Sunday, 24 April 2022

ஈழத்தில் உருவான சோழவம்சம்- வரலாற்றுக் கதை

எட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் திசையுக்கிர சோழன் எனும் சிற்றரசன் உறையூரை ஆண்டுவந்தான். ஒருகாலத்தில் பேரரசாக விளங்கிய சோழர்கள் அன்று சிற்றரசர்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள். பல்லவ மன்னர்களின் தயவில் ஆட்சி செய்தார்கள். ஆனால் அது கூட இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களை வாட்டியது. தம் சோழ வம்சமே அழிந்துவிடுமோ என்று சோகத்தில் மூழ்கினார்கள்.

உக்கிர சோழனுக்கு ஒரேயொரு மகள். பெயர் மாருதப்புரவீகவல்லி. அழகும், அறிவும் பொருந்திய வீரமிகு பெண்ணாக வளர்ந்து வந்தாள். மன்னன் மட்டுமல்லாமல் மக்களும் அவளைப் பார்த்து மகிழ்ந்தார்கள். அந்த மகிழ்ச்சி நீண்டநாள் நிலைக்கவில்லை. குன்மநோய் அவளைப் பற்றிப் பிடித்தது. குன்மத்தால் உண்டான கூனல், அதனால் உண்டான முகச்சிதைவு என்று அவளின் உடல் கூனி முகம் குதிரை போல் ஆகிவிட்டது. அவளின் அவலட்சணமான தோற்றத்தை கண்டு அரசகுமாரர்கள் எவரும் மணமுடிக்க மறுத்தனர். வம்சத்தின் ஒரேயொரு வாரிசும் உருக்குலைந்து போனது, மணவயதைத் தொட்டும் மணமுடிப்பார் யாருமில்லை; நாடே வருந்தியது.

பேரரசை இழந்து சிற்றரசாய் ஆனோம். இன்று வம்சத்தையும் இழக்கும் நிலைக்கு ஆளாகினோம். சோழ வம்சத்திற்கு ஏனிந்த துயரம் என்று வருந்தினான் திசையுக்கிர சோழன். சோழ நாட்டின் புகழ்பெற்ற வைத்தியர்கள் அனைவரும் முயற்சித்து பார்த்துவிட்டார்கள், ஆனால் யாராலும் அவளது நோயை நீக்க முடியவில்லை. துயரம் தோய்த்த மன்னனின் முகத்தை மந்திரியால் பார்க்க முடியவில்லை. மன்னனின் துயர்தீர்க்க சங்கல்பம் பூண்டார் மந்திரியார். கருவூரார் பரம்பரையில் வந்த சித்தர் சாந்தலிங்கனை அரண்மனைக்கு அழைத்து வந்தார். 

இளவரசியின் நாடி பிடித்துப் பார்த்த சித்தர் கண்களை மூடி கருத்தேற்றி விட்டு "இது வெறும் குன்மமில்லை, பூர்வ ஜென்ம பாபத்தால் உணடான சாபமும் சேர்ந்தே உள்ளது. பத்தியமும், வைத்தியமும் பாதிக்குத்தான் பலனளிக்கும், பரிகாரம் ஒன்றே பூரணமாய் போக்கும்" என்றார். எதைத் தின்றால் பித்தம் தீரும் என்ற நிலையில் இருந்த மன்னன் "எதுவானாலும் சொல்லுங்கள் சுவாமி! செய்கின்றோம்" என்றான். 

"உண்டான நோய்க்கு ஒரு மண்டலம் மருந்து, தினம் கீரிமலை சென்று நன்னீர் ஊற்றில் நீராடி, ஈஸ்வரரை வணங்கி பின் பத்தியம் தவறாமல் மருந்துண்டுவர குன்மமும் நீங்கும், கூன் நிமிர்ந்து குதிரையும் மறையும்" என்றார். சோழ வம்சத்தில் வந்தவனுக்கு கடல் கடந்து செல்வது கடினமா என்ன? இளவரசியும், தோழிகளும் புறப்பட தயாரானார்கள். அழைத்துச் செல்ல விசுவாசப் படைகளும் கடல் கடக்க நாவாய்களும் தயாராயின. இதுவரை வாரிசு இல்லாமல் போய்விடும் என்று கவலைப்பட்டவனுக்கு, அந்த கவலைபோய் நம்பிக்கை பிறந்துவிட்டது. எத்தனையோ வைத்தியம், எத்தனையோ பரிகாரம் என்று செய்தபோது இல்லாத நம்பிக்கை இப்போது தோன்றியது. சித்தரின் தீர்க்கமான வார்த்தைகளை மன்னனும் முழுமையாக நம்பினான்.

