்படைகளை உணராத சாமானியர்கள். கோயிலுக்கு செல்வது, கும்பிடுவது, இறைவனிடம் அதுவேண்டும், இதுவேண்டும் என்று கேட்பது என்ற அளவில் வாழும் சராசரி மக்கள்.

வழக்கம்போல சுவாமி தனது பிரசங்கத்தை முடித்துக்கொண்டு பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். வந்திருந்த அடியவர் ஒருவர் "சுவாமி நீங்கள் எப்போதும் சிவவழிபாட்டின் பெருமைகளையே சொல்கிறீர்கள். இப்போது பலரும் ஐயப்பனை வழிபடுகின்றனர். நாம் கூட வழிபடுகிறோம். அது தவறா?" என்று கேட்டார். 

சூட்சுமானந்தா சிரித்துவிட்டு "இந்துக்களின் ஆன்மீக கதைகள், நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் வாழ்வியல் காரணம், வரலாற்று காரணம், தத்துவார்த்த காரணம் என்று பலவற்றை உள்ளடக்கி குறியீடுகளாகவே கடத்தி வந்துள்ளார்கள். அப்படித்தான் இந்த ஐயப்பன் கதையும். அந்த கதையை சொல்கிறேன் சற்று கவனமாக கேளுங்கள்" என்று சொல்லி கதையை சொல்ல ஆரம்பித்தார்.

முன்பொரு காலத்தில் மகிஷி என்ற அசுர குலத்தவள் இருந்தாள். தேவர்களையும் மானுடர்களையும் கொடுமைகள் பலபுரிந்து துன்புறுத்தி வந்தாள். அவளை யாராலும் அழிக்க முடியவில்லை. அவள் பிரம்மனிடம் வாங்கிய வரம் அவள் செய்யும் தீமைகள் அனைத்தில் இருந்தும் அழியாமல் காத்து நின்றது.

தன்னுடைய சகோதரனான மகிஷாசுரன் பார்வதி தேவியின் துர்க்கா ரூபத்தால் அழிக்கப்பட்டதால் மகிஷி சினமடைந்திருந்தாள். தன் சகோதரனின் மரணத்திற்கு காரணமான தேவர்களையும் மானுடர்களையும் அழிக்கவேண்டும் என்று சபதம் செய்து பிரம்மனை நோக்கி தவமிருந்தாள். அவள் முன் தோன்றிய பிரம்மனிடம், தனக்கு யாராலுமே மரணம் நேரக்கூடாது என்று வரங்கேட்டாள்.

அதற்கு பிரம்மனோ "பிறப்பென்று ஒன்று இருந்தால் இறப்பொன்று நிச்சயம் இருந்தே தீரும். மரணமில்லா வாழ்வு என்பது யாருக்கும் இல்லை. அந்த சர்வேஸ்வரனைத் தவிர மற்ற எல்லோரும் பிறப்பு-இறப்பு என்ற சுழற்சிக்கு உட்பட்டவர்கள்தான். நீ வேறு வரம் கேள் நான் தருகிறேன்" என்றார். மகிஷி சிறிது நேரம் யோசித்துவிட்டு "அப்படியானால் அந்த சிவனுக்கும், திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே எனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும்" என்று வரங்கேட்டாள். பிரம்மனும் "அவ்வாறே ஆகட்டும்" என்று வரத்தை அழித்துவிட்டு மறைந்துவிட்டான்.

மகிஷிக்கு ஒரே மகிழ்ச்சி. பிரம்மன் முட்டாள்தனமாக வரம்கொடுத்துவிட்டான், சிவனுக்கும் திருமாலுக்கும் எப்படி குழந்தை பிறக்கும். பிரம்மன் சிந்திக்கவே மாட்டானா என்று நினைத்தவாறு தலைகால் புரியாமல் ஆடினாள். 'இப்படி ஒரு குழந்தை பிறக்கப்போவதில்லை, அதனால் எனக்கு இனி மரணமில்லை' என்ற ஆணவத்தில் தேவர்களையும் மானிடர்களையும் கொடுமைப்படுத்தினாள். கொடுமை தாங்கமுடியாத தேவர்களும் மானுடர்களும் சர்வேஸ்வரனிடம் வேண்டி நின்றார்கள். அவர்களைக் காக்க சர்வேஸ்வரனும் திருவுளம் கொண்டார். அந்தக் கணமே திருமாலின் மோகனரூப அம்சமும், சிவாம்சமும் பொருந்தியதாக ஒரு குழந்தை பிறந்தது. மண்ணுலகில் உள்ள மகிஷியை அழிப்பதற்காக மண்ணுலகிலேயே விடப்பட்டது அந்த குழந்தை. 