நம்பிக்கை கடந்து அவனுக்கு ஆசையும் பிறந்துவிட்டது. இப்போது மறுபடியும் சோழப் பேரரசை அமைக்க ஆசைப்பட்டான். மனிதனின் ஆசைக்குத்தான் அளவு இல்லையே. "சுவாமி கீரிமலை சென்று நகுலேஸ்வரரை வணங்கி நன்னீர் ஊற்றில் நீராடினால் எம் சோழ வம்சத்தின் ஜென்ம சாபம் தீர்ந்துவிடுமா? நாம் மீண்டும் பேரரசு அமைப்போமா?" என்று ஆர்வமாக கேட்டான் திசையுக்கிர சோழன். புன்னகைத்தார் சித்தர். "ஈசனின் பாதத்தை இறுகப் பற்று, குமரியைத்தேடி குமாரன் வருவான், குமரியைப் பற்றுமிடம் குமரனுக்கு கோயில் அமை, குன்றிருக்கும் குமரன் குலங்காப்பான் " என்று சொல்லிவிட்டு புறப்பட்டு போய்விட்டார். மன்னனுக்கு முழுவதும் புரியவில்லை, ஆனாலும் உரிய நேரத்தில் எல்லாம் புரியும் என்ற நம்பிக்கையில் தலையசைத்தான்.

யாழ்ப்பாணம் செல்லும் பணிகள் பரபரப்பாக நடந்தது. அது ஒரு காலத்தில் சோழநாட்டின் அங்கம் என்றாலும்; கடல்கடந்த பகுதி. சித்தரின் குடிலில் இருந்து மருந்துப் பொருட்கள் வந்தன. தோழிகள், பணியாட்கள் விசுவாச படைகள் சூழ இளவரசி புறப்பட்டாள். கோடியாக்ரையில் புறப்பட்ட நாவாய்கள் கீரிமலைக்கரையில் கரையொதுங்கின. 

கீரிமலையை அண்மித்த ஒரு பாதுகாப்பான பகுதியில் குடிலமைத்தார்கள். இளவரசி, தோழிகள், பணியாட்கள் என்று அனைவரும் படைகளின் காவலில் தங்கினார்கள். இங்கிருந்துதான் இளவரசி தினமும் ஆலயம் சென்று வந்தாள். அதிகாலையில் எழுந்து கீரிமலை நன்னீர் தீர்த்தத்தில் நீராடி நகுலேஸ்வரரை, நகுலாம்பிகையை வணங்கி பத்தியம் தவறாமல் மருந்துண்டு வந்தாள். ஓரிரு நாட்களிலேயே மாற்றம் தெரிந்தது. சிறிது நாட்களிலேயே அவள் பிணி முழுவதுமாக நீங்கியது. கூன் மறைந்தது. குதிரை முகம் நீங்கி பேரெழில் பெற்றாள்.

சோழ இளவரசி குதிரை முகம் மறைந்து பேரெழில் பெற்ற செய்தி உறையூருக்கு அனுப்பப்பட்டது. மன்னனும் மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள். செய்தி கேட்ட மன்னன், நகுலேஸ்வரனின் பாதம் பணிய ஈழம் நோக்கிப் புறப்பட்டான். 

சோழ மன்னன் புறப்பட்ட அதே நேரத்தில் கதிரமலை இளவரசன் காங்கேயனும் நகுலேஸ்வரரை வணங்குவதற்காக கீரிமலை நோக்கி வந்தான். கீரிமலை செல்லும் வழியில் பேரழகியாக தோன்றிய மாருதப்புரவீகவல்லியை கண்டான். கண்டதும் இருவரும் காதல் கொண்டார்கள். இருவரும் ஒருவர் மனதை ஒருவர் இறுகப் பற்றினார்கள். காதல் மயக்கத்தில் இருவரும் களித்திருந்த அந்நேரம், திசையுக்கிர சோழனும் வந்து சேர்ந்தான். இருவர் காதலுக்கும் சம்மதம் தெரிவித்தான். ஈஸ்வரன் பாதத்தை பணிந்து பற்றினான்; ஈசனின் முன்னிலையில் இருவருக்கும் கோலாகலமாக மணமுடித்து வைத்தான். 

சித்தர் சொன்னது திசையுக்கிர சோழனின் நினைவில் வந்தது. "ஈசனின் பாதத்தை இறுகப் பற்று. குமரியைத் தேடி குமாரன் வருவான். குமரிமைப் பற்றுமிடம் குமரனுக்கு கோயில் அமை. குன்றிருக்கும் குமரன் குலங்காப்பான்" வசனங்கள் மறுபடி ஒலித்தது.அந்த வார்த்தைகளின் அர்த்தம் அப்போதுதான் முழுமையாக புரிந்தது. சோழ இளவரசியை கதிரமலை இளவரசன் காங்கேயன் மனம்பற்றிய இடத்தில் சிறிய முருகன் ஆலயம் ஒன்று இருந்தது. பல்லாயிரம் வருடங்கள் பழைமையான கோயில் அது. அந்த ஆலயத்தையே பெரிதாக கட்டுவதற்கு முடிவெடுத்தான் சோழன். கதிரமலை இளவரசன் இப்போது சோழ இளவரசன் ஆனான். காங்கேயனும்,சோழ இளவரசியும் அங்கேயே தங்கி ஆலயம் அமைக்கும் பணிகளை கவனிக்க சோழ மன்னன் உறையூருக்கு திரும்பினான். கோயிலுக்கு தேவையான சிற்பங்கள், விக்கிரகங்கள், ஆபரணங்கள் அனைத்தையும் அங்கிருந்தே ஈழத்திற்கு அனுப்பினான். அழகிய ஆலயம் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டது. 