மன்னன் ராஜசேகரன் பம்பா நதிக்கரையோரம் வந்துகொண்டிருந்தான். மலர்களுக்கு நடுவில் சிவாம்சமும், மோகன ரூபமும் பொருந்திய அந்தக் குழந்தை கழுத்தில் ஒளிரும் சிவமணி மாலையுடன் கிடப்பதைக் கண்ணுற்றான். குழந்தை இல்லை என்ற மனக்குறையில் இருந்தவன் இந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு சென்றான். கழுத்தில் ஒளிபொருந்திய மாலையை அணிந்தவன் என்ற பொருளில் மணிகண்டன் என்று பெயர்வைத்து வளர்த்தான்.

மணிகண்டன் அரண்மனைக்குள் சென்ற யோகம் மன்னனுக்கு அதிர்ஷ்டத்தின் மேல் அதிஷ்டம் கைகூடியது. பகைகள் விலகியது, செல்வம் பெருகியது. மன்னனும் அரசியும் சீராட்டி பாராட்டி மணிகண்டனை வளர்த்தார்கள். மணிகண்டன் வந்த ராசி, நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்த அரசியும் கருவுற்றாள். குழந்தை பிறந்ததும் மணிகண்டன் மீதான அன்பு அரசிக்கு குறைந்துவிட்டது. ஆனால், அரசனின் அன்பில் மாற்றமில்லை. குழந்தைகள் இருவரும் வளர்ந்து குமாரர்களாக ஆனார்கள். 

மன்னன் ராஜசேகரன் மணிகண்டனுக்கு முடிசூட்ட தயாரானான். அரசிக்கு அதில் விருப்பமில்லை. தன் பிள்ளையின் மகுடத்தை மணிகண்டன் பறிப்பதாய் நினைத்தாள். மந்திரிகள் சிலருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினாள். தனக்குத் தீராத நோயொன்று வந்ததாக நாடகமாடினாள். அதனைப் போக்க புலிப்பால் வேண்டும் என்று வைத்தியனையும் வஞ்சகமாக பேச வைத்தாள். அது உன்னால் மட்டுமே முடியும், சென்று புலிப்பால் கறந்து வா என்று மணிகண்டனை பணித்தாள். வஞ்சகம் தெரிந்தும் வனத்திற்கு சென்றான் மணிகண்டன்.

மணிகண்டனின் சிவ அம்சத்தை கண்டு அடவிவாழ் உயிர்கள் எல்லாம் அன்பைப் பொழிந்தன. புலிப்பால் எடுக்க வந்தவன் புலி ஒன்றில் ஏறி அரண்மனைக்கு புறப்பட்டான். புலிகள் எல்லாம் பசுக்கூட்டம்போல் அவனைப் பின்தொடர்ந்தன. புலிப்பால் எடுக்க போனவன் புலிக்கூட்டம் ஒன்றுடன் அரண்மனைக்குள் வருவதைக் கண்டு எல்லோரும் பயந்து ஓடினார்கள். தன் தவறை உணர்ந்த அரசி மணிகண்டனிடம் மன்னிக்க வேண்டினாள். அவன் கருணைக்கடலாக நின்றான், என்னிடம் பகையுணர்வே இல்லை, மன்னிப்பு எதற்கு என்றான். எதிரிக்கும் அன்பு செய்யும் அவன் கருணையின் முன்னால் அனைவரும் அடிபணிந்து நின்றனர்.

அனைவரும் சேர்ந்து அவனுக்கு முடிசூட்டி மகிழ்ந்தார்கள். முடி சூட்டு விழாவின் பின்னர் தன் பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்ற அரண்மனையில் இருந்து புறப்பட்டான்

மணிகண்டன். மகிஷியைத் தேடிச் சென்று போரிட்டான். கடுமையாகப் போர் புரிந்தவன் மகிஷியை அழுதா நதிக்கரையில் வீழ்த்தினான். தேவர்களும் மானுடர்களும் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள். ஐயனின் வீர தீர செயலைப் பாராட்டினார்கள். தம் இன்னல் களைந்து இன்பத்தை தந்த சர்வேஸ்வரனை போற்றி வணங்கினார்கள்.

இந்த நிகழ்வுகளை நன்றியுடன் நினைவு கூரும் முகமாக வருடாவருடம் ஐயப்ப கதை படித்து யாத்திரையும் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த கதையை கவனமாக கேட்டவர்கள் ஒரு உண்மையை உணர்ந்து கொள்வீர்கள். இங்கு ஐயப்பன் என்று வணங்கப்படும் மணிகண்டன் சிவ, மால் அம்சமாகக் கருதப்படுகிறது. மானுடர்கள் தேவர்கள் தம் இன்னல்களை நீக்க சிவனை வேண்டியதால் சிவனால் உண்டாக்கப்பட்டவர் என்றே கதை சொல்கிறது. ஆக இந்த கதையும் சிவ வழிபாட்டின் பெருமையை தானே சொல்கிறது என்றார் சூட்சுமானந்தா.

அப்படியானால் ஐயப்பன் வழிபாடு தவறென்று சொல்கிறீர்களா சுவாமி? என்றார் அடியவர் ஒருவர்.

"உங்களை கொல்வதற்காக கொலைவெறி பிடித்த ஒருவன் உங்களை துரத்தி வருகிறான். வீரன் ஒருவன் அம்பொன்றை எய்து அந்த கொலைவெறி பிடித்தவனை கொன்று உங்களை காப்பாற்றுகிறான். நீங்கள் இப்போது அந்த வீரனுக்கு நன்றி சொல்லி வணங்குவீர்களா? அல்லது கொலைவெறி பிடித்தவனை கொன்ற அம்பிற்கு நன்றி சொல்லி வணங்குவீர்களா?" என்றார் சுவாமி.

"சுவாமி அந்த வீரனுக்குத்தான் நன்றிகூறி வணங்குவோம்" என்று அனைவரும் ஒரே குரலில் சொன்னார்கள். 

"ம்ம்.. சரியான புரிதல். அந்த அம்பு தவறியிருந்தால் வேறோர் அம்பை எய்து உங்களைக் காத்திருப்பான் அந்த வீரன். அதனால்தான் சொல்கிறேன், இந்த ஐயப்பன் கதையிலும் சிவவழிபாடு என்பதே உயர்வாக போற்றப்படுகிறது. வீரன் எய்த அம்புக்கு ஒப்பானவன் இந்த மணிகண்டன். மணிகண்டன் என்ற அம்பை எய்த வீரன்போலத்தான் அந்த சர்வேஸ்வரன்" என்றார் சுவாமி.

"சுவாமி அப்படியானால் ஐயப்பனை வழிபாடு செய்வது, ஐயப்ப யாத்திரை செல்வது எல்லாம் தவறுதானே?"

சுவாமி மறுபடி சிரித்தார்.. "நான் தவறென்று எப்போது சொன்னேன். இந்த ஐயப்ப யாத்திரை, விரதங்கள் அனைத்தும் அந்த சம்பவத்தை நினைவுகூர்வதற்கான ஏற்பாடே. சிவனை வேண்டி நின்றவன் ஒருபோதும் கைவிடப்பட்டதில்லை. சிவன் தன்னை வேண்டி நிற்கும் மக்களை காக்க வீரபத்திரன், ஐயப்பன் என்று பலரை தோற்றுவித்துக்கொண்டே இருப்பான். வீரபத்திரன் ஐயப்பன் என்று அனைவரும் சூழ்நிலைகள் நிபந்தனைகள் என்பவற்றுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட நபர்கள்தான். மக்களின் துயரங்கள் எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் ஒரே சூழ்நிலையில் உண்டாவதில்லை. சூழ்நிலைகள் மாறும் போதும் மக்களைக் காப்பதற்காக சர்வேஸ்வரன் புதிது புதிதாக ஒவ்வொருவரை தோற்றுவித்துக்கொண்டே இருப்பார் என்பதே சரியான புரிதல்"

"நீங்கள் அம்பை போற்றலாம், ஆனால் எய்தவனை மறந்துவிடக்கூடாது, ஐயப்ப விரதம், யாத்திரை என்று செல்லும் போது சிவத்தை மறந்துவிடக்கூடாது"

சுவாமி சொன்ன வார்த்தைகள் அவர்களுக்கு பசுமரத்தாணி போல் பதிந்தது.

"சுவாமி இன்னொரு நாள் இந்த ஐயப்பன் கதையின் ஆன்மீக தத்துவத்தை விளக்கவேண்டும்" என்ற வேண்டுகோளுடன் விடைபெற்றார்கள். 

அவர்களுக்கு இப்போது ஆன்மீகம் பற்றிய தேடலும் உண்டாகிவிட்டது.

சர்வம் சிவமயம்



No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...