அவ்வாறு சோழன் அனுப்பிய பெரிய கலங்கள் கீரிமலை கடலில் கரையொதுங்க ஒதுங்கமுடியாமல் நின்றது. அதனால் கீரிமலை அருகில் உள்ள சற்று ஆழமான கடற்பகுதியில் பனை மரங்கள், சுண்ணாம்புக் கற்கள் என்பவற்றை கொண்டு இறங்கு துறை ஒன்றை அமைத்தான் காங்கேயன். காங்கேயன் அமைத்த துறை என்பதால் பின்னாளில் அது காங்கேசன்துறை என்றே பெயர் பெற்றது. 

கதிரமலை மன்னனும், சோழ இளவரசியும் மனம்பற்றிய இடம் அவர்களின் காதலின் அடையாளமாகவும், சோழ வம்சத்தின் ஜென்ம சாபத்தை நீக்கி பேரரசை நிறுவும் பரிகார தலமாகவும் அமைந்தது. ஆலயம் அமைக்க ஆரம்பித்த சிலகாலத்திற்குள் அவர்கள் காதலின் அடையாளமாக ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. மனோகரன் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டார்கள். ஆலய பணிகள் பூர்த்தி அடைந்து கும்ப அபிஷேகமும் நடந்தது(பொ.ஆ 789, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்). பின்னர் இருவரும் திசையுக்கிர சோழனுடன் உறையூருக்கு திரும்பினார்கள். உறையூர் திரும்பிய சிறிது காலத்தில் திசையுக்கிரன் இறந்துவிட்டான். சோழ வம்சத்தில் வராத காங்கேயன் அரியணையில் அமரமுடியாது. அதனால் ஆட்சிப் பொறுப்பு மனோகரன் வசமானது(பொ.ஆ 790). பால்ய வயதிலேயே பட்டது அரசனானான். ஸ்ரீ காந்த ஸ்ரீ மனோகர சோழன் என்னும் பட்டத்து பெயரில் பலகாலம் ஆண்டான்(பொ.ஆ790-848) பாலகன் வளர்ந்து பதின்ம வயதை எட்டினான். காங்கேயனும் மாருதப்புரவீகவல்லியும் அவனுக்கு மணம்முடித்து வைத்தார்கள். சோழப் பேரரசை நிறுவப்போகும் வாரிசை அவன் மனைவிதான் சுமந்தாள். விஜயாலய சோழன் பிறந்தான். சோழப் பேரரசை நிறுவும் முயற்சி அவனிடம் இருந்து ஆரம்பமானது.

விஜயாலயன் காலத்தில் தஞ்சை நெஞ்சை நிமிர்த்தியது. மீண்டும் புலிக்கொடி வானில் பறந்தது. வானத்தில் தோன்றும் இருள் நிரந்தரமாக நிற்பதில்லை, அது என்றேனும் விலகி ஒளி கொடுக்கும் என்பதை உலகுக்கு உணர்த்தினான். 

சோழ வம்சத்தின் இன்னோர் அத்தியாயம் ஆரம்பமானது...

வரலாற்று குறிப்புகள்:

கதிரமலை என்பது இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சுண்ணாகம் பகுதியை சுற்றியுள்ள பகுதியாகும். கந்தரோடை என்று இன்று அழைக்கப்படுகிறது.

கீரிமலை என்பது இலங்கையின் யாழ்ப்பாண வடகோடியில் உள்ளது. பஞ்ச ஈச்சரங்களில் ஒன்று. 

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் என்று அழைக்கப்படும் ஆலயமே மாருதப்புரவீகவல்லி குன்மமும் குதிரை முகமும் நீங்கிய ஆலயம். கீரிமலை ஆலயத்திற்கு 3.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.


கீரிமலை நகுலேஸ்வர தலபுராணம்

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தலபுராணம்

யாழ்ப்பாண வைபவமாலை

தட்சிண கைலாச புராணம்

நகுலமலைச்சதகம்

சோழர் வரலாறு

சித்தர்களின் வாழ்க்கை குறிப்புகள் என்பவற்றை தழுவி எழுதப்பட்டது


No comments:

Post a Comment

யார் இந்த முலாட்டோக்கள்?

 #முலாட்டோக்கள் #Mulattos இது என்ன புதிதாக இருக்கிறது என்று யாரும் யோசிக்க வேண்டாம். இது ஒரு இனக்குழுவை (கலப்பு) குறிக்கும் பெயர். நீங்கள் எ...